[X] Close

மானத்தை காப்பாற்றிய பிராவோ: மும்பை அணியை போராடி வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்


dwayne-bravo-stars-as-chennai-super-kings-beat-mumbai-indians-in-thriller

  • போத்திராஜ்
  • Posted: 08 Apr, 2018 00:44 am
  • அ+ அ-

மும்பையில்இன்று  நடந்த 11-வது ஐபிஎல் சீசன் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை கடைசி பந்து மீதமிருக்கையில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது.

தோல்வியின் பிடிக்குள் சிக்கித் தவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்து வந்த பெருமை டிவைன் பிராவோவுக்கே சேரும். பிராவோவும் சொதப்பி இருந்தால், சிஎஸ்கே அணியின் நிலை இன்று அசிங்கப்பட்டு இருக்கும். தனி ஒரு வீரராக இருந்து அணியின் ஸ்கோரை உயர்த்தி  ஆட்ட நாயகனாகவும் பிராவோ ஜொலித்தார்.

முதல்போட்டியின் முடிவே ரசிகர்களை பரபரப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றுவிட்டது. 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கணக்கை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது.

மும்பை வான்ஹடே மைதானத்தில் நடந்த முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து மோதியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

கிரிக்கெட் சூதாட்டத்தால் 2 ஆண்டுகள் தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட வந்ததால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், இவின் லிவிஸும் களமிறங்கினார். இதில் லீவிஸுக்கு முதல் ஐபில் போட்டி இதுவாகும். சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாகர், ஷேன் வாட்சனும் துல்லியமாக பந்துவீசி தொடக்கத்தில் இருந்தே மும்பை வீரர்களுக்கு நெருக்கடி அளித்தனர்.

சாகர் பந்துவீச்சில் லீவிஸ் எல்பிடபில்யு முறையில் டக் அவுட் ஆகினார். டி20 ஆட்டத்தில் முதல்முறையாக டிஆர்எஸ் வாய்ப்பை பயன்படுத்தியும் லீவிஸ்க்கு அது தோல்வியில் முடிந்தது.

தென் ஆப்பிரிக்கத் தொடர், இலங்கைத் தொடரில் இருந்தே ஃபார்ம் இல்லாமல் பேட்டிங்கில் சொதப்பிய ரோகித் சர்மா இந்த ஆட்டத்திலும் பேட்டை வைத்து தடவி ரன் எடுக்கவா வேண்டாமா என்று குழப்பத்திலேயே விளையாடினார். ரோகித் சர்மா ஒருசிக்சர், ஒருபவுண்டரி என 15 ரன்கள் சேர்த்து வாட்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தவித்தது.

அடுத்து வந்த இசான் கிஷானும், சூரிய குமார் யாதவும் சேர்ந்து சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இளம் வீரராக இருந்தாலும் இசான் கிஷானின் பேட்டிங் ஸ்டைல் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்டை நினைவு படுத்தியது. இஷானின் ஒவ்வொரு ஷாட்டும் அனுபவ வீரரைப்போல் தேர்வு செய்து விளையாடினார். இவருக்கு ஒத்துழைத்து ஆடிய சூரிய குமார் யாதவும் சிஎஸ்கே வீரர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்.

ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன் நன்றாக பந்துவீசிய நிலையில், அவர்களுக்கு வாய்ப்பு தராமல், இங்கிலாந்து வீரர் மார்க் ஊட், இம்ரான் தாஹிருக்கும் வாய்ப்பளித்தார் தோனி. அதற்கு பலனையும் தோனி வாங்கிக்கட்டிக்கொண்டார். மார்க் உட், இம்ரான் பந்துவீச்சை இஷானும், சூரியகுமாரும்  நொறுக்கிவிட்டனர்.

சிறப்பாக ஆடிய சூரியகுமார் 29 பந்துகளில் 43 ரன்களுக்கு(6பவுண்டரி ஒருசிக்சர்) ஆட்டமிழந்தார். இருவரும் 3-வதுவிக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தனர். அடுத்த சில நேரத்தில் இஷான் கிஷான் 40 ரன்களில் வெளியேறினார்.

