[X] Close

பும்ரா உழைப்பு வீண்: கடைசிப் பந்தில் ஆஸி. த்ரில் வெற்றி: இந்தியா சொதப்பல் பேட்டிங்; தாரைவார்த்த உமேஷ் யாதவ்


india-lost-in-t20

நேதன் கவுல்டர் நைல் பந்தில் போல்டான தினேஷ் கார்த்திக்.

  • kamadenu
  • Posted: 25 Feb, 2019 08:07 am
  • அ+ அ-

இந்திய அணியின் சொதப்பலான பேட்டிங், உமேஷ் யாதவின் கட்டுக்கோப்பில்லாக கடைசி ஓவர் போன்ற மோசமான செயல்பாட்டால் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடைசி ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை இந்தியா சேர்த்தது என்பதே காமெடியான விஷயம். ஒட்டுமொத்த பேட்டிங் தோல்வியின் அடையாளம். ஆனால், இந்தியாவின் பேட்டிங்கைக் காட்டிலும் மோசமாக ஆஸி. வீரர்கள் பேட் செய்து கடைசிப் பந்தில் வெற்றிபெற்றதை எப்படி மதிப்பிடுவது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 40 பந்துகளில் 38 ரன்கள் வெற்றிக்குத் தேவை 8 விக்கெட்டுகள் கையில் இருந்தது, அதன் பிறகுதான் சரிவு.

இந்திய பேட்டிங்கில் ‘தோனி நின்றதால்தான் இந்த ஸ்கோராவது வந்தது’ என்ற சொத்தை வாதம் இதில் எடுபடாது ஏனெனில் சாஹலுடன் 8-9 சிங்கிள்களை மறுத்து ஸ்ட்ரைக்கை வைத்திருந்தவர் என்ன செய்தார்? ரிச்சர்ட்சன், கமின்ஸ், கூல்ட்டர் நைல் பந்து வீச்சை இவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பெரிய அனுபவ வீரர்தான், இவர் நினைத்தபோது பவுண்டரிகளை விளாச என்ன எதிரணி பவுலர்கள் என்ன வீதியில் வீசுபவர்களா? கடைசியில் 81 பந்துகளில் ஒரு பவுண்டரிதான். இதுதான் இந்திய அணியை தோல்விக்கு இட்டுச் சென்றது என்பது மிகையல்ல.

 இதுபோன்று குறைந்த ஸ்கோர் செய்யும் போட்டியில் எதிரணி வலுவாக இருந்தால், முடிவு எப்போதோ கிடைத்திருக்கும், அதாவது ஸ்மித், வார்னர் இருந்தால், ஆட்டம் தலைகீழ். இல்லாவிட்டால் கடைசி ஓவர்வரை இப்படி இழுத்துக்கொண்டிருக்கும்.

இந்த போட்டியில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் டி20 போட்டியில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய மைல்கல்லை எட்டினார். கேப்டன் கோலி 24 ரன்கள் சேர்த்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 போட்டியில் 500 ரன்கள் சேர்த்த பெருமையைப் பெற்றார். தோனி மோசமான ஸ்ட்ரைக் ரேட்டைப் பெற்றார்.

19-வது ஓவரில் 2 ரன்களை மட்டும் வழங்கி, 2 விக்கெட்டுகளை எடுத்துக்கொடுத்து ஆட்டத்தையும் இந்தியாவின் பக்கம் ஜஸ்பிரித் பும்ரா திருப்பிவிட்டார். ஆனால், பும்ராவின் ஒட்டுமொத்த உழைப்பையும், ரசிகர்களின் கனவையும் உமேஷ் யாதவ் உடைத்து, வீணடித்துவிட்டார்.

ஏறக்குறைய உமேஷ் யாதவின் கட்டுக்கோப்பில்லாத, திட்டமிடாத கடைசி ஓவர் பந்துவீச்சுதான் தோல்விக்கு காரணம் என்பது ரசிகர்களின் வருத்தமாகும். கடைசி ஓவரை பும்ரா வீசியிருந்தால், நிச்சயம் சாதகமான முடிவு இந்திய அணிக்கு கிடைத்திருக்கும். அதாவது 19-வது ஓவரை உமேஷ் யாதவும், கடைசி ஓவரை பும்ராவும் வீசுமாறு வைத்திருக்கலாம்.

கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருப்பதும் ஆஸி அணியின் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் இல்லை, அனுபவமற்ற வீரர்கள். நிச்சயம் ரன் குவிப்பதைக் பந்துவீச்சாளர் நினைத்திருந்தால் கட்டுப்படுத்தி இருக்க முடியும். ஆனால், பீல்டிங்கை ஒருபுறம் அமைத்துவிட்டு, உமேஷ் யாதவ் ஒருபுறம் பந்தவீசியது, ரசிகர்களை ஆத்திரத்தில் தள்ளியது, கோலியின் முகத்திலும் கோபம் கொப்பளித்தது.

