[X] Close

“டேஞ்சர்” டிவில்லியர்ஸ் “ஹீரோ”: டெல்லியை விரட்டிய விராட் அணி


ab-de-villiers-smashes-dd-to-pulp-rcb-win-by-6-wickets

பெங்களூரு அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த டீவில்லியர்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய காட்சி

  • போத்திராஜ்
  • Posted: 22 Apr, 2018 01:37 am
  • அ+ அ-

டிவில்லியர்ஸின் டேஞ்சரான பேட்டிங்கால், பெங்களூருவில் நேற்று நடந்த ஐபில் போட்டியின் 19-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் விரட்டியது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

டிவில்லியர்ஸ் மிரட்டலான,அற்புதமான பேட்டிங் மட்டுமே சேஸிங்கில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்று கூறலாம்.

அதிரடி பேட்டிங்ன்னா… இதுதான் என்று சொல்லும் அளவுக்கு டிவில்லியர்ஸ் டெல்லி வீரர்களின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்துவிட்டார். 39 பந்துகளைக் சந்தித்த டிவில்லியர்ஸ் 90 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும். ஆட்டநாயகன் விருதையும் டிவில்லியர்ஸ் பெற்றார்.

ஒருகட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து, விராட் கோலியை இழந்து அணி தடுமாறியபோது, அதிரடியாக பேட்டிங் செய்து டிவில்லியர்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துவந்தார்.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3 தோல்விகள், 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்றுபட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி 4 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

பெங்களூரு சின்னச்சாமி அரங்கில் இந்த போட்டி நடந்தது. அரங்கு நிரம்பும் அளவுக்கு பெங்களூரு அணிக்கு ஆதரவாக ரசிகர்கள் குழுமியிருந்தனர். டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. 175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடனஅ களமிறங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

டெல்லி அணியின் கேப்டன் கம்பீர், ஜேசன் ராய் ஆட்டத்தை தொடங்கினார்கள். உமேஷ் யாதவும், கிறிஸ் வோக்ஸும் சேர்ந்து கம்பீருக்கு படம் காட்டிவிட்டார்கள். ஒருபந்தைக் கூட கம்பீர் பேட்டில் வாங்கவில்லை. பந்து அருமையாக ஸ்விங் ஆனது .வயதாகிவிட்டால், அணியில் இருந்து கவுரமாக விலகிவிடுவதே கம்பீருக்கு அழகு,. அடுத்த ஐபிஎல் போட்டிக்கு கம்பீர் தேர்வு செய்யப்படுவாரா என்ற சந்தேகத்தை பேட்டிங் உண்டாக்கிவிட்டது.

. உமேஷ்யாதவ் ஓவருக்கு நடுங்கிய கம்பீர் அவர் வீசிய 3-வது ஓவரில் 3 ரன்களில் சாஹலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடந்த 5 போட்டிகளிலும் கம்பீர் ஒருபோட்டியில் கூட உருப்படியான ஸ்கோர் செய்யவில்லை. அவரின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது.

அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கி, ஜேஸன் ராயுடன் இணைந்தார். உமேஷ் யாதவ் வீசிய 5வது ஓவரில் ஸ்ரேயாஸ் 2 பவுண்டரிகள் அடித்தார். சுழற்பந்துவீச்சை கொண்டுவந்த கோலியின் கேப்டன்ஷிப்புக்கு நல்ல பலன் கிடைத்து. சாஹல் வீசிய முதல்ஓவரிலேயே ராய் 5 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இரு முக்கியவிக்கெட்டுகள் வீழ்ந்தவுடனே டெல்லிக்கு ரன் சேர்ப்பதில் பெரிய நெருக்கடி ஏற்பட்டது. தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்துடெல்லி திணறியது. பவர்ப்ளேயில் 28 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கடந்த 19 போட்டிகளில் பவர்ப்ளேயில் ஒரு அணி சேர்த்த மிகக்குறைந்தபட்சம் இதுவாகும்.

அடுத்து வந்த ரிஸ்பா பந்த், ஸ்ரேயாஸ் அய்யருடன் இணைந்தார். இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். அவ்வப்போது இருவரும் சில பவுண்டரிகள் ரன்ரேட்டை மெல்ல உயர்த்தினார்கள்.

சிராஜ் வீசிய 13-வது ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு சிக்ஸர், பவுண்டரி அடித்து ரன்களைச் சேர்த்தார். அடுத்த ஓவரில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை அடித்து 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்த 2 பந்துகளில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து அய்யர் 52 ரன்களில்(31பந்துகள்) ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்து வந்த அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 4 ரன்கள் சேர்த்தநிலையில், சாஹலிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார். மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தது மிகப்பெரிய  சரிவாக டெல்லிக்கு அமைந்தது.

 டிவேசியா களமிறங்கி ரிஸ்பா பந்துக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். டிவேசியா நிதானமாக பேட் செய்ய ரிஸ்பா ஒருபக்கம் வெளுத்துக்கட்டினார். 34 பந்துகளில் அரைசதத்தை ரிஸ்பா எட்டினார்.

