[X] Close

குவிண்டன் டி காக் அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா


pakistan-south-africa-won-the-odi-series

  • முத்தலீப்
  • Posted: 31 Jan, 2019 15:27 pm
  • அ+ அ-

கேப்டவுனில் நடைபெற்ற 5வது, இறுதி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-2 என்று கைப்பற்றியது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்களை எடுக்க தென் ஆப்பிரிக்க அணி 241/3 என்று 40 ஓவர்களில் கதையை முடித்தது.

குவிண்டன் டி காக் 58 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 83 ரன்களையும் டுபிளெசிஸ் மற்றும் வான் டெ டியூசென் ஆகியோர் முறையே 50 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர். வான் டெர் ட்யூசென் சிக்ஸ் அடித்து வெற்றி பெற்றார். டி காக் 12 ரன்களில் இருந்த போது நோ-பாலில் கேட்ச் கொடுத்தார், ஆனால் அதன் பிறகு சாத்துமுறை நடக்க 18வது ஒருநாள் அரைசதம் கடந்தார். 

இலங்கை, ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதற்கு அடுத்த படியாக தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தானையும் வீழ்த்தி 4வது ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. 

பார்மைத் தேடிக்கொண்டிருந்த ஃபகார் ஜமான் பாகிஸ்தானில் அதிகபட்ச ஸ்கோராக 10 பவுண்டரிகளுடன் 73 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார், இவருக்கு 20 ரன்களில் ஸ்லிப்பில் ஆம்லா கேட்சை விட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் 70 ரன்களில் இவர் பெலுக்வயோ பந்தில் இம்ரான் தாஹிரிடம் டீப் பைன்ல் லெக்கில் கேட்ச் ஆகி வெளியேறினார். இவர் ஆட்டமிழந்த பிறகு 15 ஓவர்களில் மந்தமாக ஆடி 49 ரன்களையே எடுத்தது. 

கடைசியில் இமாத் வாசிம் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தது கடைசி 10 ஓவர்களில் ஸ்கோரிங் ரேட் கொஞ்சம் ஏறியது. இவர் டேல் ஸ்டெய்னை ஒரு சிக்சரும், ரபாடாவை ஒரு சிக்சரும் அடிக்க கடைசி 10 ஓவர்களில் 63 ரன்கள் வந்தது. 

தென் ஆப்பிரிக்க தரப்பில் பிரிடோரியஸ், பெலுக்வயோ தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, இம்ரான் தாஹிர் தன் 10 ஓவர்களில் 36 ரன்கள் என்று கடும் சிக்கனம் காட்டினார்.

241 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி குவிண்டன் டி காக்கை ஆரம்பத்தில் வீழ்த்தும் வாய்ப்பை ஷின்வாரியின் நோ-பாலால் இழந்தது.  இதே ஷின்வாரி ஓவரில் 18 ரன்களை விளாசினார் டி காக். இரண்டு தோளுயுர பவுன்சரும் சிக்சருக்குப் பறந்தது. ஸ்பின்னர் ஷதாப் கானை ரிவர்ஸ் ஸ்வீப்பிலேயே காலி செய்தார். ஷதாப் கான் 10 ஓவர்களில் 78 ரன்கள் விளாசப்பட்டார். 

முன்னதாக ஹஷிம் ஆம்லா 14 ரன்களிலும் ஹென்றிக்ஸ் அதிரடி 34 ரன்களிலும் வெளியேறினர், டிகாக் அவுட் ஆகும் போது 20.2 ஓவர்களில் 146/2 என்று வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா இருந்தது ஆனால் மெலும் சரிவு ஏற்படமால் டுபிளெசிஸ், வான் டெர் ட்யூசென் அரைசதங்கள் அடித்து தொடர் வெற்றியை உறுதி செய்தனர். 

ஆட்ட நாயகனாக குவிண்டன் டி காக்கும், தொடர் நாயகனாக பாகிஸ்தானின் இமாம் உல் ஹக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close