‘மிட்விக்கெட்’, ‘லெக்சைடில் பீல்டிங்’ அமைத்துவிட்டு, ‘ஆப்சைடில்’ உமேஷ் பந்துவீசியதை என்னவென்று சொல்வது. இதற்காக விராட் கோலி ‘லெக்’ திைசக்கும் மாறினார். கடைசி ஓவரில் மட்டும் 2 பவுண்டரிகள் அடிக்கவிட்டது உமேஷ் யாதவ் சூழலுக்கு ஏற்றார்போல் பந்துவீச தகுதியில்லாத வீரர் என்பதை நிரூபித்தது

கடைசிப்பந்தில் 2 ரன்கள் தேவை என்கிறபோது, அதைக்கூட தடுக்கும் வகையில் உமேஷ் பந்துவீசி இருக்கலாம் அதையும் கோட்டைவிட்டுவிட்டார். ஒட்டுமொத்தத்தில் கையில் கிடைத்த வெற்றியை, உமேஷ் யாதவ்  ஆஸி.க்கு தாரைவார்த்தார் என்றுதான் ரசிகர்கள் புலம்புகின்றனர்.  4 ஓவர்கள் பந்துவீசிய உமேஷ் யாதவ் 35 ரன்கள்(8.75) வாரி வழங்கி மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பினாலும், பந்துவீச்சில் பும்ரா ஆஸி. அணியை நெருக்கடிக்கு ஆளாக்கினார். அதன்பின் சாஹல், குருணால் பாண்டியா, மார்கண்டே  ஆகியோர் ஆஸி. பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் தரும்வகையில் தங்களின் பணியைச் செய்தனர். ஆனால், உமேஷ் யாதவ் தனது மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திவிட்டார், உலகக்கோப்பை அணியில் இருப்பாரா?

இந்திய அணியில் பேட்டிங்கை பொறுத்தவரை நேற்று பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. ரோஹித் சர்மா, ரிஷப்பந்த், தினேஷ் கார்த்திக், குருணால் பாண்டியா ஆகிய பேட்ஸ்மேன்கள் இருந்தும் வலுவான ஸ்கோரை இந்திய அணி எடுக்கமுடியவில்லை. பல போட்டிகளில் சொதப்பிய கே.எல். ராகுல் ஃபார்முக்கு திரும்பனார், ஒரு மாதத்துக்கு பின் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பிய கோலியும் 2-வது விக்கெட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் சேர்த்தார்.

ஆனால், தொடர்ந்து ஆட்டங்களில் பங்கேற்றுவரும் ரிஷப்பந்த், குருணால் பாண்டியா, தோனி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் நேற்று என்ன செய்தார்கள்? ஒரு அணியில் 3 விக்கெட் கீப்பர்கள் தேவையா என்பது புரியவில்லை.

 ரிஷப்பந்த், தினேஷ் கார்த்திக், தோனி இதில் ஒருவருக்கு வாய்ப்பளித்தால் போதுமே. விஜய் சங்கரை ஆல்ரவுண்டர் அந்தஸ்தில் வாய்ப்பு அளித்திருக்கலாம். ரிஷப்பந்த் மிக அதிகமாக அவசரப்படுகிறார். அவரின் தேவையில்லாத அவசரமே விக்கெட்டை பலபோட்டிகளில் பறிகொடுக்க காரணமாக இருந்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில், குருணால் பாண்டியாவுக்கு ரன் எடுக்க வாய்ப்பு கொடுக்காத தினேஷ் கார்த்திக்கால் தோல்வி அடைந்தோம் என்று ரசிகர்கள் தினேஷ் கார்த்தை பலிகடாவாக்கினார்கள், இதை மறைமுகக் காரணமாக்கி ஒருநாள் தொடரில் கார்த்திக்கை நீக்கினார்கள். தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடியநிலையிலும் ஒருநாள் தொடருக்கு நீக்கப்பட்டுள்ளார். இந்த மனநிலையில் ஒருவீரரால் உற்சாகமாக விளையாட முடியுமா.

ஆனால், நேற்றைய ஆட்டத்தில் ஏறக்குறைய 9 முறை சாஹல் ஒரு ரன் ஓடிவந்தபோது தோனி மறுத்துவிட்டார். இந்த 9 பந்துகளில் குறைந்தபட்சம் 5 ரன்கள் ஓடி இருந்தாலே அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் கிடைத்திருக்கும், வெற்றி பெற்றிருக்கலாம். சாஹல் அழைப்பை ஏற்று ரன் எடுக்க ஓடிவராத தோனியை என்ன சொல்லப்போகிறார்கள். தினேஷ் கார்த்திக் செய்தால் மட்டும் தவறா?

தோனி களத்தில் நீடித்து நின்றதால், இந்திய அணியால் ரன் சேர்க்க முடிந்தது என்ற தர்க்கம்மட்டுமே வைக்க முடியும். உலகக்கோப்பைப் போட்டி நெருங்கும் வேளையில் அணயில் தோனி போன்ற அனுபவ வீரரின் பேட்டிங் மற்ற வீரர்களுக்கு உதாரணமாக இருந்திருக்க வேண்டும், குறைவான ஸ்கோர் இருக்கும்போது அவரின் பேட்டிங் அணியை தூக்கி நிறுத்தும்வகையில் அமைய வேண்டும்.

