[X] Close

நாளை 3-வது போட்டி: ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி: ஹர்திக் பாண்டியா, கில் சேர்ப்பு?


focus-on-hardik-inclusion-as-india-look-to-seal-series

  • போத்திராஜ்
  • Posted: 27 Jan, 2019 14:05 pm
  • அ+ அ-

மவுன்ட் மவுங்கினி

மவுன்ட் மவுங்கினி நகரில் நாளை பகலிரவாக நடைபெறும் 3-வது ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே முதல் இரு போட்டிகளை இந்திய அணி வென்று 2-0 என்ற கணக்கில் முன்னணியில் இருப்பதால், நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும்.  கடந்த 2014-ம் ஆண்டு அடைந்த 4-0 என்ற தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் அமையும். இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்பி இருப்பதால், நாளைய ஆட்டத்தில் அவர் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் . அதேபோல, சுப்மான் கில்லுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

2-வது போட்டி நடந்த மவுன்ட் மவுங்கினி மைதானத்தில்தான் இந்த போட்டியும் நடத்தப்படுகிறது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணிவீரர்கள் ஜொலித்த அளவுக்கு நியூசிலாந்து வீரர்கள் விளையாடவில்லை. ஆனால், நாளை நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் தொடரை இழக்க நேரிடும் என்பதால், நெருக்கடியான நிலையில் களம்காண்கிறார்கள். 

ஹர்திக் பாண்டியா இல்லாமல், நடுவரிசையில் இந்திய அணி தடுமாற்றமான நிலையில் இருந்து வருகிறது. இதனால், விஜய் சங்கர், கேதார் ஜாதவ் ஆகிய வீரர்களை மாறி, மாறி பயன்படுத்தி வந்தனர். இதில் விஜய் சங்கருக்கு இதுவரை ஒருபோட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், ஹர்திக் பாண்டியா அணிக்குத் திரும்பினால், நடுவரிசை பேட்டிங்கும் பலமடையும், பகுதிநேர பந்துவீச்சும் பலம் பெறும். 

இந்திய அணியைப் பொருத்தவரை பேட்டிங்கில் கடந்த 2 போட்டிகளிலும் வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர். தொடக்க வீரர்களான ஷிகர் தவண் தொடர்ந்து இரு அரைசதங்களை அடித்து இழந்த ஃபார்மை மீட்டுள்ளார். ரோஹித் சர்மா கடந்த போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டாலும், ரோஹித்தின் காட்டடி பேட்டிங் தொடர்ந்து வருகிறது. 

கேப்டன் கோலி கடந்த இரு போட்டிகளிலும் , நடுவரிசை பேட்டிங்கை கருத்தில் கொண்டு நிதானத்துடன் விளையாடி வருகிறார். இன்னும் விராட் கோலியின் முழுமையான அதிரடி ஆட்டம் வெளிவரவில்லை. தோனியைப் பொருத்தவரை ஆஸ்திரேலியத் தொடரில் மூன்று போட்டிகளிலும் அசத்தலாக ஆடி தொடர் நாயகன் விருதை வென்றார். நியூசிலாந்து தொடரிலும் தோனியின் பேட்டிங் திறமை ஒளிர்ந்து வருகிறது. கடந்த போட்டியில் கடைசி 5 ஓவர்களில் அதிரடி பேட்டிங்கை கையாண்டு ஸ்கோரை 300 ரன்களுக்கு உயர்த்த முக்கியக் காரணமாக அமைந்தார். 

அம்பதி ராயுடு இதுவரை சொல்லிக்கொள்ளும் விதமாக ஸ்கோர் ஏதும் செய்யவில்லை. ஆதலால், நாளை போட்டியில் ராயுடுவுக்கு பதிலாக சுப்மான் கில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை கண்டு நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் நடுங்கி வருகிறார்கள். வழக்கமான லெக்ஸ்பின் பந்துவீச்சை சமாளித்து ஆடிய நிலையில், குல்தீப், சாஹல் வீசும் "ரிஸ்ட் ஸ்பின்னை" சமாளிக்க நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறுகிறார்கள். 

