[X] Close

பெங்களூருவில் இன்று 2-வது டி 20 ஆட்டம்: பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி - தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும்


indian-cricket-team

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 27 Feb, 2019 07:12 am
  • அ+ அ-

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி 20 ஆட்டம் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து குறுகிய வடிவிலான தொடர் களில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான இரண்டு டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விசாகப்பட்டினத்தில் நடை பெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2-வது ஆட்டம் பெங்க ளூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத் தில் இன்று இரவு நடைபெறுகிறது. தொடரில் 0-1 என பின்தங்கிய நிலையில் இந்திய அணி களமிறங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை இழப்பதில் இருந்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தப்ப முடியும்.

மிகவும் மந்தமான விசாகப்பட்டினம் ஆடு களத்தில் நடைபெற்ற முதல் டி 20 ஆட்டத்தில் இந்திய அணியால் வெறும் 126 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ஒரு கட்டத்தில் 69 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந் திருந்த இந்திய அணி அடுத்த 40 ரன்களை சேர்ப் பதற்குள் 6 விக்கெட்களை தாரை வார்த்தது. அதிலும் 3 விக்கெட்களை முக்கியமான தருணத்தில் அடுத்தடுத்து இழந்தது இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தது.

மேலும் விக்கெட்கள் கைவசம் இல்லாததால் தோனி நிதானமாக விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். எனினும் இறுதிக்கட்ட ஓவர்களில் அவர், பெரிய அளவிலான ஷாட்கள் விளையாட முயற்சிகள் மேற்கொண்ட போதும், மைதானத்தின் தன்மை அதற்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை.

சூழ்நிலைக்கேற்ப விளையாடியிருந்த தோனி 37 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்த போதிலும் அவர் மீதான விமர்சன கணைகள் தொடுக்கப் படாமல் இல்லை. இதனால் தோனி மீண்டும் ஒரு முறை நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். வெற்றியை கருத்தில் கொண்டு இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.

முதல் ஆட்டத்தில் கடைசி ஓவரில் ஆஸ்தி ரேலிய அணி 14 ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற போதிலும் இந்திய அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித்தரத் தவறினார். இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக சித்தார்த் கவுல் இடம் பெறக்கூடும். தினேஷ் கார்த்திக் இடமும் பறிபோக வாய்ப்பு உள்ளது.

அவரது இடத்தில் விஜய் சங்கர் இடம் களமிறக்கப்படக்கூடும். மேலும் சர்ச்சைக்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ள கே.எல்.ராகுல் முதல் ஆட்டத்தில் அரை சதம் அடித்ததன் மூலம் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்றுள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்திலும் ஷிகர் தவணுக்கு ஓய்வு கொடுக்கப்படக்கூடும். ஒருவேளை ஷிகர் தவணை அணி நிர்வாகம் களமிறக்க முடிவு செய்தால் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசிலீக்கக்கூடும்.

உலகக் கோப்பை தொடருக்கான அணியின் பரிசீலனையில் இருக்கும் ரிஷப் பந்த் முதல் ஆட்டத்தில் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால் அணியில் தனது இடத்தை வேரூன்றிக் கொள்ள உயர்மட்ட அளவிலான செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடிக்கு ரிஷப் பந்த் தள்ளப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரையில் தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கு கிறது. இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர்களை தனது சொந்த மண்ணில் இழந்ததற்கு பதிலடி கொடுப்பதில் அந்த அணி தீவிரம் காட்டக்கூடும்.

விசாகப்பட்டினம் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய நேதன் கவுல்டர் நைல், ஜேசன் பெஹ்ரன் டார்ப், பாட் கம்மின்ஸ் கூட்டணி மீண்டும் ஒருமுறை இந்திய பேட்டிங் வரிசைக்கு சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளது. இதேபோல் அந்த ஆட்டத்தில் அரை சதம் விளாசிய கிளென் மேக்ஸ்வெலிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

நேரம்: இரவு 7

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

ஆடுகளம் எப்படி?

பெங்களூருவில் வெப்பமான சூழ்நிலையே நிலவுவதால் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் தட்டையாகவே இருக்கும் என்றும் பந்து வீச்சுக்கு மந்தமாகவே செயல்படும் என்றும் கருதப்படுகிறது.

ஆடுகளம் தொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஐபிஎல் ஆட்டம் போன்று அதிக அளவிலான ரன்கள் குவிக்கக்கூடிய ஆடுகளமாக இருக்காது. ஆனால் அதிக அளவில் ரன்கள் சேர்க்க முடியும்.

கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாத ஆடுகளத்தையே தற்போது பயன்படுத்த உள்ளோம். இந்த ஆடுகளத்தை கடைசியாக விஜய் ஹசாரே போட்டியின் போது பயன்படுத்தினோம். 180 ரன்கள் வரை குவிக்க முடியும்” என்றார்.

 சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 ஆட்டத்தில் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 202 ரன்கள் குவித்திருந்தது.

 இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2008 முதல் டி 20 தொடரை இழந்தது இல்லை. கடைசியாக 2008-ம் ஆண்டு மெல்பர்னில் நடைபெற்ற ஒரே ஒரு டி 20 ஆட்டம் கொண்ட தொடரை இந்தியா இழந்திருந்தது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close