ஆனால், தோனியின் நேற்றைய பேட்டிங் ரசிகர்களை வெறுப்பின் உச்சத்துக்கு தள்ளிவிட்டது. கடைசி 81 பந்துகளில் இந்திய அணி ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. தோனியும் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்தார்.

 உலகக்கோப்பை அணியில் தோனிக்கு நிச்சயம் இடம் உண்டு, மறுப்பதற்கில்லை. ஆனால், இந்திய அணியில் இடம் ெபறுவதற்கு திறமையான இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். சஞ்சு சாம்ஸன், ஸ்ரேயாஸ் அய்யர், மயங்க் அகர்வால், விஹாரி என பல வீரர்கள் இருந்தும் தொடர்ந்து தோனிக்கு வாய்ப்பளிப்பது ஏன்? சிறந்த ஆல்ரவுண்டர் அஸ்வின் ஓரம் கட்டப்படுவது ஏன்.

நியூசிலாந்து டி20 இறுதிஆட்டத்தில் ரன்எடுக்காத தினேஷ் கார்த்திக் ஒருநாள் தொடருக்கு  நீக்கப்பட்ட நிலையில், இன்று தோனி செய்த செயலை என்னவென்று சொல்வது. தோனி களத்துக்கு வந்தபின் அவரால் பவுண்டரி அடிக்க முடியவில்லை.

ஒட்டுமொத்தமாக கடந்த 2009-ம் ஆண்டுக்குப்பின் டி20 போட்டிகளில் இந்திய அணி வீரர் ஒருவரின் மிகமோசமான ஸ்ட்ரைக் ரேட்டை தோனி நேற்று பெற்றுள்ளார். கடைசியாக 2009-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக 35 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்த ஜடேஜாவின் 71.42 ஸ்ட்ரைக் ரேட்தான் மிகமோசம். அதற்கு அடுத்தார்போல் தோனி நேற்று 37 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து தனது ரேட்டை78.37 ஆகக் குறைத்துள்ளார்(ஐசிசி புள்ளிவிவரம்). இதேபேட்டிங் தோனிக்கு உலகக்கோப்பையில் தொடரக்கூடாது என்பதே ரசிகர்களின் விருப்பம்.

டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் கே.எல்.ராகுல் 50, கோலி 24, தோனி 29 ஆகியோரைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா(5), ரிஷப்பந்த்(3), பாண்டியா(1), தினேஷ் கார்த்திக்(1) ஆகியோர் ஒற்றை இலக்க ரன் சேர்த்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ஆஸ்திரேலியத் தரப்பில் கோல்டர் நீல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

127 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது.

ஸ்டோனிஸ்(1), பிஞ்ச்(0) ஆகியோர் தொடக்கத்திலேயே வெளியேறியதால், ஆஸி. நெருக்கடிக்கு ஆளானது. பும்ரா பந்துவீசும்வரை அந்தநெருக்கடி தொடர்ந்தது. ஆனால், பும்ரா ஓவர் முடிந்து சாஹல், மாரகண்டே பந்துவீச வந்தபோது, மேக்ஸ்வெல், ஷார்ட் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். குறிப்பாக மேக்ஸ்வெல் தொடக்கத்தில் சாஹல், மார்கண்டே பந்துவீச்சை வெளுத்து வாங்கிவி்ட்டார்.  இருவரின் ஆட்டத்தால் ஆஸி. அணி வெற்றியை நோக்கிபயணித்தது.

3-வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர். அரைசதம் அடித்த மேக்ஸ்வெல் 56 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஷார்ட் 37 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். 101 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி வலுவாக இருந்தது. வெற்றிக்கு 26 ரன்களும், கையில் 6 விக்கெட்டுகளும் இருந்தன.

ஆனால், அடுத்த 12 ரன்களைச் சேர்ப்பதற்குள் அடுத்த 3 விக்கெட்டுகளை ஆஸி. இழந்தது. குறிப்பாக பும்ரா வீசிய 19-வது ஓவரில் ஹேண்ட்ஸ்கம்ப்(13), கோல்டர் நீல்(4) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தனர்.இதில் பும்ரா வீசிய யார்கர் பந்துவீச்சில் கூல்டர் நீல் லெக் ஸ்டெம்ப் தூக்கிவீசப்பட்டது அழகு.

கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. அனுபவமில்லாத கம்மின்ஸ், ரிச்சர்ட்ஸன் களத்தில் இருந்தனர். உமேஷ் யாதவின் சொத்தை பந்துவீச்சால் 2வது, 4-வது பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. கடைசி பந்தில் 2 ரன் வெற்றிக்கு தேவைப்பட்டநிலையில் எளிதாக அடித்து கம்மின்ஸ், ரிச்சர்ட்ஸன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 3 விக்கெட் வீழ்த்திய கோல்டர்நீல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியத் தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆட்ட நாயகனாக நேதன் கூல்ட்டர் நைல் தேர்வு செய்யப்பட்டார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close