[X] Close

இந்திய டி20 வரலாற்றில் சுரேஷ் ரெய்னா புதிய சாதனை: சில சுவாரஸ்ய தகவல்கள்


20

  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 11:41 am
  • அ+ அ-

-Vilangiah

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா இந்திய டி20 வரலாற்றில் நேற்று வரலாற்று சாதனை படைத்தார். இந்தச் சாதனையைப் படைத்த முதல் இந்திய வீரர் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது.

12-வது ஐபிஎல் டி20 போட்டிகள் நடந்து வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. 176 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே சேர்த்து 8 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் ரெய்னா 36 ரன்கள் சேர்த்த நிலையில் உனட்கட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ரெய்னாவால் ஜொலிக்க முடியாவிட்டாலும், இந்திய டி20 அரங்கில் நேற்று ரெய்னா ஒளிர்ந்து, புதிய வரலாறு படைத்தார்.

ரெய்னா 36 ரன்கள் அடித்தபோது, இந்தியாவில் நடந்த டி20 போட்டிகளில் மொத்தம் 6 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

டி20 போட்டிகளைப் பொறுத்தவரை சுரேஷ் ரெய்னா இதுவரை ஒட்டுமொத்தமாக 288 இன்னிங்ஸ்களில் விளையாடி 8,058 ரன்கள் சேர்த்துள்ளார்.

இதில் ஐபிஎல் போட்டிகளில் 179 போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா சிஎஸ்கே அணிக்காக மட்டும் 150 போட்டிகளில் விளையாடியுள்ளார். சமீபத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, ரெய்னா, ஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை சுரேஷ் ரெய்னா 175 போட்டிகளில் 5,070 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் சராசரி 34.75 ஆகும். இதில் மீதமுள்ள 1,605 ரன்கள் இந்தியாவுக்காக விளையாடியபோது ரெய்னா எடுத்துள்ளார்.

Raina1.jpeg 

சில சுவாரஸ்ய தகவல்கள்

1. சென்னை சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 6-வது வெற்றியை நேற்று சிஎஸ்கே அணி  பெற்றது.

2. ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி கடைசியாக தான் விளையாடிய போட்டிகளில் தொடர்ந்து 6-வது வெற்றியை சிஎஸ்கே அணி நேற்று பதிவு செய்தது. கடந்த ஐபிஎல் தொடரில் கடைசியாக 3 வெற்றிகளும், இந்தத் தொடரில் 3 வெற்றிகளும் அடங்கும்.

3. சிஎஸ்கே அணிக்காக சுரேஷ் ரெய்னா நேற்று 150-வது போட்டியில் களமிறங்கினார். சிஎஸ்கே அணிக்காக அதிகமான போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றைய ஆட்டம் ரெய்னாவுக்கு 50-வது போட்டியாகும்.

4. ராஜஸ்தான்  ராயல்ஸ் வீரர் சஞ்சு சாம்ஸன் ஐபிஎல் போட்டியில் 2 ஆயிரம் ரன்களை நேற்று எட்டினார். இதன் மூலம் ஐபிஎல் போட்டியில் மிகக்குறைந்த வயதில் 24 வயது 130 நாட்களில் இந்தச் சாதனையை சாம்ஸன் செய்துள்ளார். இதற்கு முன், விராட் கோலி 24 வயது 175 நாட்களில் செய்திருந்தார்.

5. சிஎஸ்கே கேப்டன் தோனி நேற்று 75 ரன்கள் சேர்த்தது. ஐபிஎல் போட்டியில் தோனியின் 2-வது மிக உயர்ந்தபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்காக கடந்த சீசனில் 79 ரன்கள் தோனி சேர்த்திருந்ததே அதிகபட்சமாகும்.

6. ஐபிஎல் போட்டிகளில் 20-வது ஓவரில் மட்டும் தோனி 503 ரன்கள் சேர்த்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close