[X] Close

பாதிக் கேப்டன் தோனிதான்; கோலி சிரமப்படுகிறார்: பிஷன் சிங் பேடி பளிச்


dhoni-half-a-captain-of-indian-team-kohli-visibly-rough-without-him-bedi

  • போத்திராஜ்
  • Posted: 12 Mar, 2019 10:59 am
  • அ+ அ-

ஒருநாள் அணியில் விளையாடும்போது பாதிக் கேப்டனாக தோனிதான் செயல்படுகிறார், தோனி இல்லாமல் கோலி களத்தில் மிகவும் சிரமப்படுகிறார், கேப்டன்  பணி அவருக்கு கடினமாக இருக்கிறது என்று முன்னாள் இந்திய அணி வீரர் பிஷன் சிங் பேடி கருத்து தெரிவித்துள்ளார்

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணிக்கு டெல்லியில் உள்ல ஆஸ்திரேலிய தூதரகம் சார்பில் நேற்று சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பிஷன் சிங் பேடி பங்கேற்றார். அப்போது ஊடகங்களுக்க அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

தோனிக்கு ஏன் கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அளித்தார்கள் என எனக்குப் புரியவில்லை வியப்பாக இருக்கிறது. இதைப்பற்றி யாரும் பேசவில்லை. தோனி இல்லாத வெற்றிடத்தை பேட்டிங்கிலும், கீப்பிங் பணியிலும் 4-வது ஒருநாள் போட்டியில் பார்க்க முடிந்தது. ஒருநாள் அணியில் தோனி பாதிக்கேப்டன்  போல் செயல்பட்டார். தோனி இல்லாமல் கோலி அன்று களத்தில் கேப்டன் பணியைக் கவனிக்க மிகவும் சிரமப்பட்டார்.

தோனி இன்னும் இளமையான வீரர் இல்லைதான், ஆனாலும் அவரின் சேவை அணிக்குத் தேவை. அமைதியாக இருந்துகொண்டு அணிக்கு பல்வேறு ஊக்கங்களை அளிப்பார். ஒரு கேப்டனுக்கும் தோனியும் ஆலோசனை அவசியம். தோனி இல்லாமல் கோலி செயல்படுவது கடினம். தோனி இல்லாமல் அணியைக் கொண்டு செல்வது நல்ல அறிகுறி அல்ல.

இங்கிலாந்து உலகக் கோப்பைக்கு முன்பாக, இந்திய அணி தேவையில்லாமல் பல்வேறு சோதனை முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. உலகக்கோப்பைப் போட்டிக்கு இன்னும் இரண்டரை மாதங்கள் இருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு சோதனை முயற்சிகளை அணியில் செய்த நிலையில், இப்போதும் செய்வது அதிருப்தியை அளிக்கிறது.

வரும் 23-ம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்குகிறது. ஐபிஎல் போட்டியில் வீரர்கள் விளையாடும்போது மிகுந்த கவனத்துடன் விளையாட வேண்டும், இதில் காயம் ஏற்பட்டால், அடுத்து வரும் உலகக்கோப்பைப் போட்டிக்கு தகுதிபெறுவது கடினமாகிவிடும்.

இந்திய அணிக்கு தற்போது மணிக்கட்டுகளில் வீசும் சுழற்பந்துவீச்சாளர்கள்தான் தேவை, விரல்கள் மூலம் வீசும் பந்துவீச்சாளர்கள் தேவைக்கு ஏற்ப இருக்கிறார்கள். குறிப்பாக குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல் ஆகியோரை சிறப்பாக பயன்படுத்த வேண்டும்.

ரவிந்திர ஜடேஜா சிறந்த ஆல்ரவுண்டராக இருந்தபோதிலும், அவரை குறைத்துமதிப்பிட்டு அவருக்கு வாய்ப்பளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது.

ஆஸி.க்கு எதிரான 4-வது ஒருநாள் ஆட்டத்தில் விக்கெட் கீப்பிங் பணியில் ரிஷப் பந்த மோசமாக செயல்பட்டார். தோனிக்கு ஓய்வளித்துவிட்டு, ரிஷப் பந்துக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.

கட்டுக்குள் வராத குதிரை போன்றவர் ரிஷப் பந்த். அவருக்கு கடிவாளம் தேவை. அவரை வழிநடத்த சரியான ஆட்கள் தேவை. தொடர்ந்து செய்த தவறுகளை விக்கெட் கீப்பிங் பணியில் மீண்டும் செய்கிறார், அதிகமான பயிற்சி அவசியம் தேவைப்படுகிறது. இந்திய அணியைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்.கே. பிரசாத் விக்கெட் கீப்பராக இருந்தவர்தான். அவருக்கு ரிஷப் பந்த் செய்யும் தவறுகள் தெரியாதா.

கிரிக்கெட் குறித்த அறிவு வளர வேண்டும். கிரிக்கெட் திறமையும், கிரிக்கெட் குறித்த அறிவும் வெவ்வேறானது. கிரிக்கெட் குறித்த அறிவு, ஞானம், புரிதல் இல்லாமல் கிரிக்கெட் திறமையை வளர்க்க முடியாது. 4-வது போட்டியில் இந்திய அணி நல்லதொடக்கம் அளித்து அடித்தளம் அமைத்தது. ஆனால், கடைசி ஓவர்களில் தடுமாறினார்கள். ஆனால், அதேசமயம், ஆஸ்திரேலிய அணி 2 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் ஆட்டத்தை முடித்துவிட்டார்கள்.

ஆதலால், கிரிக்கெட் திறமையும், ஞானத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது.

இவ்வாறு பிஷன் சிங் பேடி தெரிவித்தார்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close