[X] Close

2024 ஒலிம்பிக்கில் தடகளத்தில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தரப்போகும் வீரர் யார்? - பி.டி.உஷா பேட்டி


p-t-usha-interview-2024-olympics-neeraj-chopra

  • முத்துக்குமார்
  • Posted: 30 Jan, 2019 15:56 pm
  • அ+ அ-

பி.டி.உஷா தன் கடைசி ஓட்டப்பந்தயத்தில் 1999-ம் ஆண்டு கலந்து கொண்டிருக்கலாம், ஆனால் இந்தியாவின் சிறந்த தடகள வீராங்கனை என்றால் அது பி.டி.உஷாவாகவே அறியப்படுகிறார். 1985 ஆசியப் போட்டிகளில் 5 தங்கப்பதக்கம் வென்றார், 1984 ஒலிம்பிக்கில் நூலிழையில் ஒலிம்பிக் பதக்கத்தைத் தவறவிட்டார்.  தன் ஓய்வுக்குப் பிறகு விளையாட்டை விட்டுவிடவில்லை உஷா. பயிற்சியாளராகச் செயல்பட்டு வருகிறார். கேரளாவில் உஷா தடகளப் பள்ளியை நடத்தி வருகிறார். 

இவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து ஒரு சில பகுதிகள் இதோ:

கேள்வி: லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டிகளில் நீங்கள் மகளிர் 400மீ தடை ஓட்டத்தில் மிக நெருக்கமான 4ம் இடத்திற்கு வந்தீர்கள். அதன் பிறகு தடகளத்தில் பதக்கத்துக்கு அருக்கில் எந்த ஒரு வீரரும் வரவில்லை. இது எப்போது நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பி.டி.உஷா: 2024 ஒலிம்பிக் போட்டியில் நடக்கும். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.  நீரஜ் சோப்ராதான் இப்போதைக்கு நம்மிடையே உள்ள திறமைவாய்ந்த தடகள வீரர் அவர் நன்றாக முன்னேறி வருகிறார், அவருக்கு மிக அருமையான பயிற்சியாளர் உவே ஹான் இருக்கிறார். 21 வயதுதான் நீரஜ் சோப்ராவுக்கு ஆகிறது. மிகத்திறமை வாய்ந்த இளம் வீரர் நீரஜ் சோப்ரா.

கேள்வி: உலக யு-20 தடகளப் போட்டிகளில் முதன் முதலில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனையான ஹிமா தாஸ் பற்றி உங்கள் கருத்து என்ன?

பி.டி.உஷா: இவரிடம் நல்ல எதிர்காலத்துக்கான திறமை பளிச்சிடுகிறது. அவர் தன் டைமிங்கை மிக பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளார், அடுத்த ஓராண்டில் அவர் எப்படி வருகிறார் என்பதைப் பார்ப்போம்.

கேள்வி: எந்தெந்த மாநிலங்கள் விளையாட்டுத்துறையை வளர்த்தெடுப்பதில் நன்றாகச் செயல்படுகிறது?

பி.டி.உஷா: ஹரியாணா மாநிலம் தற்போது பெரிய ஆர்வம் காட்டி வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களும் தடகள வீரர்களுக்கு ஊக்கமளிக்கிறது. மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் பலவிதமான விளையாட்டுகளுக்கும் அருமையான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. 

இன்னொன்றையும் கூறி விடுகிறேன், சர்வதேச விளையாட்டுத் தொடர்களில் பதக்கம் வெல்பவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை பரிசுத் தொகையாக அறிவிக்க மாநில அரசுகள் போட்டாபோட்டி போடுவது என்னை மகிழ்விக்கவில்லை. எங்கள் காலத்தில் பதக்கம் வெல்லவே ஓடுவோம், அரசு அளிக்கும் கோடி ரூபாய்களுக்காக அல்ல. அமைச்சர் ஒருவர் பதக்கம் வெல்பவருக்கு ரூ.4 கோடி பரிசு என்று அறிவித்தால், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையே ஏற்படும், இதுதான் ஊக்கமருந்து பயன்பாட்டுக்கு இட்டுச் செல்கிறது. பதக்கம் வெல்பவருக்கு இன்னும் சிறப்புப் பயிற்சியும் சர்வதேச அரங்கில் மேலும் நன்றாக ஆடக்கூடிய விதமாகவும் செய்யலாமே. 

கேள்வி: இந்தியாவில் பெரும்பாலும் விளையாட்டு என்பது அரசு வேலை பெறவே என்பதாக உள்ளது..

பி.டி.உஷா: இதுதான் வருத்தம் தரும் உண்மை நிலை. திறமையுடைய விளையாட்டு வீரர்கள் பலர் வேலை கிடைத்தவுடன் விளையாட்டைக் கைவிட்டு விடுவதை நான் பார்த்திருக்கிறேன். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு போட்டித் தொடர்களில் கலந்து கொள்ளும்வரை அவரது வேலைக்காலத்தை உறுதி செய்தல் கூடாது, இப்படி ஒருவிதிமுறை கொண்டு வர வேண்டும். ஆனால் மேலதிகாரிகள் விளையாட்டில் கவனம் செலுத்தவும் வீரர்களை அனுமதிப்பதில்லை என்ற நிலையும் உள்ளது. எனக்குத் தெரிந்த வீராங்கனை ஒருவர் அலுவலகப்பணிகளை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார், இதனால் விளையாட்டில் அவரால் கவனம் செலுத்த முடியாமல் போனது...

கேள்வி: உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் பெரிய அளவில் மோசடி செய்யும் நாடுகளில் இந்தியா டாப் இடத்தில் இருக்கிறதே..

பி.டி.உஷா:  இது வெட்கக்கேடான விஷயம். ரஷ்யாவிடமிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். ஏனெனில் நிறைய ரஷ்ய வீரர்கள்தான் தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் நம் பயிற்சியாளர்கள் பெரும்பாலும் ரஷ்யர்களாக இருப்பது ஏமாற்றமளிக்கிறது. யூரி ஓகோரோட்னிக் என்பவரை பயிற்சியாளராக நியமிப்பதை நான் எதிர்த்தேன், ஏனெனில் அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் பலர் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்து தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர் இங்கு வரவேற்கப்படுகிறார். ஊக்க மருந்து விவகாரமற்ற பயிற்சியாளர்கள் பிற நாடுகளில் இருக்கவே செய்கிறார்கள். மேலும் குளிர்காலத்தில் நம் தடகள வீரர்கள் ஏன் ஐரோப்பாவுக்கு பயிற்சிக்காக அனுப்பப்படுகின்றனர்?

இந்திய தடகளம் முன்னேற வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்?

மக்களிடம் விளையாட்டை எடுத்துச் செல்ல வேண்டும். நல்ல தரமான தொலைக்காட்சி ஒளிபரப்புகள் அவசியம். விளம்பரம் அதிகம் தேவைப்படுகிறது. ஐரோப்பாவில் ஒரு தடகளப் போட்டியில் கலந்து கொண்டால் ஸ்டேடியம் நிரம்பி வழிகிறது, ஆனால் இந்தியாவில் பெரும்பாலும் காலி ஸ்டேடியங்களே வீரர்களை வரவேற்கின்றன.

இவ்வாறு கூறினார் பி.டி.உஷா.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close