[X] Close

நியூசி.யுடன் நாளை முதல் ஒருநாள் போட்டி: வெற்றியுடன் தொடங்க இந்தியா ஆயத்தம்: தவணுக்கு பதிலாக சுப்மான் கில்?


newaealand-tour

கோப்பை அறிமுகத்தில் நியூசி கேப்டன் கேன் வில்லியம்ஸன், இந்திய கேப்டன் விராட் கோலி : படம் உதவி ட்விட்டர்

  • kamadenu
  • Posted: 22 Jan, 2019 16:48 pm
  • அ+ அ-

சவால் நிறைந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. வெற்றியுடன் தொடங்க ஆயத்தமாகியுள்ள இந்திய அணி,ஃபார்மில் இல்லாத தவணைக் கழற்றிவிட்டு சுப்மான் கில்லுக்கு வாய்ப்பளிக்க ஆலோசித்து வருகிறது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி அங்கு வரலாற்று சாதனையுடன் நியூசிலாந்துக்குச் சென்றுள்ளது. நியூசிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 போட்டிகள் டி20 தொடர் ஆகியவற்றில் விளையாட உள்ளது.

இதில் முதல் ஆட்டம் நேப்பியர் நகரில் நாளை நடக்கிறது. நியூசிலாந்தில் நமது இந்திய அணியின் கடந்த காலத்தைப் புரட்டிப் பார்த்தால், 7 முறை தொடரில் விளையாடி ஒருமுறை மட்டுமே தொடரை வென்றுள்ளோம். 4 முறை தொடரை இழந்து, 2 முறை சமன் செய்து திரும்பியுள்ளோம்.

2009-ம் ஆண்டில் நடந்த தொடரை மட்டுமே இந்திய அணி கைப்பற்றியது. நியூசிலாந்தில் இதுவரை 30 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடியுள்ளது. இதில் 9-ல் வெற்றியும், 18 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டி சமனிலும், 2 போட்டிகள் முடிவு இல்லாமலும் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பின் அங்கு சென்று இந்திய அணி விளையாடவில்லை.

உலகக் கோப்பைக்குத் தயாராக இந்தத் தொடர் இந்திய அணிக்கு முக்கியம் என்பதால், இந்தத் தொடரையும் வெற்றியுடன் தொடங்க இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது. ஆனால், உலகக் கோப்பை நெருங்கும் வேளையில் இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் சரியான வீரர்கள் கூட்டணி இல்லாமல் இருப்பது கவலைக்குரியதாகும்.

ஆஸ்திரேலிய அணியில் தோனி தொடர்ந்து அடித்த 3 அரை சதங்கள் இந்திய அணிக்கு நிச்சயம் உற்சாகத்தை அளித்திருக்கும். ஆனால், நியூசிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் அனைத்தும் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக, எகிறும்தன்மை கொண்டவை. இங்கிலாந்தில் இருக்கும் காலநிலையை ஒத்து அங்கு நிலவும், அதில் டிரண்ட் போல்ட், டிம் சவுதி, லாக்கி பெர்கூசன் ஆகியோரின் பந்துவீச்சை நம் வீரர்கள் எதிர்கொள்வது கடினம்தான்.

அதேசமயம் மைதானம் மிகச்சிறிய அளவாக இருக்கும் என்பதால், பவுண்டரி, சிக்ஸர்கள் அடிப்பதற்குக் குறைவிருக்காது. இரு அணி வீரர்களும் ரசிகர்களுக்கு வாணவேடிக்கையும் நிகழ்த்துவார்கள்.

இந்திய அணியைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகளிலும் ஷிகர் தவண் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆதலால், அவருக்குப் பதிலாக அறிமுக வீரர் சுப்மான் கில்லைப் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது கடைசிநேர முடிவுக்கு உட்பட்டது.

ஹர்திக் பாண்டியா சஸ்பெண்டில் இருப்பதால், அவருடைய இடத்தை நிரப்ப மூன்றாவது பந்துவீச்சாளர் கொண்டுவரப்படுவாரா அல்லது கூடுதலாக பேட்ஸ்மேன் இறக்கப்படுவாரா என்பதை கடைசி நேரத்தில் முடிவு செய்வோம் என கோலி தெரிவித்துள்ளார்.

