[X] Close

317 ரன்கள் அடித்தும் அதிர்ஷ்டமில்லாத பாக்.; மழையால் தோல்வி: கேட்ச்களை விட்ட தென் ஆப்பிரிக்கா வெற்றி


reeza-hendricks-stars-in-rain-hit-game-as-south-africa-go-2-1-up

  • போத்திராஜ்
  • Posted: 26 Jan, 2019 12:19 pm
  • அ+ அ-

சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

 

இருந்த போதும் மழை தென் ஆப்பிரிக்காவுக்குச் சாதகமாக அமைய 33 ஒவர்களில் 187/2 என்று ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்கா டக்வொர்த் லூயிஸ் கணக்கீட்டு முறைப்படி வெற்றி பெற்று தொடரில் 2-1 என்று முன்னிலை பெற்றுள்ளது.

 

தென் ஆப்பிரிக்கா அணியில் ரீசா ஹென்றிக்ஸ் 88 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுட்ன் 83 நாட் அவுட், டுபிளெசிஸ் 40 நாட் அவுட், இருவரும் சேர்ந்து 19 ஒவர்களில் 108 ரன்களைச் சேர்த்தது வெற்றியைத் தீர்மானித்தது.

 

ஒருவேளை தென் ஆப்பிரிக்கா முழுதும் ஆடியிருந்தாலும் வெற்றி பெற்றிருக்கக் கூடிய நிலையில்தான் இருந்தது. குவிண்டன் டி காக் (33), ஹஷிம் ஆம்லா (25) ஆகியோர் நன்றாகத் தொடங்கி 9 ஓவர்கள் 53 ரன்கள் தொடக்கம் அளித்தனர்.

 

டி காக் ரன் அவுட் ஆக, ஆம்லா, ஹசன் அலியிடம் வெளியேறினார். அதன் பிறகு விக்கெட் இல்லை. மழை வந்த போது தென் ஆப்பிரிக்கா 33 ஒவர்களில் 187 என்று இலக்கைக் காட்டிலும் 13 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

 

இதனால் இமாம் உல் ஹக் 101 ரன்களையும் பாபர் ஆஸம் மீண்டும் பிரமாதமான ஒரு 72 பந்து 69 ரன்களையும் மொகமது ஹபீஸ் 52 ரன்களையும் ஷோயப் மாலிக் 31 ரன்களையும் இமாத் வாசிம் 43 ரன்களையும் எடுத்து ஒரு அணியாகத் திரண்டு எழுந்து 317 ரன்கள் எடுத்தது துரதிர்ஷ்டவசமாக மழையால் வீணாகத் தோல்வி ஏற்பட்டது.

 

ஆனால் பாகிஸ்தான் 317 ரன்களை எடுத்ததில் தென் ஆப்பிரிக்காவின் மோசமான பீல்டிங்கும் பங்களிப்பு செய்தது, சுமார் 5 கேட்களைத்தான் விட்டார்கள். முதல் பவர் பிளேயில் 38 ரன்களை எடுத்த பாகிஸ்தான் கடைசி 10 ஓவர்களில் பீல்டிங் மோசத்தினால் 91 ரன்கள் எடுத்தனர். பாபர் ஆசமுக்கு 9 ரன்களில் கேட்ச் விடப்பட்டது.

 

இமாம் உல் ஹக்கிற்கு மிட் ஆஃபில் ஒரு கேட்ச் விடப்பட்டது. ஹபீஸ் விக்கெட்டை ஸ்டெய்ன் வீழ்த்தியிருப்பார் ஆனால் இம்முறை ஆம்லா ஸ்லிப்பில் நழுவ விட்டார். ஷோயப் மாலிக்கிற்கு டேவிட் மில்லர் கடின வாய்ப்பை ஒன்றை விட்டார். இமாத் வாசிமுக்கும் ரீசா ஹென்றிக்ஸ் கேட்சை விட்டார்.

 

 தென் ஆப்பிரிக்கா இத்தகைய மோசமான பீல்டிங்கை வைத்துக் கொண்டு உலகக்கோப்பை கனவைக் காண முடியாது. ஆக 5 கேட்ச்களை விட்டும், பாகிஸ்தானின் பேட்டிங் எழுச்சி பெற்றும் தென் ஆப்பிரிக்கா டக் வொர்த் லூயிஸ் முறையில் வென்று தொடரில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.

 

ஆட்ட நாயகனாக ரீஸா ஹென்றிக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சில் டேல் ஸ்டெய்ன் சிக்கனமாக வீசி 10 ஒவர்களி 43 ரன்களுக்கு 2 விக்கெட், பெலுக்வயோ 10 ஓவர்-71, ரபாடா 10 ஓவர்-57-2, ஷம்சி 9 ஓவர்-75 ஹென்றிக்ஸ் 2 ஓவர் 21 என்று விளாசப்பட்டனர்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close