[X] Close

மொஹாலியில் இன்று 4-வது ஒருநாள் போட்டி; வெற்றி பாதைக்கு திரும்புமா இந்திய அணி?- தோனிக்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறங்குகிறார்


india-australia-team

  • kamadenu
  • Posted: 10 Mar, 2019 09:09 am
  • அ+ அ-

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் இன்று நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், நாக்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ராஞ்சியில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வெல்லும் என கருதப்பட்டது.

ஆனால் ஆஸ்திரேலிய அணிபேட்டிங், பந்து வீச்சில் சிறப்பாகசெயல்பட்டு 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனினும் தொடரில் இந்திய அணி 2-1 எனமுன்னிலை வகிக்கும் நிலையில் 4-வது ஆட்டம் மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திலும் டெல்லியில் 13-ம் தேதி நடைபெறும் கடைசி ஆட்டத்திலும் தோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த் களமிறங்க உள்ளார். இந்தத் தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் ஆட்டம்பலவீனம் அடைந்து வருவதுபாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் முக்கியமாக ஷிகர் தவண் 3 ஆட்டங்களையும் சேர்த்துவெறும் 22 ரன்களே சேர்த்துள்ளார்.

வழக்கமாக தொடர்ச்சியாக சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் ரோஹித் விரைவிலேயே விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார். அவர், இந்தத் தொடரில் இதுவரை 51 ரன்களே சேர்த்துள்ளார். இவர்களுடன் 4-ம் வீரராக களமிறங்கும் அம்பதி ராயுடு (3 ஆட்டங்களில் 33 ரன்கள்) செயல்திறனும்மோசமாகி உள்ளது.

எனவே இன்றைய ஆட்டத்தில் விளையாடும் லெவனில் நிச்சயம் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட் டுள்ளது இந்திய அணி நிர்வாகம்.

அநேகமாக ஷிகர் தவண் நீக்கப்பட்டு கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறக்கப்படக்கூடும். அதேவேளையில் அம்பதி ராயுடு வின் பேட்டிங் வரிசை மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அடுத்தடுத்து இரு சதங்கள் அடித்து இந்தத் தொடரில் 283 ரன்கள் சேர்த்துள்ள கேப்டன் விராட்கோலியிடம் இருந்து மேலும் ஒருசிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் கோலி அபாரமாக சதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை இருந்தது. ஆனால் விராட் கோலி ஆட்டமிழந்ததும் அதற்கான வழிகள் அடைக்கப்பட்டது. நடுவரிசை வீரர்களான அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், விஜய் சங்கர் ஆகியோர் உயர்மட்ட செயல்திறனை வெளிப் படுத்தத் தவறினர். ஆட்டத்தின் முதற்பாதியில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்கள் பின்னர் கடைசி கட்டத்தில் 62 ரன்களுக்கு 5 விக் கெட்கள் என கொத்து கொத்தாக விக்கெட்டை இந்திய அணி பறிகொடுத்தது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் பார்ட்னர்ஷிப்பை கட்டமைப்பதில் இந்திய அணி வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். மேலும் ஆடம் ஸம்பா சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதிலும் இந்திய அணிவீரர்கள் சற்று தெளிவுடன் செயல்பட வேண்டும். இந்தத் தொடரில் அவர், முக்கியமான கட்டங்களில் விக்கெட்களை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தி வருகிறார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சிலும் ஒருசில மாற்றங்கள் இருக்க வாய்ப்புஉள்ளது. கடந்த ஆட்டத்தில் மொகமது ஷமிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக அவருக்குஓய்வு கொடுக்கப்பட்டு புவனேஷ் வர் குமார் களமிறக்கப்படக்கூடும். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றுதொடரை சமனுக்கு கொண்டு வரும் முனைப்புடன் களமிறங்குகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close