ஒருவேளை வேகப்பந்துவீச்சாளர் தேவைப்பட்டால், விஜய் சங்கர் சேர்க்கப்படலாம் அல்லது ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்படலாம். ரவிந்திர ஜடேஜா கடந்த தொடரில் இங்கு அதிரடியாக ஆடிய அனுபவம் இருப்பதால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

4-வது இடத்தில் இறங்கி தோனி அருமையாக பேட் செய்து வருகிறார். இருப்பினும் அந்த இடத்துக்கு ராயுடுவுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படலாம் எனத் தெரிகிறது. அவ்வாறு அம்பதி ராயுடு அணியில் சேர்க்கப்பட்டால், தோனி 5-ம் இடத்தில் களமிறங்குவார்.

ஒருவேளை இந்திய அணி முதலில் பேட் செய்யும் கட்டாயத்துக்குத் தள்ளப்படும் பட்சத்தில் 300 ரன்களுக்கு மேல் எடுத்தால்தான் ஓரளவுக்கு வெற்றியைத் தக்கவைக்க முடியும். அந்தநேரத்தில் தொடக்க நிலையில் உள்ள 3 ஆட்டக்கார்கள் நிலைத்து நின்று 200 ரன்கள் ரன் அடித்துக்கொடுத்தால், நடுவரிசை வீரர்கள் அதைப்பயன்படுத்தி ஸ்கோரை உயர்த்த முடியும்.

ஒருவேளை நடுவரிசை பலவீனமாக இருந்தால், மிகவும் சிக்கலாகிவிடும். அதேசமயம், தொடக்க வரிசை வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்தாலும், ஆட்டத்தை தூக்கி நிறுத்தும் அளவுக்கு நடுவரிசை வீரர்கள் பலமாக இருப்பது அவசியமாகும். ஆதலால், நடுவரிசைக்கு தகுதியான பேட்ஸ்மேன்களை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. 

நேப்பியர் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால், கூடுதல் பேட்ஸ்மேனாக கேதார் ஜாதவ் அல்லது தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெறலாம்.

பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோரின் இடங்கள் உறுதியாகியுள்ள நிலையில், 3-வது வேகப்பந்துவீச்சாளராக கலீல் அகமது, முகமது சிராஜ் ஆகிய இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு உண்டு. ஆனால், கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இருவரும் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பந்து வீசவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆதலால், விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை உள்நாட்டு மைதானங்கள், ரசிகர்கள் ஆதரவு கூடுதல் பலமாகும். மேலும், நியூசிலாந்தில் உள்ள கேன் வில்லியம்ஸன், சான்ட்னர், டிரன்ட் போல்ட், கப்தில் உள்ளிட்டோர் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள் என்பதால், இந்தியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொண்ட அனுபவம் இருக்கிறது.

மேலும், சமீபத்தில் இலங்கைக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் தொடரை வென்று நியூசிலாந்து காட்டுத்தனமான ஃபார்மில் இருக்கிறது. ஆதலால், இந்திய அணி மிக எளிதாக நியூசிலாந்து வீரர்களை எடை போட முடியாது. குறிப்பாக கேப்டன் கேன் வில்லியம்ஸன், காட்டடி அடிக்கும் ரோஸ் டெய்லர், கப்தில், லதாம் ஆகியோர் இந்திய அணிக்கு மிரட்டல் விடுக்கும் பேட்ஸ்மேன்கள்.

கடந்த 10 மாதங்களாகக் காயத்தால் அவதிப்பட்டு வந்த சான்ட்னர் முழுமையாக குணமடைந்துள்ளதால் அவர் அணிக்குத் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

ஸ்மித், வார்னர் இல்லாத பலவீனமான ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எளிதாக வீழ்த்திவிட்டது. ஆனால், முழு பலத்துடன் கூடிய நியூசிலாந்து அணியை வீழ்த்துவது என்பது சவால் நிறைந்தது. இந்திய அணிக்குப் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நியூசிலாந்து அணி கடும் நெருக்கடி அளிப்பார்கள் என்பதால் போட்டி சவால் நிறைந்ததாகவே இருக்கும்.

இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. அனைத்து ஆட்டங்களும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறும்.

இந்திய அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், சுப்மான் கில், யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், கலீல் அகமது, ரவிந்திர ஜடேஜா.

நியூசிலாந்து அணி விவரம்:

கேன் வில்லியம்ஸன் (கேப்டன்), டிரன்ட் போல்ட், டாக் பிரேஸ்வெல், கோலின் டி கிராண்ட்ஹோம், லாக்கி பெர்குஷன், மார்டின் கப்தில், மாட் ஹென்ரி, டாம் லதாம், கோலின் முன்ரோ, ஹென்ரி நிகோலஸ், மிட்ஷெல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, ரோஸ் டெய்லர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close