[X] Close

மொயின் அலியைப் போல் இந்திய அணியை தடை செய்ய வேண்டும்:  ராணுவ தொப்பி அணிந்த விவகாரத்தில் ஐசிசியிடம் பாக். வாரியம் வலியுறுத்தல்


pcb-takes-strong-notice-of-india-s-army-caps

  • போத்திராஜ்
  • Posted: 11 Mar, 2019 10:58 am
  • அ+ அ-

கராச்சி,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் ராணுவத் தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறையிட்டுள்ளது.

இங்கிலாந்து வீரர் மொயின் அலி, தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் ஆகியோர் கிரிக்கெட்டில் அரசியல் கலப்பு செய்தமைக்காக தடை விதிக்கப்பட்டது அதை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் வாரியம் ஐசிசியிடம் முறையிட்டுள்ளது.

புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியான 40 சிஆர்பிஎப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியினர் ராணுவ வீரர்கள் அணியும் தொப்பி அணிந்து விளையாடினார்.

மேலும், இந்த ஆட்டத்தில் கிடைக்கும் ஊதியத்தை வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கவும் கோலி தலைமையிலான அணியினர் முடிவு செய்திருந்தனர்.

இந்த போட்டியின்போது, எல்லைப் பாதுகாப்புப் படையில் கவுரவ பதவி வகிக்கும் தோனி, அனைவருக்கும் ராணுவ தொப்பிகளை வழங்கினார்.

ஆனால், இந்த ஆட்டத்தில் கிடைக்கும் ஊதியம், நிதி அனைத்தும் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்க இருப்பதால், நலநிதிக்காக இந்த போட்டி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஐசிசியிடம் பிசிசிஐ அனுமதி கோரியிருந்தது. அதற்கு ஐசிசியும் அனுமதி வழங்கி இருந்தது.

ஆனாலும்,  இந்திய அணியினர் ராணுவ தொப்பி அணிந்து கிரிக்கெட் விளையாடியதை பாகிஸ்தான் அமைச்சர்களால்  பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்திய அணி மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே நேரிடயாக முறையிட்டுள்ளது. இது தொடர்பாக கிரிக்இன்போவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இஷான் மானி கூறியதாவது:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரா 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் ராணுவத் தொப்பி அணிந்து விளையாடிது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ மீது ஐசிசி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தை நாங்கள் ஐசிசி கூட்டத்தில் கடுமையாக எழுப்புவோம். எங்கள் நிலைப்பாடு குறித்து ஐசிசிக்கு எந்தவிதமான தவறான புரிதலும் இல்லை. கிரிக்கெட் விளையாட்டு என்பது அரசியலோடு கலக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். கிரிக்கெட் உலகில் பிசிசிஐயின் நம்பகத்தன்மை மிகவும் மோசமாக இருக்கிறது.

கிரிக்கெட்டில் அரசியல் கலக்கக்கூடாது என்பதற்கும், அவ்வாறு செயல்பட்ட சிலர் மீதும் ஏற்கனவே ஐசிசி நடவடிக்கை எடுத்த முன்னுதாரணங்கள் இருக்கின்றன.

உதாரணமாக இங்கிலாந்து வீரர் மொயின் அலி, பாலஸ்தீனத்தில் நடந்த தாக்குதலைக் கண்டித்து, காசாவை பாதுகாப்போம் என்ற பெயரில் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ல் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடினார். அவர் மீது தடைவிதிக்கப்பட்டது. அதேபோல தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர், பாகிஸ்தான் மதபோதகருக்கு ஆதரவாக ஆடை அணிந்துஇலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கியதால் அவர் மீதும் தடைவிதிக்கப்பட்டது. ஆக இரு உதாரணங்கள் இருக்கின்றன.

ஆதலால், இம்ரான் தாஹிர், மொயின் அலி மீது ஐசிசி அப்போது என்னமாதிரியான நடவடிக்கை எடுத்ததோ அதே நடவடிக்கையை இப்போது இந்திய கிரிக்கெட் அணி மீதும் எடுக்க வேண்டும். இந்த போட்டிக்கு ஐசிசியிடம் அனுமதி பெற்றாலும், நடத்தப்பட்ட நோக்கமும், நடந்து கொண்ட விதமும் வேறானது. ஏற்கனவே ஐசிசிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளோம். எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் அரசியல் செய்யவில்லை. அரசியலுக்காக கிரிக்கெட்டை பயன்படுத்தவும் இல்லை. இவ்வாறு இஷான் மானி தெரிவித்தார்.

ராணுவத் தொப்பி அணிந்து விளையாடியது குறித்து விளக்கம் அளித்து கேப்டன் விராட் கோலி கூறுகையில், " புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவவே அந்த போட்டியில் நாங்கள் ராணுவத் தொப்பி அணிந்தோம். அந்த போட்டியில் கிடைத்த ஊதியத்தையும் வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்க அனைத்து வீரர்களும் முடிவு செய்தோம். அதனால்தான் ராணுவத் தொப்பி அணிந்து, வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில்  விளையாடினோம் " எனத் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close