[X] Close

ஆஸி.க்கு எதிராக தொடர் 4வது அரைசதம்; தோனி-கேதார் ஜாதவ் அபாரம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி


indian-win

99/4 என்ற நிலையிலிருந்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்த வெற்றிக்கூட்டணி தோனி, ஜாதவ்வை பாராட்டும் ஆஸி. அணி. | ஏ.பி.

  • kamadenu
  • Posted: 02 Mar, 2019 22:51 pm
  • அ+ அ-

இரா.முத்துக்குமார்

ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 237 ரன்கள் வெற்றி இலக்கை 99/4 என்ற நிலையிலிருந்து சேர்ந்த தோனி, கேதார் ஜாதவ் கூட்டணி அபாரமாக விரட்ட 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்று, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

முன்னதாக இந்திய அணியின் அபாரப் பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணி ரன்கள் எடுக்கத் திக்கித் திணறி 50 ஓவர்களில் 236/7 என்று முடிந்தது.  இந்திய அணி 48.2 ஓவர்களில் 240/4 என்று அபார வெற்றி பெற்றது. ஸ்டாய்னிஸ் வீசிய 49வது ஓவரில் எம்.எஸ்.தோனி அருமையான டைமிங்கில் பாயிண்டில் ஒரு பவுண்டரியையும் பிறகு அடுத்த பந்தே இன்னொரு ஷாட்டைத் தூக்கி பவுண்டரிக்கு விரட்டியும் வெற்றிக்கான இலக்கை எட்டினார்.

தோனி 72 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்தும், பெரும்பாலும் தோனியுடன் கூடவே வந்து கொண்டிருந்த கேதார் ஜாதவ் ஒரு கட்டத்தில் அதிரடி ஆட்டம் ஆடி கடைசியில் 87 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 81 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர்.

ஒரு கட்டத்தில் 80/1 என்ற நிலையில் இருந்து 99/4 என்று பின்னடையச் செய்தது, ஆனால் அதன் பிறகு ஆஸ்திரேலியாவிடமிருந்து முயற்சிகள் பெரிய அளவில் இல்லை, மந்தமான பிட்சில் ரன்கள் போதவில்லை இன்னும் 20-30 ரன்கள் அதிகம் எடுத்திருந்தால் கொஞ்சம் நெருக்கிப் பார்த்திருக்கலாம். ஆனால் அங்குதான் இந்தியப் பந்து வீச்சு சிறப்பாக அமைந்தது. ஆஸ்திரேலியா தரப்பிலிருந்து பேட்டிங்கிலும் சீரிய முயற்சி இல்லை என்பதே நிதர்சனம்.

இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு 2வது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது, சமீபகாலமாக சரியாக ஆடத் திணறி வரும் ஷிகர் தவண், கூல்ட்டர் நைல் பந்தை தரையில் ஆடத் தவறி பாயிண்டில் கிளென் மேக்ஸ்வெலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

1-1 என்ற நிலையிலிருந்து கோலி, ரோஹித் சர்மா இணைந்தனர். ஸ்கோரை 80 வரை கொண்டு சென்றனர், இதில் ரோஹித் சர்மா கொஞ்சம் நிதானம் காட்டினார், அதாவது அவரால் இந்தப் பிட்சில் ஸ்ட்ரோக்குகளை அவர் நினைத்தபடி ஆட முடியவில்லை.

விரட்டல் விராட்டின் திடீர் வீராவேசம்

ஆனால் விராட் கோலி முதல் 9 பந்துகளில் 1 ரன் என்று இருந்தவர் திடீரென பொங்கி எழுந்து சிலபல அபாரமான ஷாட்களை வெளுத்துக் கட்டினார். கூல்ட்டர் நைல்  ஓவரில் ஆஃப் ஸ்ட்ம்புக்கு நகர்ந்து கொண்டு லெக் திசையில் ஒரு பாட்டம் ஹேண்ட் பிளிக் பவுண்டரி விளாசினார், அதே ஓவரில் ஒரு அபார புல் ஷாட் பவுண்டரி. அடுத்து கமின்ஸ் வீசிய வேக ஷார்ட் பிட்ச் பந்தை அரக்க புல் ஷாட் ஆடி லாங் லெக்கில் மிகப்பிரமாதமான சிக்சரை அடித்தார்.

 அதோடு இல்லாமல் பெஹெண்டார்ப் ஓவரில் இறங்கி வந்து ஸ்பின்னரை விளாசுவது போல் ‘பச்’ என்று மிடாஃபில் ஒரு அறை அறைந்தார் நான்கு ரன்கள். ஆனால் அதே ஓவரில் கமின்ஸ் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை கோலியின் கிளவ்வுக்கு ஏத்தினார்.  இடையிடையே ரோஹித் சர்மாவை கடுமையாகச் சோதித்தார் கமின்ஸ், கொஞ்சம் அடியும் கையில் வாங்கினார் ரோஹித் சர்மா.  லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா வந்தவுடன் அவரது 2வது ஓவரில் ஸ்கொயர்லெக்கில் ஒரு பவுண்டரி விளாசினார்விராட் கோலி. ஆனால் ஸாம்ப்பாவின் 3வது ஓவரில் திருப்பு முனை ஏற்பட்டது, அதற்கு முன்பாக விராட் கோலிக்கு ஷார்ட் தேர்ட்மேன் வழியாக ஒரு அதிர்ஷ்ட பவுண்டரியும் நேராக ஒரு அரக்க பவுண்டரியும் அடித்து ஃபுல் மூடில் இருந்தார், ஆனால் அடுத்த பந்து கோலி முன்னால் வந்து தடுத்தாட பந்து கொஞ்சம் உள்ளே திரும்பி பிறகு லேசாக நேரானது கால்காப்பில் வாங்கினார் நடுவர் நாட் அவுட் என்றார், ஆனால் ரிவியூவில் அவுட் என்று தீர்ப்பளிக்கபட்டது. 9 பந்துகளில் 0 என்று இருந்த கோலி அதன் பிறகு 36 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அதில் 6 பவுண்டரி ஒரு சிக்சர் என்று வெளியேறினார்.

