[X] Close

'நாங்கள் மோசமான நிலைக்கு வந்துட்டோம்': விராட் கோலி வேதனை


  • kamadenu
  • Posted: 03 Apr, 2019 13:07 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

நாங்கள் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமான நிலைக்கு வந்துவிட்டோம், அடுத்துவரும் போட்டிகளில் மீண்டெழுந்து வருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி வேதனை தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் நேற்று ஐபிஎல் சீசனின் 14-வது லீக் ஆட்டம் நடந்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. 159 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு பந்து மீதமிருக்கும் நிலையில் இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி தொடர்ந்து சந்திக்கும் 4-வது தோல்வியாகும். ஐபிஎல் வரலாற்றில், ஆர்சிபி அணி தொடர்ந்து இதுபோல் தோல்விகளைச் சந்தித்தே இல்லை. போட்டி முடிந்தபின் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோல்வி அடைந்து மோசமான நிலைக்கு சென்றுவிட்டோம். ஆனால், அடுத்து வரும் போட்டிகளில் நாங்கள் எங்களைச் சுற்றி இருக்கும் காரணிகளை மாற்றி மீண்டெழுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

இந்த போட்டியில் நல்ல தொடக்கத்தை அளிக்கவும் தவறியதுதான் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளிவிட்டது. ஆனால், மும்பையில் நடந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக ஆடினோம், ஆனால்,இங்கு விளையாடிய ஆட்டத்தைப் பார்க்கையில், இன்னும் நாங்கள் முன்னேற்றம் காணவேண்டியது அவசியம், நம்பிக்கை அளவிலும் வளர்ச்சி காண வேண்டும்.

இந்த ஐபிஎல் சீசன் நீண்டநாட்கள் நடத்தப்படவில்லை, ஆதலால், அடுத்து வரும் போட்டிகளையும், ஏற்கனவே நாங்கள் கடந்து வந்த போட்டிகளையும் கணக்கிட்டு அணிக்கு சரியாகப் பொருந்தக்கூடிய 11 வீரர்களைத் தேர்வு செய்வது அவசியம்.

அணியின் நிர்வாகிகளுடனும், பயிற்சியாளர்களுடனும் அமர்ந்து பேசி, விளையாடும் 11 பேர் கொண்ட சிறந்த அணியை அடுத்துவரும் போட்டிகளுக்குத்  தேர்வு செய்வேன். பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என அனைத்து விதங்களிலும் சரசமமான கலவை கொண்ட வீரர்களை தேர்வு செய்ய இருக்கிறோம், அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெறுவது அவசியம்.

ராஜஸ்தான்அணிக்கு எதிராக போட்டியை கடினமாகத் தான் கொண்டு சென்றாலும், இன்னும் 20 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால், போட்டி எங்கள் பக்கம் திரும்பி இருக்கும். இரவுநேரத்தில் பனிவிழுந்ததும் பந்துவீச்சில் தொய்வு ஏற்பட காரணமாகும்.

நாங்களும் ரஹானே, பட்லருக்கு கேட்சுகளை கோட்டைவிட்டு தவறவிட்டோம். அதை தவிர்த்திருந்தால் போட்டி முடிவு  மாறி இருக்கும்.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close