[X] Close

ரோகித் சர்மா, லீவிஸ் தூண்கள்: மும்பைக்கு முதல் வெற்றி: விராட் கோலி புதிய சாதனை


sharma-steals-show-as-mumbai-indians-beat-royal-challengers-bangalore-by-46-runs

மும்பைஇந்தியன்ஸ் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த தூண்கள் கிறிஸ் லீவிஸ், கேப்டன் ரோகித் சர்மா.

  • போத்திராஜ்
  • Posted: 18 Apr, 2018 07:36 am
  • அ+ அ-

மும்பை,

மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி.

ரன்களே எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழப்பது என்பது கடினமான சூழல், அப்படிப்பட்ட நெருக்கடியில் கேப்டன் என்ற முறையில் அணியை பொறுப்பாக மீட்டெடுத்த ரோகித் சர்மாவின் பேட்டிங் நேற்று பிரமாதப்படுத்தியது. இவருக்கு துணையாக கிறிஸ் லீவிஸின் ஆட்டமும் அற்புதமாக இருந்தது. 

இருவரின் முத்தாய்ப்பான ஆட்டமே அணியின் ஸ்கோர் குவிப்புக்கும், வெற்றிக்கும் முக்கியக் காரணமாக அமைந்தது. ஆட்டநாயகன் விருதையும் ரோகித் சர்மா பெற்றார்.

இதுபோல குருனால் பாண்டியா, மெக்லனஹன், பும்ரா ஆகியோரின் சிக்கனமான, கட்டுக்கோப்பான பந்துவீச்சு என ஒட்டுமொத்த அணியும் முதல் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டனர்.

இதன் மூலம் 4 போட்டிகளில் விளையாடியுள்ள இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, தலா 3 தோல்விகளுடன் களத்தில் உள்ளனர். ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபி அணியைக் காட்டிலும் ஒருஇடம் முன்னேறி 6-வது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி  இருக்கிறது.

பேட்டிங்குக்கு சொர்க்கபுரியான மும்பை ஆடுகளத்தில் டாஸ்வென்றவுடன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து, சூர்யகுமார் யாதவ்,லீவிஸ் களமிறங்கினார்கள்.

புதிய பந்தை பயன்படுத்தி முதல் ஓவரின், முதல் பந்தில் சூர்யகுமார் யாதவின் ஸ்டெம்பை உமேஷ் யாதவ் பதம் பார்த்தார். கோல்டன் டக்அவுட்டாக சூர்யகுமார் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த இசான் கிஷானையும் தனது ஸ்விங் பந்துவீச்சில் போல்டாக்கி உமேஷ் வெளியேற்றினார்.

இதனால் மும்பைக்கு தொடக்கமே இடிபோல் இறங்கியது. முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது, இனி எப்படி மீண்டுவரப் போகிறது என்று யோசிக்கப்பட்டது. ஆனால், 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா, லீவிஸுடன் இணைந்து ஆட்டத்தின் திசையையே மாற்றினார்.

உமேஷ் யாதவ் 2விக்கெட்டுகளை வீழ்த்தி அமைத்துக்கொடுத்த நல்ல அடித்தளத்தையும் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தி தொடர்ந்து நெருக்கடி கொடுத்திருந்தால் மும்பை இந்தியன்ஸ் அணியை கட்டுப்படுத்தி இருக்கலாம், ஆனால், ரோகித்சர்மா, லீவிஸையும் களத்தில் நங்கூரம் பாய்ச்சவிட்டது தவறுஎன கடைசியில்தான் தெரிந்தது.

ஒரு அணி 2 விக்கெட்டுகளை முதல்ஓவரிலேயே இழந்து, அதன்பின் மீண்டுவருவது கிரிக்கெட்டில் மிகக்கடினம், அவ்வாறு வந்தாலும் மற்றவீரர்களும் பொறுப்புடன் ஆட வேண்டும். ஆனால், இவை அனைத்தும் நேற்று ரோகித்சர்மாவுக்கு கச்சிதமாக அமைந்துவிட்டது.

3-வது விக்கெட்டுக்கு லீவிஸ், ரோகித்சர்மா 108ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தனர். தொடக்கத்தில் நிதானம் காட்டிய இருவரும் நேரம் செல்ல, செல்ல தங்களுக்கே உரிய அதிரடியை வெளிப்படுத்தினார்கள். மும்பை ரசிகர்களுக்கு சற்று தாமதாக வானவேடிக்கை நிகழ்ச்சி அரங்கேறியது. ரோகித் சர்மா முழுமையாக ஃபார்முக்கு திரும்பினார்.

வெளுத்து வாங்கிய லீவிஸ் 32 பந்துகளில் ஐபிஎல் போட்டியில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். 10ஓவர்களில் மும்பை அணி 100 ரன்களைக் கடந்து ஓவருக்கு 10ரன்ரேட்டில் பறந்தது. ரோகித் சர்மா தனது பங்குக்கு 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். இருவரையும் பிரிக்கமுடியாமல் கோலி கையை பிசைந்தார்.

