[X] Close

புறக்கணிப்பதைவிட உலகக்கோப்பையில் பாகிஸ்தானை நாம்  தோற்கடிப்பதுதான் முக்கியம்: கவாஸ்கர் யோசனை


india-lose-by-not-playing-pak-in-world-cup-says-gavaskar-urges-imran-to-act

  • போத்திராஜ்
  • Posted: 21 Feb, 2019 16:29 pm
  • அ+ அ-

உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாடாவிட்டால், இந்தியாவுக்குத்தான் இழப்பு என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுவதை புறக்கணிக்க வேண்டும் என்று இந்தியஅணி வீரர் ஹர்பஜன் சிங் வலியுறுத்திய நிலையில், கவாஸ்கர் விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆங்கில வாரஏடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி  விளையாடினால் யார் வெல்வார். நான் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியைக் கூட பற்றிப் பேசவில்லை. அது அனைவருக்கும் தெரியும். இந்தியாதான் வெற்றி பெறும். ஆனால், நாம் விளையாடாமல் போனால், பாகிஸ்தான் வெற்றி பெறும். ஆம், அவர்கள் எளிதாக 2 புள்ளிகளைப்பெறுவார்கள்.

உலகக்கோப்பைப் போட்டியில் இதுவரை ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை நமது அணி  தோற்கடித்துள்ளது. ஆதலால், நாம் பாகிஸ்தானை தோற்கடித்தால் நமக்கு 2 புள்ளிகள் கிடைக்கும்.  விளையாடாவிட்டால் அவர்களுக்கு புள்ளி கிடைக்கும். ஆதலால்,பாகிஸ்தான் அணி  போட்டியில் முன்னோக்கிச் செல்லாமல்  இருக்க நாம் உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், இந்த முறை நாம் பாகிஸ்தானுடன் விளையாடுவோமா என்ற கேள்விக்கு நான் நாட்டின் பக்கமே இருக்க விரும்புகிறேன். இந்திய அரசு என்ன விரும்பினாலும், என்ன முடிவு செய்தாலும் அதற்கு கட்டுப்பட வேண்டும். பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என்று அரசு முடிவு செய்தால், நான் அந்த முடிவுக்கு ஒத்துழைக்கிறேன்.

ஆனால், கடந்த 2007-ம் ஆண்டு முதல் நாம் பாகிஸ்தானுடன் நேரடியாக போட்டித்தொடர்களை விளையாடுவதைத் தவிர்த்துவருகிறோம். அதிலும் உலகக் கோப்பைப் போட்டி போன்ற அனைத்து அணிகளும் விளையாடும் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுவதை இந்திய அணி தவிர்த்தால் இழப்பு இந்தியாவுக்குத்தான். இந்த விஷயத்தை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். அனைவரின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

நாம் பாகிஸ்தானுடன் விளையாடாவிட்டால் என்ன நடக்கும். எனக்கு தெரியும், இந்தியா வலிமையான அணிதான், பாகிஸ்தானுடன் விளையாடாமல் 2 புள்ளிகளை ஒதுக்கிவிட்டால்கூட இறுதிப்போட்டி வரை செல்ல தகுதியான அணிதான். ஆனால், ஏன் அவர்களை தோற்கடித்துவிட்டு நாம் இறுதிப்போட்டிக்கு ஏன் முன்னேறக்கூடாது. அவர்கள் தகுதிபெறக்கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் விளையாடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐசிசியிடம் பிசிசிஐ வைக்கும் கோரிக்கை எடுபடாது. அது தோல்வி அடையும். புல்வாமாவில் நடந்த துயரமான சம்பவம் அனைவருக்கும் தெரியும். இந்த விஷயத்தை ஐசிசியிடம் எடுத்துச் சென்றால் அது பலன் அளிக்குமா எனத் தெரியாது. ஏனென்றால், இது இரு நாடுகளுக்கு இடையிலான விஷயம்.

இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close