[X] Close

ஆஸி.க்கு எதிரான டி 20-ல் கடைசி பந்தில் தோல்வி; சில நாட்களில் பந்துவீச்சு பலன் அளிக்காமலும் போகும்: உமேஷ் யாதவுக்கு ஜஸ்பிரித் பும்ரா ஆதரவு


bumra-support-for-umesh-yadav

  • kamadenu
  • Posted: 26 Feb, 2019 10:39 am
  • அ+ அ-

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் இந்திய அணி கடைசி பந்தில் தோல்விஅடைந்த நிலையில், சில நாட்களில் இறுதி கட்ட ஓவர்களின் பந்து வீச்சு பலன் அளிக்காமல் போகும் என அணியின் சக வீரரான உமேஷ் யாதவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டி 20 ஆட்டத்தில் இந்திய அணி கடைசி பந்தில் தோல்வியடைந்தது. 127 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு கடைசி இரு ஓவர்களில் 16 ரன்கள் தேவையாக இருந்தது. 19-வது ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ரா வெறும் இரு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த நிலையில் இரு விக்கெட்களையும் கைப்பற்றி வெற்றிக்கான வாய்ப்பை அதிகரித்தார்.

கடைசி ஓவரில் 14 ரன்களை ஆஸ்திரேலிய அணி சேர்க்க வேண்டும் என்ற கட்டத்தில் உமேஷ் யாதவின் பந்து வீச்சு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. முதல் பந்தில் ரிச்சர்ட்சனும், 5-வது பந்தில் பாட்கம்மின்ஸும் பவுண்டரி அடிக்க ஆட்டம் ஆஸ்திரேலிய அணியின் பக்கம் சாய்ந்தது. எனினும் கடைசி பந்தில் இரு ரன்கள் தேவை என்ற நிலையில் மோசமான பீல்டிங்கால் ஆட்டத்தை டையில் முடிக்க கிடைத்த வாய்ப்பையும் இந்திய அணி தவறவிட்டது.

ஆட்டம் முடிவடைந்ததும் உமேஷ் யாதவின் கடைசி ஓவர் குறித்து ஜஸ்பிரித் பும்ரா கூறியதாவது:இது நிகழக்கூடியதுதான், இறுதி கட்ட ஓவர்களில் பந்து வீசுவது என்பது எந்த சூழ்நிலையிலும் கடினமானதுதான். இது எப்போதுமே இரு வழிகளில் செல்லும். சிலசமயங்களில் வாய்ப்பு என்பது இரு அணிகளுக்கும் சம அளவில் இருக்கும்.

முடிந்தவரை சிறப்பாக முயற்சிக்க வேண்டும், திட்டத்தை செயல்படுத்துவதிலும் தெளிவாக இருக்க வேண்டும். சில தினங்களில் இது வேலை செய்யும், சில தினங்களில் வேலை செய்யாது. கவலைப்பட வேண்டியது ஒன்றும் இல்லை. ஆட்டத்தை நெருக்கமாக கொண்டு சென்று முடிவை எங்களுக்கு சாதகமான வகையில் பெற விரும்பினோம். ஆனால் இது நடக்கவில்லை, பரவாயில்லை.

இந்த ஆடுகளத்தில் இலக்கை தெரிந்து கொண்டு விளையாடுவது சிறிது வித்தியாசமானது. இலக்கு சிறியதுதான், அதனால் ஒருமுறை பவுண்டரி அடித்துவிட்டால் அதிக ஆபத்துகளை நீங்கள் எடுக்க வேண்டியது இல்லை. இந்த ஆடுகளத்தில் பாதுகாப்பான ஸ்கோர் என்ன என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இதுதான் வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கருதுகிறேன்.

ஆஸ்திரேலிய அணி பவுண்டரி அடித்த நேரங்களில் எல்லாம் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்து கொண்டே இருந்தனர். முடிந்தவரை நாங்கள் ஆட்டத்தை எங்கள் பக்கம் இழுக்க பார்த்தோம். ஆனால் இதுபோன்ற ஆடுகளங்களில் 140 முதல் 145 ரன்கள் வரை சேர்த்திருந்தால் சிறப்பான ஸ்கோராக இருந்திருக்கும்.

பந்துகள் மிகவும் தாழ்வாக வந்ததால் பெரிய அளவிலான ஷாட்கள் மேற்கொள்வது கடினமாக இருந்தது. இதுபோன்ற ஆடுகளங்களில் இலக்கை துரத்துவது என்பது எப்போதுமே கடினம்தான். நாங்கள் 15 முதல் 20 ரன்களை குறைவாக சேர்த்துவிட்டோம். ஆனால் போராடுவதற்கான இலக்கை அமைத்தோம். அனைவருமே சிறிது கூடுதல் பொறுப்பை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் கிரிக்கெட்டில் இதுபோன்று நிகழவேச் செய்யும்.

இவ்வாறு ஜஸ்பிரித் பும்ரா கூறினார்.

பும்ரா இந்த ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசி 16 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த நிலையில் 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அவர், ஒட்டுமொத்தமாக வீசிய 24 பந்துகளில் 18-ல் ஒரு ரன் கூட சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close