[X] Close

முடிவை மாற்றிய பில்லிங்ஸின் காட்டடி பேட்டிங்: சொந்த மண்ணில் சென்னைக்கு முதல் வெற்றி: கொல்கத்தா போராட்டம் வீண்


chennai-pull-off-heist-against-kolkata-by-5-wickets-win

அரைசதம் அடித்த மகிழ்ச்சியை பேட்டை உயர்த்தி ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட சிஎஸ்கே வீரர் பில்லிங்ஸ்.

  • போத்திராஜ்
  • Posted: 11 Apr, 2018 00:43 am
  • அ+ அ-

சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியி்ல பரபரப்பான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது தோனி தலைமையிலான சென்னைசூப்பர் கிங்ஸ்.

203 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடுவரிசை ஆட்டக்காரர் பில்லிங்ஸின் காட்டடி பேட்டிங் வெற்றிக்கு பெரிதும் உதவியது. ஆட்டநாயகனாகவும் பில்லிங்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

11-வது சீசன் ஐபிஎல் போட்டிகள் நடந்து வருகின்றன. 5-வது போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம்அரங்கில் நேற்று நடந்தது. காவிரி விவகாரம் தொடர்பாக போட்டி நடக்குமா என்ற சூழல் மாலை நிலவியது. அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடுமையான போராட்டம் நடத்தியதால் அண்ணா சாலை, திருவல்லிக்கேணி,சேப்பாக்கம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி 2மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதன் காரணமாக பெரும்பாலான ரசிகர்கள் ஆட்டத்தைக் காண வரவில்லை. குறைந்த அளவிலான ரசிகர்களே ஆட்டத்தைக் காண வந்திருந்தனர்.

டாஸ்வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மண்ணில்போட்டி நடந்ததால், அரங்கில் அமர்ந்திருந்த பெரும்பகுதி ரசிகர்கள் மஞ்சள் நிறஆடை அணிந்து சிஎஸ்கே, சிஸ்கே என்று முழுக்கமிட்டவாறு இருந்தனர்.

கொல்கத்தா அணி வீரர்கள் சுனில் நரேன், கிறிஸ் லின் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அலற விட்ட அதே விளாசலை சாஹர் வீசிய முதல் ஓவரில் நரேன் வெளிப்படுத்தினார். சிஎஸ்கே என சத்தமிட்ட ரசிகர்கள் சிலநிமிடங்கள் அமைதியானார்கள் முதல் ஓவரில் நரேன் 2 சிக்சர்கள் உள்ளிட்ட18 ரன்கள் எடுத்ததைப் பார்த்து கூல்கேப்்டன் தோனி பதற்றமடைந்தார்.

2-வது ஓவரிலே அணுபவ வீரர் ஹர்பஜன் வரவழைக்கப்பட்டார். அதற்கு பலனும் கிடைத்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆபத்தான நரேன் 12 ரன்களில் ஹர்பஜன் சுழலில் வெளியேறினார்.

அடுத்து உத்தப்பா களமிறங்கினார். உத்தப்பா தனது பங்கிற்கு ரவிந்திர ஜடேஜா பந்துவீச்சில் அடுத்தடுத்து இரு சிக்சர்களை விளாசியதால் ரன்ரேட் வேகமெடுத்தது. நிதானமாக பேட் செய்த கிறிஸ் லின் 22ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராணா 16 ரன்களில் வெளியேறினார். 80 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த கொல்கத்தா, அடுத்த 9 ரன்கள் சேர்ப்பதற்கள் உத்தப்பா(29ரன்கள்), ஆர்.கேசிங் 2 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளைஇழந்தது. இதனால், 89 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என இக்கட்டான நிலைக்கு வந்தது.

ஆனால், 6-வது விக்கெட்டுக்கு கேப்டன் தினேஷ் கார்த்திக், ஆன்ட்ரூ ரஸல் ஜோடி அரங்கை அதிர வைத்தது. அதிலும் ரஸலின் ஒவ்வொரு ஷாட்டும் கோடை இடிமுழக்கம் போன்று அதிர்ந்தது. ரஸலின் அதிரடி ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கேப்டன் தோனி 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் பயனில்லை. எந்த வீரர் பந்துவீசினாலும், அதில் ஒரு பந்தை ரஸல் சிக்சருக்கு அனுப்பிக்கொண்டே இருந்தார்.

