[X] Close

இந்திய அணியை  வீழ்த்தி வரலாறு படைப்போம்: பாக். முன்னாள் கேப்டன் மொயின்கான் சவால்


moin-khan-backs-pakistan-to-break-india-jinx-at-2019-world-cup

  • போத்திராஜ்
  • Posted: 13 Feb, 2019 11:22 am
  • அ+ அ-

 

கராச்சி, பிடிஐ

இங்கிலாந்தில் மே மாதம் நடைபெறும் 50 ஓவர்கள் உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நாங்கள் வரலாறுபடைப்போம், எங்களின் துரதிருஷ்டத்தையும் உடைத்தெறிவோம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொயின் கான் சவால் விடுத்துள்ளார்.

கடந்த 6 உலகக்கோப்பைப் போட்டிகளில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை என்ற வரலாறு இருந்து வருகிறது. மற்ற போட்டிகளில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றிருந்தாலும், உலகக்கோப்பையில் மட்டும் பாகிஸ்தானுக்கு துரதிருஷ்டம் துரத்திவிடுகிறது.

ஆனால், இங்கிலாந்தில் விரைவில் நடைபெற உள்ள உலகக்கோப்பைப் போட்டியில் ஜுன் 16ம் தேதி ஓல்ட் டிராபோர்டு நகரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி. அந்தப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி தங்களின் துரதிருஷ்டத்தை துரத்துவோம், வரலாறு படைப்போம் என்று மொயின் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள தனியார் சேனல் ஒன்றுக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் மொயின்கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:

உலகக்கோப்பைப் போட்டிகளில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதில்லை என்ற அவப்பெயர் எங்களுக்கு இருந்து வருகிறது. அந்தத் துரதிருஷ்டத்தை இந்த முறை நாங்கள் தகர்ப்போம். இந்திய அணியை உலகக்கோப்பையில் வீழ்த்தி புதிய வரலாறு படைப்போம். அந்த அளவுக்கு நம்பிக்கையான, திறமையான வீரர்கள் தற்போது பாகிஸ்தான் அணியில் இருக்கிறார்கள். இந்த முறையா இந்தியாவை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது.

இதை நான் எவ்வாறு சொல்கிறேன் என்றால், கடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியை எங்கள் வீரர்கள் வீழ்த்திஇருந்தார்கள். இங்கிலாந்தில் ஜூன் மாதம் இருக்கும் காலநிலை வேகப்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும். எங்களிடம் திறமையான பந்துவீச்சாளர்கள் இருப்பதால், இந்தியாவை வீழ்த்த முடியும் என நம்புகிறேன்.

இந்தியாவை வீழ்த்தப் போகும் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக, பக்கபலமாகநான் இருப்பது பெருமையாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் எங்கள் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள், உத்வேகத்தைப் பெற்றுள்ளார்கள்.

இங்கிலாந்தில் உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக, 3 வாரங்கள் பயிற்சியில் ஈடுபடப்போகிறோம். அப்போதுதான் இங்கிலாந்து காலநிலைக்கு வீரர்களைப் பழக்கமுடியும்.

இங்கிலாந்தில் ஜுன் மாதம் நிலவும் ஈரப்பதமான பருவநிலைக்கு ஏற்றார்போல் கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ளது. அங்குள்ள பருவநிலையை புரிந்து கொண்டு பந்துவீச எங்களால் முடியும்.

பாகிஸ்தானை வழிநடத்த சர்பராஸ் அகமெட் தகுதியானவர் என்று நினைக்கிறேன், அவரைச் சிறு வயதில் இருந்து எனக்குத் தெரியும். அவரைக் காட்டிலும் சிறந்த வீரர் வேறுயார் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை

இவ்வாறு மொயின்கான் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close