[X] Close

அஸ்வினிடம் வீழ்ந்தார் தோனி: சிஸ்கேவை சிதறடித்த ‘கெயில் பிரம்மாஸ்திரம்’


kxip-survive-msd-scare-to-end-csk-s-winning-streak

பஞ்சாப் அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்த கெயில், ராகுல்

  • போத்திராஜ்
  • Posted: 16 Apr, 2018 00:26 am
  • அ+ அ-

சண்டிகரில் நேற்று நடந்த 11-வது சீசன் ஐபில் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

அஸ்வினை ஏலத்தில் எடுக்காமல் சிஎஸ்கே அணி கழற்றிவிட்டது. ஆனால், தன்னை ஏலத்தில் எடுக்காமல் தவறுசெய்துவிட்டீர்கள் என்பதை தனது தலைமைப்பண்பு மூலம் அஸ்வின் நிரூபித்துவிட்டார்.

கடந்த 2 போட்டிகளிலும் களமிறக்காத கெயில் எனும் பிரம்மாஸ்திரத்தை இந்த போட்டியில் களமிறக்கி அதிரச் செய்தார். கெயில், ராகுலின் அதிரடி ஆட்டம் பஞ்சாப் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். அதுமட்டுமல்லாமல் தோனியின் பல்வேறு கேப்டன்ஷிப் தோல்விகளும் அஸ்வினுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

இதன் மூலம் சிஎஸ்கே அணியும், பஞ்சாப் அணியும் தலா 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி ஒரு தோல்வியுடன் உள்ளன.

டாஸ்வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். சென்னையில் சுரேஷ் ரெய்னாவுக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக முரளிவிஜய் சேர்க்கப்பட்டார். அதேபோல கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஸ்டோய்னிஸக்கு பதிலாக கிறிஸ் கெயிலும் , அக்சர் படேலுக்கு பதிலாக பரிந்தர் ஸ்ரனும் சேர்க்கப்பட்டனர்.

ரசிகர்கள் வரவேற்பு

கெயில், ராகுல் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். கெயில் களத்தில் இறங்கியதும் ரசிகர்கள் விசில் காற்றை கிழித்தது. ஃபார்மில்லாமல் தவித்தாலும் கெயிலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறையவில்லை என்பது நிரூபனமானது. ரசிகர்கள் நம்பிக்கையை கெயில் வீணடிக்கவில்லை. முதல் விக்கெட்டுக்கு இருவரும் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே ராகுல் அதிரடியாக 2 பவுண்டரிகள் அடித்து அசத்தினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கெயில் நிதானமாகவே செயல்பட்டு, ஹர்பஜன் பந்துகளை அவசரப்பட்டு அடிக்காமல் பவுண்டரியோடு நிறுத்திக்கொண்டார்.

4-வது ஓவரை ஹர்பஜன் மீண்டும் வீசினார். நினைத்ததுபோல் கெயில் ‘வெடிகுண்டு வெடித்தது’. ஹர்பஜன் ஓவரில் கெயில் ஒருசிக்ஸர்,பவுன்டரி என விளாச, ராகுலும் தனது பங்கிற்கு 2பவுண்டரிகள் விளாசினார். இந்த ஓவரில் 19 ரன்கள் சேர்க்கப்பட்டது.

கெயில் 22-வது அரைசதம்

சாஹர் வீசிய 6-வது ஓவரையும் கெயில் நொறுக்கி எடுத்தார் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்து சாஹருக்கு பந்துவீச்சை மறக்கச் செய்தார் கெயில். இம்ரான் தாஹிர் வீசிய 7-வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்து கெயில் 22 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். ஐபில் போட்டிகளில் கெயில் அடிக்கும் 22-வது அரை சதமாகும்.

நிதானமாக பேட் செய்து வந்த ராகுல் 37 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஹர்பஜன் வீசிய புல்டாஸ் பந்தை தூக்கிஅடிக்க அது பிராவோ கைகளில் தஞ்சம் அடைந்தது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் 96 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து வந்த அகர்வால், கெயிலும் இணைந்தார். தொடக்கத்தில் நிதானம் காட்டிய அகர்வால் ஹர்பஜன் வீசிய 10ஓவரில் ஒருபவுண்டரி, சிக்ஸர் அடித்து பார்முக்கு திரும்பினார்.

சிஎஸ்கே பதற்றம்

கெயிலை களத்தில் நிற்கும்வரை சிஎஸ்கே அணியினருக்கு ரத்த அழுத்தம் எகிறது. பந்துவீச்சை மாற்றிய தோனி, வாட்சனை அழைத்தார். அதற்கு பலனும் கிடைத்து. வாட்சன் வீசிய 11வது ஓவரில் இம்ரான் தாஹிரிடம் கேட்ச் கொடுத்து கெயில் ஆட்டமிழந்தார். 33 பந்துகளில் கெயில் 63 ரன்கள் சேர்த்தார். இதில் 4 சிக்ஸர்கள்,7 பவுண்டரிகள் அடங்கும்.

