பாண்டியா, ராகுல் மீதான இடைக்கால தடை நீக்கப்பட்டதாக அறிவிப்பு: பாண்டியா நியூஸி. தொடருக்குச் செல்கிறார்?

காஃப் வித் கரண் நிகழ்ச்சியில் பெண்களின் மாண்புக்குக் களங்கம் விளைவிக்கும் விதமாகப் பேசியதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாண்டியா, ராகுல் மீது சிஓஏ விதித்திருந்த இடைக்காலத் தடை ரத்து செய்யப்பட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக புதிதாக நியமிக்கப்பட்ட சிறப்பு நம்பிக்கை ஆலோசகர் பி.எஸ்.நரசிம்மாவை கலந்தாலோசித்த பிறகு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ-யின் நிர்வாகக் கமிட்டி இருவர் மீதான இடைக்காலத் தடையை நீக்குவதாக அறிவித்துள்ளது.
ஆனால் இது குறித்த விசாரணை நிலுவையில் உள்ளது, இதற்காக உச்ச நீதிமன்றம் குறைதீர்ப்பாளர் ஒருவரை நியமித்து விசாரணை நடத்தப்படும், இதற்கான விசாரணை தேதியை பிப்ரவரி 5ம் தேதி என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தடையை ரத்து செய்ததையடுத்து பாண்டியா தற்போது நியூஸிலாந்து பயணத்தில் உள்ள இந்திய அணியுடன் இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இது தேர்வுக்குழுவினர் கையில் உள்ளது, விராட் கோலிக்கு கடைசி இரு போட்டிகளுக்கும் டி20 தொடருக்கும் ஓய்வு அறிவிக்கப்பட்டதையடுத்து பாண்டியா செல்ல வாய்ப்புள்ளதாகவெ தெரிகிறது.
இந்தக் குற்றச்சாட்டு எழுந்த பிறகு வெளியே எங்கும் செல்லாமல் பாண்டியா வீடே கதியாகக் கிடந்ததாக அவரது தந்தை கூறியது குறிப்பிடத்தக்கது.