[X] Close

‘நல்ல குணத்தை பலவீனமாக கருதக்கூடாது’; இந்திய விமானப்படையின் தாக்குதலுக்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் பாராட்டு


sachin-tendulkar

  • kamadenu
  • Posted: 27 Feb, 2019 11:00 am
  • அ+ அ-

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்மாவாவில் கடந்த 14-ம் தேதி துணை ராணுவப் படையினர் மீது தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று அதிகாலை இந்திய விமானப்படை வீரர்கள் இந்தியா - பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது ‘மிராஜ் 2000 போர் விமானங்கள்’ மூலம் அதிரடி தாக்குதல் நடத்தினர். 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன.

விமானப்படையினரின் இந்த துல்லிய தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விளையாட்டுத் துறையில் உள்ள பிரபல வீரர்கள் விமானப்படை வீரர்களை வெகுவாக புகழ்ந்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில், ‘நமது நல்ல குணத்தை ஒருபோதும் நம் பலவீனமாக தவறாக கருதக்கூடாது. இந்திய விமானப்படைக்கு எனது சல்யூட், ஜெய்ஹிந்த்” என குறிப்பிட்டுள்ளார்.

ஷிகர் தவண்: “சரியான நேரத்தில் பதிலடி கொடுத்த இந்திய விமானப்படை வீரர்களின் வீரம், தையரியத்துக்கு சல்யூட்”.

சுரேஷ் ரெய்னா: “கோழைத்தனத்துக்கு சரியான பதிலடி கொடுத்த விமானப் படை வீரர்களுக்கு என்னுடைய சல்யூட்”.

அஜிங்க்ய ரஹானே: “பயங்கரவாதத்துக்கு எதிராக மிகவும் தேவையான பதிலடியை கொடுத்த இந்திய விமானப்படைக்கு பாராட்டுகள். உங்களால் நாங்கள் பெருமையடைகிறோம். ஜெய்ஹிந்த்”.

கிடாம்பி ஸ்ரீகாந்த்: “தீவிரவாதத்துக்கு எதிராக பதிலடி கொடுத்துள்ள இந்திய விமானப்படையினருக்கு தலை வணங்குகிறேன். ஒவ்வொரு இந்தியனும் உங்களால் பெருமை அடைகிறான். ஜெய்ஹிந்த்”.

இவர்களுடன் இந்திய பாட்மிண்டன் நட்சத்திரங்களான சாய்னா நெவால், பிரணாய், டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், கவுதம் காம்பீர், யுவேந்திர சாஹல் உள்ளிட்டோரும் விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close