[X] Close

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி பிப்.15-ல் தேர்வு: டி 20-ல் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு?


rohit-sharma

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 10:00 am
  • அ+ அ-

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி 20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி தேர்வு வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. இதில் டி 20 தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என தெரிகிறது.

ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டி 20 ஆட்டம், 5 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டி 20 தொடரின் முதல் ஆட்டம் வரும் 24-ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 2-வது ஆட்டம் 27-ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

அதேவேளையில் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மார்ச் 2-ம் தேதி ஹைதராபாத்திலும், 2-வது ஆட்டம் 5-ம் தேதி நாக்பூரிலும், 3-வது ஆட்டம் 8-ம் தேதி ராஞ்சியிலும், 4-வது ஆட்டம் 10-ம் தேதி மொகாலியிலும், 5-வது ஆட்டம் 13-ம் தேதி டெல்லியிலும் நடைபெறுகிறது. இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு வரும் 15-ம் தேதி மும்பையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 30-ம் தேதி இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதால் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான குறுகிய வடிவிலான கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த தொடரில் விளையாடும் வீரர்கள், உலகக் கோப்பை தொடருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் பிம்பமாக இருக்க வேண்டும் என அணி நிர்வாகமும், தேர்வுக்குழுவும் விரும்புவதாக தெரிகிறது.

இதனால் உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டே வீரர்கள் தேர்வு இருக்கும் என கருதப்படுகிறது. பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,“விராட் கோலி அணிக்கு மீண்டும் திரும்புவதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒருநாள் போட்டிக்கான அணித் தேர்வில் எந்தவித பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படாது. ஏனெனில் உலகக் கோப்பைக்கு முன்னதாக 5 ஆட்டங்கள் மட்டுமே விளையாட உள்ளோம்.

தற்போது இருவார காலம் உள்ளதால் ஒருநாள் போட்டி வீரர்கள் சிறப்பான வகையில் ஓய்வெடுப்பார்கள். பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுவார்கள். ஆனால் அணியில் இருந்து நீக்கவோ, ஓய்வு கொடுக்கவோ மாட்டோம். ஐபிஎல் தொடரிலும் வீரர்களின் பணிச்சுமையை அதிகம் கவனத்தில் கொள்வோம்.

தற்போதைய நிலையில் அணியில் இரு இடங்களே உள்ளன. 2-வது விக்கெட் கீப்பருக்கான தேர்வில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் இடையே போட்டி நிலவுகிறது. இதேபோல் 3-வது தொடக்க வீரருக்கான இடமும் காலியாகவே உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் குறைந்தது முதல் 3 ஆட்டங்களிலும் எந்தவித சோதனை முயற்சிகளையும் இந்திய அணி நிர்வாகம் மேற்கொள்ளாது.

தற்போதைய நிலையில் அணித் தேர்வில் எந்தவித ஆச்சரியமும் இருக்காது. பும்ரா, புவனேஷ்வர் குமார், மொகமது ஷமி ஆகியோர் உடற்தகுதியுடன் அணித்தேர்வுக்கு ஆயத்தமாக உள்ளனர். இவர்களுடன் கலீல் அகமதும் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு பந்து வீச்சு கூட்டணி பரிசோதிக்கப்படும்” என்றார்.

இதற்கிடையே கடைசி இரு ஆட்டங்களில் ஷிகர் தவணுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு கே.எல்.ராகுலின் திறன் பரிசோதிக்கப்படக்கூடும் எனவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close