[X] Close

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் இன்று தொடக்கம்: சிந்து, சாய்னா மீது எதிர்பார்ப்பு


sindhu-sayna

  • kamadenu
  • Posted: 06 Mar, 2019 10:35 am
  • அ+ அ-

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது.

பாட்மிண்டன் உலகில் மதிப்புமிக்க தொடராக கருதப்படும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பர்மிங்காம் நகரில் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரில் கடைசியாக கடந்த 2001-ம் ஆண்டு இந்தியாவின் கோபிசந்த் பட்டம் வென்றிருந்தார். அதன் பின்னர் 18 வருடங்களாக இந்தியாவைச் சேர்ந்த எவரும் பட்டம் வெல்லவில்லை.

இந்தத் தொடரில் உலக தரவரிசையில் 32 இடங்களுக்குள் உள்ள வீரர், வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இம்முறை ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம் ஸ்ரீகாந்த், சமீர் வர்மா, சாய் பிரணீத், ஹெச்.எஸ்.பிரணாயி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அதேவேளையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, சாய்னா நெவால் களமிறங்குகின்றனர். அதிகபட்சமாக சிந்து கடந்த ஆண்டு அரை இறுதி வரை முன்னேறியிருந்தார். அதேவேளையில் சாய்னா 2015-ம் ஆண்டு 2-வது இடம் பிடித்திருந்தார்.

போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சிந்து தனது முதல் சுற்றில் தென் கொரியாவின் சுங் ஜி ஹைனுடன் மோதுகிறார். இதுவரை சுங் ஜி ஹைனுடன் 14 முறை மோதியுள்ள சிந்து 8 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளார், 6 முறை தோல்வியடைந்துள்ளார்.

போட்டித் தரவரிசையில் உள்ள 8-வது இடத்தில் உள்ள சாய்னா நெவால், ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில் கில்மோரை சந்திக்கிறார். இதுவரை கிறிஸ்டி கில்மோருக்கு எதிராக 6 முறை மோதியுள்ள சாய்னா நெவால் ஒருமுறை கூட தோல்வியை சந்தித்தது இல்லை.

சிந்து முதல் சுற்றை கடக்கும் பட்சத்தில் 2-வது சுற்றில் ரஷ்யாவின் எவ்ஜெனியா கோசெட்ஸ்கயா அல்லது ஹாங் காங்கின் செங் நகனுடன் மோதக்கூடும். இந்த ஆட்டத்தின் முடிவு சிந்துவுக்கு சாதகமாக அமைந்தால், கால் இறுதி சுற்றில் 3-ம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யுபியை எதிர்கொள்ளக்கூடும்.

சாய்னா தனது 2-வது சுற்றில் டென்மார்க்கின் லின் ஹோஜ்மார்க் அல்லது சீனாவின் காய் யானுடன் மோதக்கூடும். 2-வது சுற்றை சாய்னா கடக்கும் பட்சத்தில் கால் இறுதி சுற்றில் சீன தைபேவின் டாய் சூ யிங்கை சந்திக்கக்கூடும். டாய் சூ யிங்குக்கு எதிராக சாய்னா, தொடர்ச்சியாக 12 தோல்விகளை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் பிரிவில் ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் பிரான்சின் பிரைஸ் லெவர்டெஸையும் சமீர் வர்மா, டென்மார்க்கின் விக்டர் அக்செல்சனையும் எதிர்கொள்கின்றனர். அதேவேளையில் சாய் பிரணீத், பிரணாயுடன் நேருக்கு நேர் மோதுகிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close