[X] Close

4 பந்துகளில் 4 விக்கெட்: அயர்லாந்தை அலறவிட்ட ரஷித் கான்: டி20 தொடரை அபாரமாக வென்றது ஆப்கானிஸ்தான்


rashid-khan-claims-four-wickets-in-four-balls-as-afghanistan-clean-sweep-ireland

  • போத்திராஜ்
  • Posted: 25 Feb, 2019 13:51 pm
  • அ+ அ-

 

டேராடூன்,

டேராடூனில் நேற்று நடந்த அயர்லாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான், 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையைப் படைத்தார். அந்த அணியின் பேட்ஸ்மேன் முகமது நபி 36 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

ஆப்கானிஸ்தான், அயர்லாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் நடந்தது. 3-வது போட்டி நேற்று நடந்த நிலையில், டாஸ்வென்ற அயர்லாந்து அணி பீல்டிங் செய்தது.

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது.ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள், நடுவரிசை சராசரியாக 20 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

ஆனால், நடுவரிசையில் 5-வது வீரராக களமிறங்கிய முகமது நபி அயர்லாந்து பந்துவீச்சை நொறுக்கி எடுத்துவிட்டார். 28 பந்துகளில் அரைசதம் அடித்த முகமது நபி அடுத்த 8 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். 36 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து முகமது நபி ஆட்டமிழந்தார். இதில் 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.  அயர்லாந்து சார்பில் ராங்கின் 3 விக்கெட்டுகளை வீழத்தினார்.

211 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.

அயர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் கெவின் ஓ பிரையன் நிலைத்து பேட் செய்து 47 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 3 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் அடங்கும்.

தொடக்கத்தில் இருந்தே அபாரமாக பந்துவீசிய ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  ரஷித் கான் தான் வீசிய 18-வது ஓவரில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதாவது, 16-வது ஓவரின் கடைசிப்பந்தில் ஓபிரையன் ஆட்டமிழந்தார். அதன்பின் 18-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் டாக்ரெல் 18 ரன்களில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2-வது பந்தில் கெட்கேட் 2 ரன்களில் விக்கெட் கீப்பர் ஷபிபுல்லாவால் ஸ்டெம்பிக் செய்யப்பட்டார். 3-வது பந்தில் சிமி சிங் எல்பிடபிள்யு முறையில் டக்அவுட்டில் வெளியேறினார்.

4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தியது, டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இது 2-வது முறையாகும். இதற்கு முன், இலங்கை வீரர் லசித் மலிங்கா இதேபோன்ற சாதனையைச் செய்துள்ளார்.

மேலும், டி20 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை பலமுறை எடுத்துள்ளவர்களில் 4-வதுவீரர் எனும் பெருமையை ரஷித் கான்  பெற்றார். இதற்கு முன், இலங்கை வீரர் அஜெந்தா மென்டிஸ், பாகிஸ்தான் வீரர் உமர் குல், தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் ஆகியோர் வீழத்தி இருந்தனர். இந்த தொடரில் ரஷித் கான்  மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆட்டநாயன், மற்றும் தொடர் நாயகன் விருதை முகமது நபி பெற்றார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close