[X] Close

அவுங்க தொடர்பே  வேண்டாம், உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் நாம் விளையாடக் கூடாது: ஹர்பஜன் சிங் ஆவேசம்


harbhajan-singh-says-india-should-boycott-pakistan-in-cricket-world-cup-2019

  • போத்திராஜ்
  • Posted: 19 Feb, 2019 13:38 pm
  • அ+ அ-

 

புதுடெல்லி

நமக்கு தேசம்தான் முக்கியம், உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதும் ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக கண்டனக் குரல்கள் தேசம் முழுதும் எழுந்துள்ளன.

பலமாநிலங்களில் உள்ள கிரிக்கெட் அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானிய வீரர்களின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு, எதிர்ப்பு காட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல், வரும் மே மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுன் இந்திய அணி விளையாடக் கூடாது என்று பல்வேறுத் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜூன் 16-ம் தேதி இங்கிலாந்தின் ஓல்டு டிராபோர்ட் நகரில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தனியார் செய்தி சேனலுக்கு நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

இங்கிலாந்தில் ஜூன் 16-ம் தேதி நடைபெறும் உலகக்கோப்பைப் போட்டியில்  பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும். அந்த ஆட்டத்தில் விளையாடக் கூடாது. இந்த தேசம்தான் நமக்கு முக்கியம். நாம் அனைவரும் நம்முடைய தேசத்துக்கும், ராணுவ வீரர்களுக்கும் துணையாக இருக்க வேண்டும். பாகிஸ்தானுடன் எந்தவிதமான உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது, அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து பரப்பி வருகிறது, பாகிஸ்தான் ஆதரவுடன் நமது வீரர்கள் மீது தீவிரவாதி நடத்திய தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது, நம்பமுடியாத வகையில் இருக்கிறது.

பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடாமல் போனால், ஏதேனும் புள்ளிகள் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. கவலைப்படவும் கூடாது.

இவ்வாறு ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, மும்பையில் உள்ள பிரபலமான கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியாவின்(சிசிஐ) செயலாளர் சுரேஷ் பாஃப்னாவும், பாகிஸ்தானுடனான உலகக்கோப்பை ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close