5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா, கர்னல் பாண்டியாவும் சிஎஸ்கே வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். குறிப்பாக அதிகவிலைக்கு வாங்கப்பட்ட கர்னுல் பாண்டியா தனக்கு கொடுக்கப்பட்ட விலை சரிதான் என்பதை தனது அதிரடி பேட்டிங்கில் நிரூபித்தார்.

குறிப்பாக மார்க்உட் பந்துவீச்சை பாண்டியா சகோதரர்கள் இருவரும் மேய்ந்துவிட்டனர். அதிரடியாக ஆடிய கர்னுல் பாண்டியா 22 பந்துகளி்ல் 41 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 20 பந்துகளில் 22 ரன்களும் சேர்த்தனர்.

இதில் கடைசி ஓவரில் ஹர்திக்பாண்டியாவுக்கு காலில் அடிபட்டபோதிலும் அதைக் தாங்கிக்கொண்டு இறுதிவரை களத்தில் நின்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிகபட்ச மார்க் உட் 4 ஓவர்கள் வீசி 49 ரன்களை வாரி வழங்கினார். வாட்சன் 2 விக்கெட்டுகளையும், சாகர், இம்ரான் தாஹிர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் அனைவரும் இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் சொதப்பிவிட்டனர். குறிப்பாக ரெய்னாவுக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. ஐபிஎல் போட்டியில் முன்னணி ரன் குவிப்பாளராக இருந்து கொண்டு சொதப்பிவிட்டார். ரெய்னா  4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 கேப்டன் தோனியின் பேட்டிங்கை ஆவலுடன் பார்க்க வந்திருந்த ரசிகர்களுக்கு அவரின் செயல்பாடு ஏமாற்றத்தைக் கொடுத்தது.சென்னை அணி பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் இன்று மோசமாக இருந்தது, குறைந்தபட்சம் பேட்டிங் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தரசிகர்களுக்கு தலைவலிதான் மிஞ்சியது. அதிலும் தோனியின் பேட்டிங் காற்றுப்போன பலூன் போல ஆகியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரும்பாலான வீரர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருப்பதால், விரைவாக ஆட்டமிழக்கிறார்களா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்திவிட்டது.

அனுபவம் வாய்ந்த வாட்சன்(16), ராயுடு(22), ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா(12) ரன்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்துவந்தது.

அதிலும் புதுமுக வீரர் மார்கண்டே முக்கிய விக்கெட்டுகளான ராயுடு, தோனியை வெளியேற்றி பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினார்.

ஒரு கட்டத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் என்ற கட்டத்தில் தோல்வியின் விழிம்புக்கு சென்றது. ஆனால், ஆபத்பாந்தவானாக வந்த டிவைன் பிராவோவின் அதிரடி ஆட்டமே சிஎஸ்கே கரைசேர உதவியது.

மும்பை இந்தியன்ஸ் வீரர்களின் பந்துவீச்சை விளாசிய பிராவோ அணியின் ஸ்கோரை கடைசி நேரத்தில் ஒற்றை ஆளாக உயர்த்தினார். தனது அதிரடி பேட்டிங்கில் அவ்வப்போது வாணவேடிக்கை நிகழ்த்தி சிக்சருக்கும், பவுண்டரிகளுக்கும் பந்தை விரட்டிக்கொண்டே இருந்தார்.

தனது முதல் போட்டியிலேயே பிராவோ 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். 30 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்த நிலையில், பும்ரா பந்துவீச்சில் பிராவோ ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 7 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.

கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. முஸ்தாபிஜூர் ரஹ்மான் பந்துவீச, கேதார் ஜாதவும், இம்ரான் தாஹிரும் களத்தில் இருந்தனர். முதல் 3 பந்துகளை ஜாதவ் கோட்டைவிட்டதால், ஆட்டம் பரபரப்பின் உச்சத்தை அடைந்தது. 4-வது பந்தில் ஒரு சிக்சர் அடிக்க ஆட்டம் டை ஆனது. 2 பந்துகளுக்கு ஒரு ரன் எடுக்கவேண்டிய நிலையில், ஜாதவ் ஒருபவுண்டரி அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹர்திக் பாண்டியா, மார்கண்டேயன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். மற்ற பந்துவீச்சாளர்களான மெக்லனகன், ரஹ்மான், பும்ரா ஆகியோர் ரன்களை வாரிக்கொடுத்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close