[X] Close

“கம்பீரை கழற்றிவிட்ட” ஸ்ரேயாஸ் தலைமைக்கு முதல் வெற்றி: கொல்கத்தாவை கிழித்தெறிந்தது டெல்லி


twitterati-applauds-shreyas-iyer-s-impressive-captaincy-debut-against-kkr

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்

  • போத்திராஜ்
  • Posted: 28 Apr, 2018 01:43 am
  • அ+ அ-

டெல்லி,

ஸ்ரேயாஸ், பிரித்திவ் ஷா ஆகியோரின் முரட்டுத்தனமான பேட்டிங் மூலம் டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 26-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 55 ரன்கள் விரட்டி அபாரவெற்றி பெற்றது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.

டெல்லி அணிக்கு இந்த சீசனுக்கு முதல்முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்ட கம்பீர் தலைமைக்கு ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி கிடைத்தது. அதன்பின் நடந்த 5 போட்டிகளிலும் கிடைத்த தோல்வியால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்து, சம்பளம் இல்லாமல் மீதமுள்ள போட்டியில் விளையாடுவேன் எனத் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், அணிக்கு அடுத்த கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யரையும் பரிந்துரை செய்தார் கம்பீர்.

தெரியாம சொல்லிட்டோமோ என்று கம்பீர் யோசிக்கும் அளவுக்கு இந்த போட்டியில் கம்பீர் நீக்கப்பட்டார்.  அணியின் தோல்வியை கண்டுபிடிப்பதுதான் சரியான தலைமைக்கு அழகு .தான் கேப்டன் பதவிக்கு வந்ததும் முதல் வேலையாக கம்பீரை கழற்றிவிட்டார் ஸ்ரேயாஸ் அய்யர். இதை கம்பீரே எதிர்பார்த்திருக்கமாட்டார். ஒருவேளை கம்பீரை விருப்பப்பட்டு ஓய்வில் இருந்தாரா என்பதும் தெரியவில்லை.

ஆனால், கம்பீர் இல்லாத தலைமைக்கு கிடைத்த வெற்றி தொடர அணி நிர்வாகம் விரும்பினால், வரும் போட்டிகளில் கம்பீர் நிலைமை பரிதாபமே. அதுமட்டுமல்லாமல் கடந்த 5 போட்டிகளிலும் டெல்லி அணி விளையாடிய உற்சாகத்துக்கும், நேற்றைய போட்டியில் வீரர்கள் காட்டிய உற்சாகத்துக்கும், கூட்டுழைப்பும் அதிகமாகவே இருந்தது. இது ஒருவேளை கம்பீரை நிரந்திரமாக இந்த தொடர் முழுவதும் ஓய்வில் அமரவைக்கும் முடிவா என்பது போகப்போகத் தெரியும்.  

44 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்த இளம்வீரர் பிரிதிவ் ஷாவின் மின்னல்வேக ஷாட்கள், 40பந்துகளில் 93 ரன்கள் சேர்த்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரின் காட்டடி பேட்டிங் ஆகியவை அணியின் ஸ்கோர் 200 ரன்களுக்கு மேல் உயர்வதற்கு முக்கியக் காரணமாகும். இதில் ஸ்ரேயாஸ் மட்டும் 10 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடித்துள்ளார். தன்னுடைய தலைமையில் முதல் வெற்றி கிடைத்த ஸ்ரேயாஸ் அய்யருக்கே  ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

டெல்லி அணி 219 ரன்கள் சேர்த்தபோதே கொல்கத்தா அணி வீரர்களுக்கு தொடை நடுங்கிவிட்டது. தொடக்கத்தில் இருந்தே ரன் சேர்க்கவேண்டும் என்ற பதற்றம் களமிறங்கிய அனைத்து வீரர்களுக்கும் இருந்தது. விளைவு விரைவாக விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தொட்டார்கள்.

பந்துவீச்சிலும் ஆஸ்திரேலியாவின் அனுபவ வீரர் மிட்ஷெல் ஜான்சன், குல்தீப் யாதவ், ரஸல் ஆகியோர் இருந்தும் ரன்களை வாரி வழங்கிவிட்டார்கள். அதிலும் சிவம் மவி ஓவரை வறுத்துஎடுத்துவிட்டார்கள். பேட்டிங்கிலும் ரஸல் மட்டும் அதிரடியாக பேட் செய்யாமல் இருந்திருந்தால் கொல்கத்தா நிலை அதோகதிதான்

இந்த வெற்றி மூலம் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள், 5 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 7 போட்டிகளில் விளையாடி 4 தோல்விகள், 3 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் உள்ளது.

டாஸ்வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கார்த்தி பீல்டிங் செய்ய தீர்மானித்தார். டெல்லி அணியில் கம்பீருக்கு பதிலாக முன்ரோவும், கொல்கத்தா அணியில் டாம் குர்ரனுக்கு பதிலாக மிட்ஷெல் ஜான்சனும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

முதலில் பேட் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. 220 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டும் சேர்த்து தோல்வி அடைந்தது.

பிரித்திவ் ஷா. முன்ரோ களமிறங்கினார்கள். பியூஸ்சாவ்லா வீசிய முதல்ஓவரில் 3 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. குல்தீப் வீசிய 2-வது ஓவரில் முன்ரோ ஒருசிக்ஸர் பறக்கவிட்டார். ஆனால்,3-வது ஓவரை சாவ்லா மீண்டும் வீச பந்துபோது, அவரின் பந்துவீச்சில் 4 பவுண்டரிகள் அடித்து ஷா பொறித்து எடுத்துவிட்டார்.