18-வது ஓவரில் சிராஜ் வீசிய பந்தில் 2 சிக்ஸர்கள், வோக்ஸ் வீசிய 19-வது ஓவரில் 2 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் என ரிஸ்பா நொறுக்கி எடுத்தார். அதிரடியாக பேட் செய்த ரிஸ்பா 48 பந்துகளில் 85 ரன்களில் ஆன்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.

20ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது டெல்லி அணி. டிவேசியா 13 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரிஸ்பா பந்த், ஸ்ரேயாஸ் அய்யரும் நேற்று நிலைத்து நின்று பேட் செய்யாவிட்டால், டெல்லி அணியின் கதி அதோகதிதான். மிகமோசமான ஸ்கோரை எட்டியிருக்கும். அணியின் ஸ்கோரை கவுரமான இடத்துக்கு கொண்டு சென்றது இருவரையும் சாரும்.

பெங்களூரு அணியைப் பொறுத்தவரை சாஹல் 2 விக்கெட்டுகளையும், உமேஷ், ஆன்டர்சன், வாஷிங்டன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

176 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. வோரா, டீகாக் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். பெங்களூரு அணியிலும் மோசமான தொடக்கம் இருந்தது. மேக்ஸ்வெல் பந்துவீச்சில் வோரா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். 5-வது ஓவரில் டீகாக் 18 ரன்கள் சேர்த்திருந்தபோது ரன் அவுட் செய்யப்பட்டார். இருமுக்கிய விக்கெட்டுகள் விரைவாக வெளியேறியது அடுத்து வந்த வீரர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திக்கொடுத்தது. விக்கெட் சரிவையும் தடுக்கவேண்டும், ரன்களும் சேர்க்க வேண்டிய நிர்பந்தத்துக்கு கோலியும், டிவில்லியர்ஸும் தள்ளப்பட்டனர்.

3-வது விக்கெட்டுக்கு கேப்டன் கோலி, டிவில்லியர்ஸ் ஜோடி நிதானமாக ஸ்கோர் செய்யத் தொடங்கினார்கள். நதீம் வீசிய 5-வது ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளையும், அவரின் 7-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளையும் அடித்து டிவ்லில்யர்ஸ் மிரட்டல் விடுத்தார். இதனால் ரன்ரேட் ஓரளவுக்கு சீராக உயர்ந்தது. பவர்ப்ளே ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் மட்டுமே பெங்களூரு சேர்த்திருந்தது.

டிவேசிய 9-வது ஓவரில் டிவில்லியர்ஸ் அடித்த சிக்ஸர் சின்னச்சாமி அரங்கின் மேற்கூரையில் விழுந்தது. 24 பந்துகளில் டிவில்லியர்ஸ் அரைசதம் எட்டினார்.

நிதானத்தை கடைபிடித்து ஆடிய கோலி 11-வது ஓவரி்ல படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கோலி 30 ரன்கள்(ஒருசிக்ஸர், 2 பவுண்டரி) சேர்த்தார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 63 ரன்கள் சேர்த்தனர்.

4-வது வீரராக கோரி ஆன்டர்சன் களமிறங்கி, டிவில்லியர்சுடன் இணைந்தார்.அதன்பின் அணியின் சூழலை உணர்ந்த டிவில்லியர்ஸ் அதிரடியில் இறங்கினார்.  படேல் வீசிய 13-வது ஓவரை டிவில்லியர்ஸ் 2சிக்ஸர்கள், ஒருபவுண்டரி என நொறுக்கினார். டிவேசியா வீசிய 14-வது ஓரு சிக்ஸர், ஆன்டர்சன் வீசிய 15-வது ஓவரில் ஒருசிக்ஸர், பவுண்டரி என வாணவேடிக்கை காட்டினார்.

டிரன்ட்போல்ட் வீசிய 16-வது ஓவரில் ஒருபவுண்டரி மட்டும் அடித்த ஆன்டர்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மன்தீப்சிங் களமிறங்கினார். மோரிஸ் பந்துவீச்சில் மன்தீப் தனது பங்கிற்கு ஒரு சிக்ஸர், ஒருபவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தினார். போல்ட் வீசிய 18-வது ஓவரின் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் அடித்து அணியைவெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

மிகவும் எளிதான ஸ்கோர் என்றபோதிலும் தொடக்க வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்து அதன் நெருக்கடியையும், அழுத்தத்தையும் கோலி, டிவில்லியர்ஸ் மீது சுமத்தினர். அதை திறம்படச் சமாளித்து கோலியும், டிவில்லியர்ஸும் சிறப்பாக விளையாடினார்கள். அதிலும் டிவில்லியர்ஸ் பேட்டிங் அற்புதம்.

18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் சேர்த்து பெங்களூரு அணி வெற்றஇ பெற்றது. டிவில்லியர்ஸ் 90 ரன்களுடனும், மன்தீப் சிங் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

டெல்லி அணித் தரப்பில் போல்ட், மேக்ஸ்வெல், படேல் தலா ஒருவிக்கெட்டை வீழ்த்தினார்கள்.

 

 

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close