அதன்பின் பஞ்சாப் அணி வீரர்களின் ரன் வேகத்தை பிராவோவும், வாட்சனும் கட்டுப்படுத்தினர். இதனால் ரன்வேகம் குறையத் தொடங்கியது. மேலும், அடுத்து களமிறங்கிய வீரர்களும் நிலைத்து பேட்செய்யாமல், விரைவாக விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இம்ரான் தாஹிர் வீசிய 15-வது ஓவரில் அகர்வால் 30 ரன்களிலும், அடுத்த பந்தில் ஆபத்தான ஆரோன் பிஞ்சை டக்அவுட்டிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஃபார்ம் இல்லாமல் தவித்து வரும் யுவராஜ் சிங் 20 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கருண் நாயர் 29 ரன்களிலும், அஸ்வின் 14 ரன்களிலும் வெளியேறினர்.  டை 3 ரன்களிலும், ஸ்ரன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் கிங்ஸ் லெவன் அணி 7 விக்கெட் இழப்புக்கு 197ரன்கள் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் தாக்கூர், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

கடின இலக்கு

198 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது.

கடந்த இரு போட்டிகளிலும் அம்பதி ராயுடு சிறப்பான தொடக்கத்தை அளித்து வரும் நிலையில், அவருக்கு பதிலாக முரளிவிஜயை இறக்கினார் தோனி. ஆனால் 2-வது ஓவரில் வாட்ஸன் 11 ரன்களில் மோகித் சர்மா வேகத்தில் ஆட்டமிழக்க, 5-வது  ஓவரில் முரளிவிஜய் 12 ரன்களில் ஆன்ட்ரூடை வேகத்தில் வெளியேறினார்.

சிறிய இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது சென்னை அணியை நெருக்கடியில் தள்ளியது. கடந்த போட்டியில் நொறுக்கி எடுத்த பில்லிங்ஸ் 9 ரன்களில் ஏமாற்றினார்.

ராயுடு, தோனியும் 4-வது விக்கெட்டுக்கு நிதானமாக பேட் செய்தனர். பந்துகளை வீணாக்காமல், அதேசமயம், தூக்கி அடிக்காமல் ரன்களைச் சேர்த்தனர். இவர்களைப் பிரிக்க அஸ்வின் பலபந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் முடியவில்லை. அவ்வப்போது சிலபவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டையும் இருவரும் உயர்த்தினர்.

14-வது ஓவரில் 2-வது பந்தில் ராயுடுவை ரன்அவுட் மூலம் வெளியேற்றினார் கேப்டன் அஸ்வின். 49 ரன்களில் ராயுடு நடையை கட்டினார். இதில் 5பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும்.

அதன்பின் ஆட்டத்தின்  திருப்புமுனை  தொடங்கியது. பிராவோ களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜடேஜா வந்தார். ஸ்ரன் வீசிய ஒவரே ஜடேஜா அடித்து ஆடாமல் வீணாக்கினார்.

பொறுமையாக ஆடிய தோனி அடுத்து அதிரடி ஆட்டத்தை கையாண்டார். டை ஓவரில் 2 பவுண்டரிகளும், மோகித் சர்மா ஓவரில் 2 சிக்ஸர்களும் பவுண்டரியும் அடித்து அரைசதத்தை 34 பந்துகளில் நிறைவு செய்தார்.

டைவீசிய 18-வது ஓவரில் ஜடேஜா 19ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் தோனி 2 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி அடித்து பரபரப்பை எகிறச் செய்தார்.

கடைசி ஓவரை தோனியும், பராவோவும் சந்தித்தனர். மோகித் சர்மா பந்துவீசினார். நெருக்கடியான காலகட்டத்தில் பந்துவீசுவதில் வல்லவர் என்பதை மோகித் சர்மா நிரூபித்தார். ஒரு ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது.

திணறடித்த  மோகித் சர்மா

தோனிக்கும், பிராவோவுக்கும் யார்கர்களை இறக்கி மோகித் சர்மா திணறடித்தார். 4-வது பந்தில் பவுண்டரியும், கடைசி பந்தில் சிக்ஸரும் மட்டுமே தோனியால் அடிக்க முடிந்தது.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களுக்கு 195 ரன்கள் மட்டுமே சென்னை அணி சேர்த்தது. கிங்ஸ் லெவன் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணித் தரப்பில் ஆன்ட்ரூ டை 2விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close