[X] Close

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அமித் பண்டாரிக்கு அடி உதை: அதிருப்தி வீரர் கைவரிசையா? படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி


amit-bhandhari-former-indian-cricketer-hospitalised-hit-by-an-incumbent-player

  • முத்துக்குமார்
  • Posted: 11 Feb, 2019 19:55 pm
  • அ+ அ-

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அமித் பண்டாரியை ஹாக்கி மட்டை, இரும்புக்கழி ஆகியவற்றைக் கொண்டு ரவுடிகள் கும்பல் ஒன்று தாக்கியதையடுத்து படுகாயம் அடைந்த அவர் டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யு-23 அணிகளுக்கான தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயிண்ட் ஸ்டீபன் மைதானத்தில் நுழைந்தவர்கள் அணித்தேர்வாளரான அமித் பண்டாரியை ஹாக்கி மட்டை, இரும்பு ராடு கொண்டு அவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்த தலை, காது உள்ளிட்ட இடங்களில் ரத்தம் வழிய சந்த் பரமானந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தினத்தின் முதல் போட்டி முடிவடையும் போது இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.  தாக்க வந்தவர்களை டெல்லி கிரிக்கெட் சங்க அதிகாரிகளும் ஊழியர்களும் தடுக்க முனைந்த போது ‘போய் விடுங்கள் சுட்டு விடுவோம்’ என்று கும்பல் மிரட்டியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 

அடிக்க வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் அமித் பண்டாரி ஓடினார், கொஞ்சம் தள்ளிப்போனதால் தப்பினார், இல்லையெனில் காயம் இன்னும் தீவிரமாக மாறியிருக்கும். 

கவுதம் கம்பீர் இதனை நடத்திய வீரர்களாகட்டும் யாராகட்டும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொங்கியுள்ளார். 

இது குறித்து டிடிசிஏ தலைவர் ரஜத் சர்மா கூறும்போது, “அணித்தேர்வில் அதிருப்தியடைந்த வீரரின் செயலா இது என்பதை ஆராய்ந்து வருகிறோம். எனக்குக் கிடைத்த தகவல்களின் படி யு-23 தேசிய அணியில் தேர்வு ஆகாத வீரர் ஒருவரின் செயல் என்று கூறுகின்றனர். டெல்லி போலீஸ் கமிஷனரிடம் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறேன்.  எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவிருக்கிறோம்” என்றார்.

ஒரு மணியளவில் 3 வீரர்கள் அமித் பண்டாரியை நெருங்கி அவரைத் தாக்கியதாக டிடிசிஏ அதிகாரி தனியார் தொலைக்காட்சியில் தெரிவித்தார். பண்டாரிக்கு தலையில், காதுகளில் மற்றும் கால்களில் அடிபட்டதையடுத்து 7 தையல்கள் போடப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தச் சம்பவம் டெல்லி கிரிக்கெட் அரங்கில் பரபரப்பாகியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close