[X] Close

எங்களது தன்னம்பிக்கையே பாழானது: இலங்கைக்கு எதிரான வரலாற்றுத் தோல்வியில் டுபிளெசிஸ் கடும் ஏமாற்றம்


faf-du-plessis-south-africa-captain-srilanka-defeat-cricket

  • முத்துக்குமார்
  • Posted: 24 Feb, 2019 16:55 pm
  • அ+ அ-

எழுச்சியுற்ற இந்திய அணி தென் ஆப்பிரிக்கா போய் உதைவாங்கியது, பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை உருக்குலைந்தது முன்னதாக ஆஸ்திரேலியா அவமானப்பட்டது, அதேதான் இலங்கைக்கு நடக்கும் என்று எதிர்பார்த்தவர்களின் நம்பிக்கைக்கு மாறாக இலங்கை அணி துணைக்கண்டங்களுக்காக தென் ஆப்பிரிக்காவில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெற்று அதிசயிக்க வைத்துள்ளது. 

“பெரிய அளவில் நம்பிக்கை பாழானது. இந்தத் தொடர் வரை உள்நாட்டில் நாங்கள் தாதா, எங்களை வீழ்த்த முடியாது என்று நினைத்திருந்தோம், ஆனால் கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் வேறு மாதிரிப் போய்விட்டது.

நாங்கள் இலங்கை அணியை சாதாரணமாக எடுத்துக் கொண்டோம் என்கிறார்கள், அப்படியல்ல தயாரிப்பிலும் பயிற்சியிலும் நல்ல தயாரிப்பில்தான் இருந்தோம். நீண்ட சீசன் என்பதால் முடிவில் வீரர்கள் களைப்படைந்திருக்கலாம். 

மிகவும் ஏமாற்றகரமான தோல்வி. இது என் சொந்தக் கருத்து அணியின் பார்வையிலும் கூட அப்படித்தான் இருக்க முடியும். 

கடினமான பிட்ச்களை போட்டு எதிரணியினரை வறுத்தெடுக்கலாம் என்ற எண்ணம் நிச்சயமாக இல்லை. அணியில் இருப்பவர்கள் அப்படி நினைத்தால் அது ஒரு சாக்குப் போக்காகவே இருக்க முடியும். ஓய்வறையிலும் இப்படி யாரும் பேசி நான் பார்க்கவில்லை. கடந்த காலங்களில் நடந்த போட்டிகளின் முடிவுகள் இப்போது விளையாடும் போட்டிகளில் எந்த ஒரு தாக்கத்தையும் செலுத்தப் போவதில்லை. 

ஒரு பேட்ஸ்மெனாக எங்கு சென்றாலும் அதற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். 

இது நல்ல பிட்ச்தான் நான் பேட்டிங் செய்த போது கூட பேட்டிங்குக்குச் சாதகமாகவே இருந்தது, ஆனால் இரு அணிகளுமே இந்தத் தொடரில் மோசமாகவே பேட் செய்தன. 2 நாட்களில் 30 விக்கெட்டுகள் ஏன் விழுந்தன என்பதை என்னால் கூற முடியவில்லை. விக்கெட்டுகளை எளிதாகக் கொடுத்தோம், மன ரீதியாக மென்மையாக இருந்தோம். 

தொடர் முழுதும் எங்கள் பேட்ஸ்மென்கள் விக்கெட்டுகளைத் தூக்கி எறிந்தனர். பிட்சை நோக்கி யாரும் குறை கூறவில்லை. அணியிடத்தில்தான் மிகப்பெரிய ஏமாற்றம் இருக்கிறது. 99% அவுட்டுகள் எளிதாகவே நாங்கள் விக்கெட்டுகளைக் கொடுத்ததால் விளைந்ததே. ஆகவே எங்களுக்குத்தான் ஆத்மபரிசோதனை தேவைப்படுகிறது. 

இந்த இலங்கைப் பந்து வீச்சுக்கு எதிராக எங்கள் டாப் பேட்ஸ்மென்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை, அதுதான் தோல்விக்குக் காரணம்” என்றார் டுபிளெசிஸ்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close