4-வது ஓவரை மவி வீசினார். இந்த ஓவரில் முன்ரோவும், ஷாவும் தலா ஒருபவுண்டரி அடித்தனர். நரேன் வீசிய 5-வது ஓவரில் முன்ரோ ஒருசிக்ஸர், பவுண்டரிக்கு பந்தை விரட்டி ரன்ரேட்டை உயர்த்தினார். ஜான்சன் ஓவரில் ஷா ஒருபவுண்டரி அடித்தார். டெல்லி அணி பவர்ப்ளேயில் 57 ரன்கள் சேர்த்தது.

மவி வீசிய 7-வது ஓவரில் முன்ரோ 33 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 59 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார்.  ஜான்சன் வீசிய 9-வது  ஓவரில் ஷா ஒருபவுண்டரியும், சிக்ஸரும் பறக்கவிட்டு மிரட்டல்விடுத்தார்.

பிரிதிவ் ஷாவை ஆட்டமிழக்கச் செய்ய கார்த்திக் அணியில் இருக்கும் பந்துவீச்சாளர்கள் அனைவரையும் பயன்படுத்தியும் ஷாவை ஆட்டமிழக்கச் செய்யமுடியில்லை. 11-வது ஓவரை ரஸல் வீசினார். இந்த ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்து 38 பந்துகளில் அரைசதம் எட்டினார் ஷா.

அதன்பின் ஸ்ரேயாஸ் அய்யர் மெல்ல அதிரடியைத் தொடங்கினார். குல்தீப் வீசிய 12-வது ஓவரில் ஒருசிக்ஸர் தெறிக்கவிட்டார். ஜான்சன் வீசிய 13-வது ஓவரில் ஸ்ரேயாஸ் ஒரு பவுண்டரியும், ஷா ஒரு சிக்ஸரும் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார்கள்.

சாவ்லா மீண்டும் பந்துவீச அழைக்கப்பட்டார். முதல் பந்தில் ஸ்ரேயாஸ் சிக்ஸர் அடித்தார் ஆனால், கடைசிப்பந்தில் பிரிதிவ் ஷா போல்டாகி வி்க்கெட்டை பறிகொடுத்தார். 44 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து ஷா ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.2-வது விக்கெட்டுக்கு இருவரும் 68 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்துவந்த ரிஸ்பா பந்த் ரன் ஏதும் சேர்க்காமல் ரஸல் வீசிய 15-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ஸ்ரேயாஸ்  ஒரபவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். அதன்பின் ஸ்ரேயாஸ் தனது காட்டடி பேட்டிங்கைத் தொடங்கினார். அவருக்கு உறுதுணையாக மேக்ஸ்வெல் பேட் செய்தார்.

சிவம் மவி வீசிய 17-வது ஓவரில் இரு சிக்ஸர்கள் அடித்து 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். நரேன் வீசிய 18-வது ஓவரில் மேக்ஸ்வெலும், ஸ்ரேயாஸும் ஆளுக்கொரு சிக்ஸர்கள் பறக்கவிட்டனர். ஜான்சன் வீசிய 19-வது ஓவரில் மேக்ஸ்வெல் ஒருசிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார். ஆஸ்தரேலியாவில் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தும் ஜான்சனின் பந்துவீச்சை இந்த போட்டியில் தெறிக்கவிட்டனர்.

மவி வீசிய  கடைசி ஓவரை ஸ்ரேயாஸ் நொறுக்கி எடுத்துவிட்டார். முதல் இரு பந்துகளிலும் இரு சிக்ஸர்கள் அடிக்க 3-வது பந்தில் மேக்ஸ்வெல் ரன்அவுட் ஆகினார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 71 ரன்கள் சேர்த்தனர்

4-வது பந்தில் ஸ்ரேயாஸ் ஒரு சிக்ஸர், 5-வது பந்தில் பவுண்டரி, 6-வது பந்தில் மீண்டும் சிக்ஸர் அடித்து தெறிக்கவி்ட்டார்.

20 ஓவர்கள் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 219ரன்கள் சேர்த்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 93 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்ரேயாஸ், மேக்ஸ்வெல் காட்டடியில் கடைசி 4 ஓவர்களில் மட்டும் 76 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா தரப்பில் சாவ்லா, மவி, ரஸல் தலா ஒருவிக்கெட்டை விழ்த்தினார்கள்.

220 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் கொல்கத்தா அணியின் கிறிஸ் லின், நரேன் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். இருவரும் ரன் சேர்க்க வேண்டும் என்ற பதற்றத்தில் விளையாடியதால் விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். மேக்ஸ்வெல் வீசிய 2-வது ஓவரில் நரேன் ஒரு சிக்ஸரும், பவுண்டரியும் விளாச, லின் 5 ரன்களில் போல்டாகி வெளியேறினார்.

போல்ட் வீசிய 3-வது ஓவரின் முதல்பந்திலேயே உத்தப்பா வந்தவேகத்தில் டக்அவுட்டாகி வெளியேறினார். அந்த ஓவரி்ல் நரேன் 2 சிக்ஸர்கள் அடித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். நரேன் 9 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி என 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த ராணா(8), கேப்டன் கார்த்திக் (18), கில்(37), மவி(0), சாவ்லா(2) என விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். கடினமான இலக்காக இருக்கும் நிலையில் வலுவான பாட்னர்ஷிப் அமைத்தாலே ஓரளவுக்கு வெற்றியை நெருங்கிவிடலாம். ஆனால், கொல்கத்தாவில் பாட்னர்ஷிப் அமையாததே தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

கடைசியில் அதிரடி ஆட்டிய ரஸல் 30 பந்துகளில் 44ரன்கள்(4சிக்ஸர்கள்,3பவுண்டரிகள்) சேர்த்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்து 55 ரன்களில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது.

டெல்லி அணியில் போல்ட், ஆவேஷ்கான், மிஸ்ரா, மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close