பிராவோ வீசிய ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்து ரஸல் அதிர வைத்தார். ரஸல் அடித்த ஒரு சிக்சரில் பந்து எங்கு சென்றது என்றே கண்டுபிடிக்கமுடியாமல் வேறுபந்து மாற்றப்பட்டது.

தனது அதிரடியால் எதிரணியை மிரளவைத்த ரஸல் 26 பந்துகளில் அரைசதம் அடித்தார். ரஸலுக்கு ஈடுகொடுத்து ஆடிய தினேஷ் கார்த்திக் 26 ரன்களி்ல்(ஒரு சிக்சர்,2பவுண்டரி)வாட்ஸன் பந்துவீ்ச்சில் எல்பிடபில்யு முறையில் ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு இருவரும் 76 ரன்கள் சேர்த்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 202 ரன்கள் குவித்தது. ரஸல் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். இதில் 11 சிக்சர்கள், ஒரு பவுண்டரி அடங்கும். குரன் 2  ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சென்னை அணித் தரப்பில் அதிகபட்சமாக வாட்ஸன் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். 3 ஓவர்களை வீசிய பிராவோ அதிகபட்சமாக 50 ரன்களை வாரி வழங்கினார்.

இந்த போட்டியைக் காண கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகருமான ஷாருக்கான், அவரின மகள் சுஹானா ஆகியோர் வந்திருந்தனர். போட்டியின் இடையே தோனியின் மகள் ஜிவாவை தூக்கிவைத்துஅனைவரும் கொஞ்சி மகிழ்ந்தனர். 

ஓவருக்கு 10 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. வாட்ஸன், ராயுடு களமிறங்கினார்கள். இருவரும் வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 75 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய வாட்ஸன் 3 சிக்சர்கள், பவுண்டரிகள் உள்பட 19 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து குரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதைத்த தொடர்ந்து ராயுடு 26 பந்துகளில் 39 ரன்கள்(2சிக்சர், 3பவுண்டரிகள்)சேர்த்த நிலையில் குல்தீப்யாதவ் பந்துவீச்சில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா இந்த முறையும் ஏமாற்றினார்.அவர் 14 ரன்களில் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு தோனி, பில்லிங்ஸ் ஜோடி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. ஒருபுறம் தோனி நிதானமான ஆட்டத்தை தொடர மறுபுறம் பில்லிங்ஸ் அதிரடியில் மிரட்டினார்.

14ஓவர்கள் முடிவில் 36 பந்துகளுக்கு 76 ரன்கள் தேவை என்ற ரீதியில் இருந்தது. ஆனால், பில்லிங்ஸின் காட்டடிபேட்டிங் ரன்ரேட்டை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியது, பந்துகளுக்கும், தேவைப்படும் ரன்களுக்கும் ரன்களுக்கும் இடையிலான இடைவெளியையும் குறைத்தது. தோனியும் தனது பங்கிற்கு ஒருபவுண்டரி,ஒரு சிக்சர் அடித்தார். நிதானமாக பேட் செய்த கேப்டன் தோனி 25ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால், பில்லிங் அசரவில்லை. ரஸல், குல்தீப், குரன் ஆகியோரின் பந்துவிச்சை பிளந்துவிட்டார். அதிரடியாகஆடிய பில்லிங்ஸ் 21 பந்துகளில்அரைசதம் அடித்தார். 23 பந்துகளைச் சந்தித்த பில்லிங்ஸ் 56ரன்களில் குரன் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். இவரின் கணக்கில் 5 சிக்சர்கள் 2பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்த பிராவோவும், ஜடேஜாவும் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது, ரசிகர்களுக்கு ரத்தக்கொதிப்பு எகிறியது. வினய்குமார் வீசிய முதல் பந்தில் (கடந்தமும்பைக்குஎதிரான போட்டியைப் போல்) பிராவோ சிக்ஸர் அடிக்க ரசிகர்கள் சற்று அமைதியானார்கள். அந்த பந்து நோபால்ஆனது. அடுத்ததாக ப்ரீ ஹிட்டில் 2ரன்கள், அடுத்தடுத்த பந்துகளில் ஒரு ரன்கள் எடுக்கப்பட்டு, 2 பந்துகளுக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா லாங்ஆன் திசையில் வின்னிங்ஷாட்டாக அற்புதமான சிக்சர் அடித்தார். ஒரு பந்து மீதமிருக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிராவோ, ஜடேஜா இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் தலா 11 ரன்கள் சேர்த்தனர். கொல்கத்தா அணி தரப்பில் குரன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close