62 ரன்கள்(42பந்துகள்) சேர்த்திருந்த போது ஆன்டர்சன் பந்துவீச்சில் லீவிஸ் ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள், 6பவுண்டரிகள் அடங்கும். அடுத்து வந்த குருனால் பாண்டியா 15ரன்களில் ரன்அவுட் ஆனார். அதிரடி மன்னன் பொலார்ட் 5ரன்களில் நடையைக் கட்டினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் ரோகித் சர்மா பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் துரத்திக் கொண்டிருந்தார். இதனால், ரன் 200 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அடுத்து களமிறங்கிய ஹர்திக்பாண்டியாவுக்கு முதல்பந்தே பேட்டில் பட்டு சென்றது. களநடுவர் அவுட் கொடுத்தாலும், அப்பீலில் சந்தேகத்தின் பலனை ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுத்து அவரை களத்தில் நிற்கவைத்தார் 3-வது நடுவர். அதன்பலனாக தொடர்ச்சியாக 2 சிக்ஸர்கள் விளாசினார் ஹர்திக்.

சிறப்பாக பேட் செய்த ரோகித் சர்மா 52 ரன்களில்94 ரன்கள் சேர்த்த நிலையில் ஆன்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 10பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும். அதுமட்டுமல்லாமல், ஐபில் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் தனிப்பட்ட முறையில் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரர் எனும் பெருமையை ரோகித் பெற்றார். இந்த சீசனில் தனிநபரின் அதிகபட்சமாக சாம்ஸன்  அடித்த 92 ரன்களே இருந்தது. அதை ரோகித் முறியடித்துவிட்டார்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 213ரன்கள் சேர்த்தது. ஹர்திக் பாண்டியா 17 ரன்களுடனும், மெக்லனஹன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். பெங்களூரு அணித் தரப்பில் உமேஷ், ஆன்டர்சன் தலா 2விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

214ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தொடக்க வீரராக மெக்குலம் இல்லாததால், இந்த முறை டீக்காக்குடன் இணைந்து கேப்டன் கோலி களமிறங்கினார். இந்திய அணியின் சிறந்த கேப்டன் என்பதையும், பெங்களூரு அணியின் பொறுப்பான கேப்டன் என்பதையும் விராட் கோலி தனது பேட்டிங்கால் நிரூபித்தார்.

40 ரன்களில் பெங்களூரு அணி மெக்லனஹன் பந்துவீச்சில் டீக்காக்கின்(19ரன்கள்) விக்கெட்டை இழந்தது. கோலிக்கு உறுதுணையாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டீவ்லில்யர்ஸ் வந்தவேகத்தில் ஒரு ரன்னில் மெக்லனஹன் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதன்பின் பந்த மன்தீப் சிங் 16 ரன்களில் குருனல் பாண்டியாவிடம் சரணடைந்தார். அடுத்தபந்தில் ஆன்டர்சனும் டக்அவுட்டில் வெளியேறினார். இதனால், 10 ஓவர்களுக்குள் 75 ரன்களுக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணி தடுமாறியது.

கேப்டன் விராட் கோலி அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திவரும் நிலையில் அவருக்கு உறுதுணையாக நிலைத்து பேட் செய்த அணியில் ஒருவரும் முயற்சிக்கவில்லை. களமிறங்கும் ஒவ்வொரு வீரர்களும் விரைவாக விக்கெட்டுகளை பறிகொடுத்து கேப்டன் கோலி மீது சுமையை ஏற்றினார்கள். ஆனால், தனிஒருவனாக களத்தில் நின்று பந்துகளை சிக்ஸர்களும், பவுண்டரிகளுக்கும் அனுப்பினார் விராட் கோலி.

வாஷிங்டன் சுந்தர் 7 ரன்கள், சர்பிராஸ் கான் 5ரன்கள் கிறிஸ் வோக்ஸ் 11 ரன்கள், உமேஷ் யாதவ் 5 ரன்கள் என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆனால், மனம் தளராமல் பேட் செய்த விராட் கோலி 41 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளில் 4,558ரன்கள் சேர்த்து அதிகமான ரன்களே அடித்த வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா வைத்திருந்தார். அதை விராட் கோலி 33 ரன்கள் சேர்த்திருந்தபோது முறியடித்து ஐபிஎல் போட்டிகளில் அதிகரன்கள் அடித்த சாதனையை தட்டிச் சென்றார். அதிக ரன்கள் அடித்ததற்காக ஆரஞ்சு நிறத் தொப்பியும் பெற்றார்.

விக்கெட்டுகள் நிலைத்து ஆடாத காரணத்தால் ஒவருக்கு தேவைப்படும் ரன்கள் விகிதம் அதிகரித்துக்கொண்டே கோலி மீது சுமை ஏறியது. ஆனால், இறுதிவரை தனிநபராக போராடிய விராட் கோலியால் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. ஒவ்வொரு வீரரும் விரைவாக ஆட்டமிழந்து சென்றபோதெல்லாம் கோலியின் முகத்தில் கோபம் கொப்பளித்ததை நேற்றைய  போட்டியில் பார்க்க முடிந்தது. தனது துணையாக ஒருவரும் நிலைத்து விளையாடவில்லை என்ற கோபத்தை முக்ததில் காட்டினார்.

20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே சேர்த்தது. விராட் கோலி 62 பந்துகளில் 92 ரன்களுடனும்(4சிக்ஸர், 7பவுண்டரி)சிராஜ் 8 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். விராட் ஒருவர் மட்டுமே 92ரன்கள் சேர்த்துள்ளார், மற்ற 8 வீரர்கள் சேர்ந்து 75ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளனர். பேட்டிங்கில் விராட் கோலிக்கு சகவீரர்களின் ஒத்துழைப்பு இருந்திருந்தால்,போட்டியின் முடிவு மாறி இருக்கும். ஆனால், விராட் கோலி ஒருவர் மட்டுமே போராட முடியாதே.

மும்பை இந்தியன்ஸ் அணித் தரப்பில் குருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ரா, மெக்லனஹன் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close