முதல் போட்டியில் சாஹலும், 2-வது போட்டியில் குல்தீப்பும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்துள்ளனர். குல்தீப், சாஹல் இருவரும் சேர்ந்து கடந்த இரு போட்டிகளில் 20 விக்கெட்டுகளில் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். ஆனால், இந்திய அணியில் சுழற்பந்துவீச்சு பலமாக இருக்கும் அளவுக்கு நியூசிலாந்திடம் சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் பயனளிக்கவில்லை. நியூசிலாந்து அணிக்கு இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சிம்ம சொப்னமாகவே திகழ்ந்து வருகின்றனர். 

வேகப்பந்துவீச்சில் முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் தங்கள் பணியை சிறப்பாகச் செய்து வருகிறார்கள். கட்டுக்கோப்பாக பந்துவீசி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த தவறுவதில்லை.  முக்கியமான கட்டங்களில் புவனேஷ்வர் குமார், ஷமியின் விக்கெட் வீழ்த்தும் திறமை அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்து வருகிறது.  கடந்த 2 போட்டிகளில் கிடைத்த வெற்றியால் உத்வேகத்துடன் இந்திய அணி இருப்பதால், நாளைய ஆட்டத்திலும் தனது வெற்றித்தடத்தை பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால், 5-வது பேட்ஸ்மேனை முடிவு செய்வது குழப்பத்தில் இருப்பதால், ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படுவாரா, அல்லது ராயுடுவுக்கு பதிலாக சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது கடைசி நேரத்தில் தெரியும். ஆஸ்திரேலியத் தொடரில் சிறப்பாக விளையாடியும் தினேஷ் கார்த்திக் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறார். அவரை நடுவரிசையில் களமிறக்கினால், பேட்டிங் பலம் பெறும். ஆனால்,இந்த பரிசீலனை குறித்து அணிநிர்வாகம் தரப்பில் பதில் ஏதும்இல்லை. 

நியூசிலாந்து அணியைப் பொருத்தவரை கேப்டன் வில்லியம்ஸன் மட்டுமே கடந்த இரு போட்டிகளிலும் தனது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2-வது ஆட்டத்தில் 7-வது வீரராக களமிறங்கிய பிரேஸ்வெல் அதிரடியாக பேட் செய்து அரைசதம் அடித்தார். அபாயகரமான பேட்ஸ்மேன் என்று சொல்லப்பட்ட ரோஸ் டெய்லர், கப்தில், முன்ரோ, சோதி, லாதம் ஆகியோர் இன்னும் தங்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் மவுண்ட் மவுங்கினி மைதானத்தில் 300 ரன்களுக்கு மேல் குவித்த நியூசிலாந்து அணி கடந்த போட்டியில் திணறியது ஏனோ எனத் தெரியவில்லை. 
மேலும், பந்துவீச்சில் டிரன்ட் போல்ட், பிரேஸ்வெல், பெர்குஷன் ஆகியோரும் இந்திய அணிக்கு நெருக்கடி தரும் அளவுக்கு பந்துவீசவில்லை. தொடரைத் தக்கவைக்க நாளைய போட்டியில் நியூசிலாந்து அணி அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தி விளையாட வேண்டிய நிலையில் இருக்கிறது. இல்லாவிட்டால் தொடரை கைநழுவும். 
போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கும். 

இந்திய அணி விவரம்:
விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், தோனி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், சுப்மான் கில், யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், கலீல் அகமெட், ரவிந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா

நியூசிலாந்து அணி விவரம்: 
கேன் வில்லியம்ஸன்(கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லாதம், மார்டின் கப்தில், கோலின் டி கிராண்ட்ஹோமே, டிரன்ட் போல்ட், ஹென்ரி நிக்கோலஸ், டக் பிரேஸ்வெல், லாக்கி பெர்குஷன், மாட் ஹென்ரி, கோலின் முன்ரோ, சோதி, மிட்ஷெல் சான்ட்னர், டிம் சவுதி


 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close