[X] Close

மே.இ.தீவுகள் அபார வெற்றி:  8 விக்கெட் வீழ்த்திய சேஸ்: இங்கிலாந்து 381 ரன்களில் படுதோல்வி


eight-wicket-chase-stars-as-windies-humiliate-england-by-381-runs

  • போத்திராஜ்
  • Posted: 27 Jan, 2019 12:05 pm
  • அ+ அ-

பிரிட்ஜ்டவுன், 
ஜேஸன் ஹோல்டரின் அர்ப்பணிப்பான இரட்டை சதம், ரஸ்டன் சேஸின் மாயஜால சுழற்பந்துவீச்சு ஆகியவற்றால் பிரிட்ஜ்டவுன் நகரில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணியை 381 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மேற்கிந்தியத்தீவுகள் அணி. 

5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் 4-வது நாளிலேயே முடிவு எட்டியுள்ளது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீழ்ச்சிக்கு கீமர் ரோச் காரணம் என்றால், 2-வது இன்னிங்ஸில் ரஸ்டன் சேஸின் பந்துவீச்சு சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. 

2-வது இன்னிங்ஸில் மேற்கியத்தீவுகள் மிகப்பெரிய ஸ்கோரை எட்ட காரணமாக இருந்து இரட்டை சதம் அடித்த ஹோல்டர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

628 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி ரஸ்டன் சேஸின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 2-வது இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது. ஆப்-ஸ்பின்னரான ரஸ்டன் சேஸ் 21.4 ஓவர்கள் வீசி 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கடைசி 5 விக்கெட்டுகளை 31 ரன்களுக்கு இழந்தது இங்கிலாந்து அணி என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்கிந்தியத்தீவுகள் 381 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது உள்நாட்டில் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி இதுவாகும். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று மேற்கிந்தியத்தீவுகள் முன்னிலை பெற்றுள்ளது. 

முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத்தீவுகள் 289 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கீமர் ரோச்சின் வேகப்பந்துவீச்சில் நிலை குலைந்த இங்கிலாந்து அணி முதல்இன்னிங்ஸில் 30.2 ஓவர்களில் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 212 ரன்கள் முன்னிலையுடன் ஆடத் தொடங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன்னணி வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்து தடுமாற்றத்தை அடைந்தது.

 ஆனால், 7-வது விக்கெட்டுக்கு கேப்டன் ஹோல்டர், விக்கெட் கீப்பர் டோவ்ரிச் ஆகியோர் இணைந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஹோல்டர் அபாரமாக பேட் செய்து இரட்டை சதம் அடித்து 202 ரன்களும், டோவ்ரிச் 116 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 7-வது விக்கெட்டுக்கு இருவரும் 295 ரன்கள் சேர்த்தனர். மேற்கிந்தியத்தீவுகள் அணி 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 415 ரன்கள் சேர்த்த நிலையில், டிக்ளேர் செய்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணி வெற்றி பெற 628 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மே.இ.தீவுகள் அணி. 

மிகப்பெரிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க கூட்டணி ஜென்னிங்ஸ், ஜோ பர்ன்ஸ் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆனால் இதை பின்னால் களமிறங்கிய வீரர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஜென்னிங்ஸ் 14 ரன்களில் ஜோஸப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பேர்ஸ்டோ, பர்ன்ஸுடன் இணைந்தார். சதத்தை நோக்கி முன்னேறிய பர்ன்ஸ் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். 134 ரன்களுக்கு 2-வது விக்கெட்டை இழந்தது. ஆனால், அடுத்த 33 ரன்கள் சேர்ப்பதற்குள் பேர்ஸ்டோ(30), கேப்டன் ரூட்(22) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர். அதன்பின் ஸ்டோக்ஸ்(34), பட்லர்(26) ரன்களில் பெவிலியன் திரும்பினர். 

215 ரன்களுக்கு 5-வது விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி அடுத்த 31 ரன்களைச் சேர்ப்பதற்கு மீதிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. மேற்கிந்தியத்தீவுகள் ஆப் ஸ்பின்னர் ரஸ்டன் சேஸ் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் கடைசி வரிசை வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினார்கள். 80.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 246ரன்களுக்கு ஆட்டமிழந்து 381 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  
மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் ரஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close