[X] Close
 

இனி மஞ்சளே என் நிறம்: ஹர்பஜன் சிங் உற்சாகப் பேட்டி


yellow-my-new-colour-says-harbhajan-singh

  • பாரதி
  • Posted: 07 Apr, 2018 10:52 am
  • அ+ அ-

இனி மஞ்சளே என் நிறம்; '27' எனக்கு ராசியான எண் என சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது குறித்து ஹர்பஜன் சிங் உற்சாகம் பொங்க கூறியிருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங் இனி சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறார்.

கடந்த 10 சீசன்களும் ஹர்பஜன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவே விளையாடி இருக்கிறார். இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது குறித்து அவர் அளித்த பேட்டியில், "மும்பை இந்தியன்ஸ் அணியினுடன் 10 ஆண்டுகளாக வெற்றிகரமாக பயணித்தபின் மற்றுமொரு வெற்றி அணிக்காக விளையாடப்போகிறேன். மைதானத்தில் இறங்கும்போது நிச்சயமாக எனக்கு ஏக்க உணர்வு இருக்கும். இருந்தாலும், தொழிமுறை கிரிக்கெட் வீரராக நான் எனது கடமையைச் செய்ய வேண்டும். நல்ல முறையில் ஆயத்தமாகியுள்ளேன். சவாலை ஏற்கத் தயாராக இருக்கிறேன்.

இந்தமுறை மஞ்சள் நிறமே என் நிறம். மஞ்சள் உடையில் என் உணர்வுகள் வித்தியாசமாக இருக்கும். இத்தனை ஆண்டுகளாக நான் விளையாடிய அணிக்கு எதிராக களம் இறங்குவது வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும். மும்பை மைதானம் எனது தாய் வீடு போன்றது. மும்பை ரசிகர்கள் என்னை ஆதரித்துள்ளனர். அவர்களிடமிருந்து இம்முறையும் அதே உற்சாகத்தை எதிர்பார்க்கிறேன்.

ஐபிஎல் வரலாற்றில் தலைசிறந்த மூன்று பவுலர்கள் பட்டியலில் இடம்பிடித்திருப்பதை நான் போற்றி மகிழ்கிறேன். எனது குழுவினருக்கும் எனது அணியின் சொந்தக்காரர்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது புதியதொரு அத்தியாயத்தை ஐபிஎல்.,லில் தொடங்குவதில் பெருமகிழ்ச்சி. பழைய மாதிரியே உற்சாகத்துடன் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்னால் ஆன எல்லா உதவியும் செய்ய விரும்புகிறேன்.
எனது மஞ்சள் உடையில் எனது எண் இனி 27-ஆக இருக்கும். 27 எனக்கு ராசியான எண். ஏனெனில் 27-ம் தேதிதான் எனது மகள் பிறந்தாள். மற்றொரு ப்ளஸ் என்னவென்றால் ஒரு வெற்றிகரமான அணியில் இருந்து 5 முறை கோப்பையை வென்ற இன்னொரு வலுவான அணிக்கு நான் நகர்கிறேன் என்பதே. 

வழக்கம்போல் பவுலிங் தான் எனது பலம் அதில்தான் கவனம் குவியும் என்றாலும் ஐபிஎல் போன்ற போட்டிகளில் எல்லாவகையிலும் ஒரு வீரர் பங்களிப்பது அவசியமாகும். கடந்த காலத்தில் ஐபிஎல் போட்டிகளில் சில நேரங்களில் மிடில் ஆர்டரில் விளையாடும்போது அணிக்கு கணிசமான ரன்களைப் பெற்றுத் தந்திருக்கிறேன். இந்த முறையும் அதேபோல் பெர்ஃபார்ம் செய்யவே விரும்புகிறேன்.

சென்னையில் எங்கள் பயிற்சி சிறப்பாக அமைந்தது. அணி வீரர்களுடன் நல்ல அறிமுகம் கிடைத்தது. சீசனுக்கானத் திட்டத்தை வகுத்தோம். எல்லாவற்றையும்விட முக்கியமானது, தோனியின் தலைமையில் விளையாடுவதுதான். தோனி எப்போதுமே அடக்கமாக அமைதியாக நிலைமைகளைக் கையாள்பவர். இப்படிப்பட்டத் தலைவர்தான் ஒரு அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல முடியும். தோனி அதை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார். ஆனால், அவர் எப்போதுமே ஆட்டத்தைப் பற்றியும் அணிக்கு உதவுவதைப் பற்றியுமே யோசித்துக் கொண்டிருப்பார். எங்களுக்கு இடையே பணி நிமித்தமாக நல்ல உறவு இருக்கிறது. அந்த உறவு இந்த சீசனில் பிரதிபலிக்கும் என நம்புகிறேன்"
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close