[X] Close

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடர்; பட்டம் வெல்லும் முனைப்பில் சென்னை சிட்டி


chennaiyin-fc

  • kamadenu
  • Posted: 01 Mar, 2019 10:43 am
  • அ+ அ-

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரில் இன்று மாலை 5 மணிக்கு கோவாவில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சிட்டி - சர்ச்சில் பிரதர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை சிட்டி அணி இதுவரை 18 ஆட்டங்களில் விளையாடி 12 வெற்றி, 4 டிரா, 2 தோல்விகளுடன் 40 புள்ளிகளை குவித்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் சென்னை சிட்டி அணி வெற்றி பெறும் பட்சத்தில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்வதை உறுதி செய்யும். ஏனெனில் இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் 43 புள்ளிகளை எட்டும்.

சென்னை சிட்டி அணிக்கு அடுத்த இடத்தில் உள்ள ஈஸ்ட் பெங்கால் அணி 36 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் இரு ஆட்டங்கள் எஞ்சியுள்ளது. இந்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் அந்த அணியால் 42 புள்ளிகள் வரையே பெற முடியும். இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவதில் சென்னை சிட்டி அணி வீரர்கள் தீவிர முனைப்பு காட்டக்கூடும்.

ஸ்பெயினைச் சேர்ந்த பெட்ரோ மான்ஸி, சான்ட்ரோ ரோட்ரிக்ஸ், நெஸ்டர் கோர்டிலோ ஆகியோர் அணியின் துருப்பு சீட்டுகளாக இருந்து வருகின்றனர். இதில் பெட்ரோ மான்ஸி இந்தத் தொடரில் 4 ஹாட்ரிக்குடன் மொத்தம் 19 கோல்களை அடித்து அதிக கோல் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்த மூவர் கூட்டணி சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்கு சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளது.

சர்ச்சில் பிரதர்ஸ் அணி 18 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 7 டிரா, 3 தோல்விகளுடன் 31 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்திலும், தனது கடைசி லீக் ஆட்டத்திலும் அந்த அணி வெற்றி பெறும் பட்சத்தில் 2-வது இடத்தை பிடிக்கக்கூடும். டிரினிடாட்டை சேர்ந்த வில்லிஸ் பிளாசா அந்த அணியின் நட்சத்திர வீரராக வலம் வருகிறார். இந்த தொடரில் 18 கோல்கள் அடித்துள்ள அவர், சென்னை சிட்டி அணி வீரர்களின் டிபன்டர்களுக்கு சவால் அளிக்கக்கூடும். வில்லிஸ் பிளாசாவுடன் ராவில்சன் ரோட்ரிக்ஸ், விக்னேஷ்வரன் பாஸ்கரன், நல்லப்பன் மோகன்ராஜ், ஹூசைன் எல்டர்ஆகியோரும் அணிக்கு வலுசேர்க்கக்கூடியவர்களாக உள்ளனர்.

சென்னை சிட்டி அணியின் பயிற்சியாளர் அக்பர் நவாஸ் கூறுகையில், “எனக்கும் எனது அணிக்கும் சர்ச்சில் பிரதர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது மிகவும் முக்கியமான விஷயம். ஒவ்வொரு ஆட்டத்தையும் வென்று சாம்பியன் ஆக விரும்புகிறோம். மேலும் தொடரை சிறப்பான முறையில் நிறைவு செய்யவும் விரும்புகிறோம்.

எங்களது வெற்றிக்கான ரகசியம் பயிற்சிதான். கடினமாக விளையாடக்கூடிய அணிகளில் சர்ச்சில் பிரதர்ஸும் ஒன்று. சில அணிகள் உடல் ரீதியாக வலுவானது.

ஆனால் சர்ச்சில் பிரதர்ஸ் அணி சிறந்த பயிற்சியாளரையும் கலவையான வீரர்களையும் உள்ளடக்கியது. அதேவேளையில் எங்கள் அணியானது சிறந்த ஸ்பெயின் மற்றும் இந்திய வீரர்களை கொண்டுள்ளது” என்றார்.

இந்த சீசனில் சென்னை சிட்டி - சர்ச்சில் பிரதர்ஸ் அணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவையில் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்திருந்தது. அந்த ஆட்டத்தில் சர்ச்சில் பிரதர்ஸ் அணி வீரர் வெய்ன் வாஸ் அடித்த சேம்சைடு கோல் ஆட்டம் டிராவில் முடிவடைய முக்கிய காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close