ராயுடு இறங்கி கூல்ட்டர் நைல் பந்திலும் ஸ்டாய்னிஸ் பந்திலும் 2 பவுண்டரிகள் அடித்திருந்த நிலையில் ரோஹித் சர்மா தடவலான 37 ரன் இன்னிங்சில் கூல்ட்டர் நைல் பந்தில் முன் விளிம்பில் பட்டு வெளியேறினார். ராயுடு 2 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் எடுத்து சாம்பா லெக் ஸ்பின்னில் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் கேட்சில் வெளியேறினார். 99/4 என்ற நிலையில் தோனியுடன், கேதார் ஜாதவ் இணைந்தார்.

தோனி-கேதார் ஜாதவின் அபாரமான சமயோசித வெற்றிச் சதக் கூட்டணி:

10 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த தோனி முதல் பௌண்டரியாக கமின்ஸ் பந்தை ஹூக் செய்தார். சாம்பாவை ஜாதவ் ஒரு மிட்விக்கெட் பவுண்டரி அடித்தார். அடுத்ததாக ஒரு 12 பந்துகளில் ஏற்பட்ட மந்த நிலையை ஜாதவ், ஸாம்பா பந்தை ஒதுங்கிக் கொண்டு கவர் திசையில் பவுண்டரி மூலம் போக்கினார். அதன் பிறகு தோனி 13 ரன்களில் இருந்த போது ஏறக்குறைய ஸ்டாய்னிஸ் பந்தில் காட் அண்ட் பவுல்டு ஆகியிருப்பார். முன்னால் டைவ் அடித்த ஸ்டாய்னிஸினால் பிடிக்க முடியவில்லை. ஜாதவ்வுக்கும் ஒரு முன் விளிம்பில் பட்ட பந்து பாயிண்டில் முன்னால் விழுந்தது.

ஆகவே அதிர்ஷ்டம் தொடர இருவரும் கொண்டு சென்றனர். 35 ஒவர்களில் 147/4 என்ற நிலை இருந்தது. இந்நிலையில் 38வது ஓவரில் கூல்ட்டர் நைல் ஓவர் சம்பவங்கள் நிறைந்த ஓவரானது, ஆஃப் ஸ்டம்ப் வெளியே பிட்ச் ஆன லெந்த் பந்தை தோனி மிட்விக்கெட்டில் ஃபுல் பவரில் தூக்கி சிக்சருக்கு அடித்தார். ஆனால் அடுத்த பந்தே மீண்டும் ஒரு புல் ஷாட் லீடிங் எட்ஜ் ஆக பவுலருக்கு பின்னால் கேட்சாகச் சென்றது, ஆனால் மிட் ஆனிலிருந்து டைவ் அடித்த ஸ்டாய்னிஸ் பிட்ச் ஆன பிறகு பந்தைப் பிடித்தார், தீர்ப்பு 3வது நடுவரிடம் செல்ல ரசிகர்களுக்கு  திக் திக் கணமாக அமைந்தது. அது நாட் அவுட். அதே ஓவரில் இன்னொரு பந்தை தோனி லெக் திசையில் தட்டி விட முயல மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு அதிர்ஷ்ட பவுண்டரி ஆனது.

அதன் பிறகு ஜாதவ் பிரமாதமாக ஆடினார், குறிப்பாக கமின்ஸ் பந்தின் வேகத்தைப் பயன்படுத்தி பாயிண்ட், தேர்ட்மேன்களில் பவுண்டரிகள் விளாசினார்.  ஜாதவ் 67 பந்துகளில் 51 என்று அரைசதம் எடுத்தார். அரைசதத்திற்குப் பிறகு ஜாதவ் வேகமாக சிலபல பவுண்டரிகளுடன் முன்னேறி 72 ரன்கள் வந்த பிறகுதான் தோனி 48வது ஓவரில் தன் அரைசதத்தை எடுத்தர், இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக தோனி எடுக்கும் 4வது அரைசதமாகும்.  தோனி அரைசதத்துக்குப் பிறகு ஜாதவ் மிக அருமையாக கூல்ட்டர் நைல் லெந்த் பந்தை மிட்விக்கெட்டில் சிக்ஸ் தூக்கி ஆதிக்கத்தை உறுதி செய்தார். கடைசியில் ஸ்டாய்னிஸை 2 பவுண்டரிகள் அடித்து தோனி பினிஷ் செய்து வைத்தார். இந்திய அணி 48.2 ஒவர்களில் 240/4, தோனி, ஜாதவ் இணைந்து 24.5 ஒவர்களில் 141 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்து வெற்றிக்கூட்டணி அமைத்தனர்.

ஒரு விக்கெட்டை வீழ்த்தி அருமையாக டைட் செய்து பிறகு 99/4-ல் இறங்கி 81 ரன்கள் விளாசிய கேதார் ஜாதவ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close