[X] Close

த்ரில் ஆட்டத்தில் மரியா ஷரபோவாவுக்கு அதிர்ச்சியளித்த ஆஸி. வளரும் நட்சத்திரம் ஆஷ் பார்ட்டி: காலிறுதிக்கு முன்னேற்றம்


aus-open-2019-sharapova-defeated-ashleigh-barty-wins

  • முத்துக்குமார்
  • Posted: 20 Jan, 2019 12:02 pm
  • அ+ அ-

ஆஸ்திரேலிய வலரும் நட்சத்திரம் ஆஷ் பார்ட்டி ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் 4வது சுற்றில் இன்று காலை 5 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுக்கு அதிர்ச்சியளித்து வெளியேற்றினார். இதன் மூலம் பார்ட்டி காலிறுதிக்கு  முன்னேறினார்.

2009-ல் ஆஸி. வீராங்கனை ஜெலெனா டோகிக் காலிறுதிக்கு முன்னேறியதற்குப் பிறகு தற்போது ஆஸி. வீராங்கனை பார்ட்டி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

முதல் செட்டில் 4-6 என்று தோற்று பின் தங்கிய பார்ட்டி பிறகு பெரிய அளவில் எழுச்சியடைந்து அடுத்த 2 செட்களை 6-1, 6-4 என்று வெற்றி பெற்று ஷரபோவாவை வெளியேற்றினார். 

காலிறுதியில் தற்போது பார்ட்டி, 2 முறை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற கிவிட்டோவாவை சந்திக்கிறார். 2வது செட் முதல் ஷரபோவாவால் எதிர்பார்க்க முடியாத கோணங்களில் ஷாட்களை ஆடிய பார்ட்டி, ஸ்பின் ஷாட்களையும் வெளுத்துக் கட்டினார். 2வது செட்டில் ஷரபோவா 30-30 என்று இருக்கும் போது டபுள் பால்ட் செய்தார், பிறகு ஒரு பேக் ஹேண்ட் ஷாட்டை நெட்டில் அடிக்க பார்ட்டி பிரேக் செய்து 3-1 என்று முன்னிலை பெற்றார். 

தன்னுடைய ஓய்வு ஒழிச்சலற்ற உத்திகளினால் ஷரபோவாவை நிலைகுலைய வைத்த பார்ட்டி 9 கேம்களை தொடர்ச்சியாக வென்று 3வது செட்டிலும் ஷரபோவாவால் ஒன்றும் செய்ய முடியாத 4-0 என்ற முன்னிலை பெற்றார். ஆனால் இங்குதான் ஷரபோவா மீண்டும் எழுச்சி பெற்று 3-4 என்று நெருங்கினார், பிறகு 8வது கேமில் 40-15 என்று பார்ட்டி சர்வை பிரேக் செய்யும் நிலையில் இருந்தார். ஆனால் பார்ட்டி அபாரமாக ஆடி இந்த பிரேக் பாயிண்ட்டைத் தடுத்ததோடு மிகப்பெரிய சர்வ் ஒன்றை போட்டு 5-3 என்று முன்னிலை பெற்றார். அடுத்த தன் சர்வில் ஷரபோவா வெற்றி பெற 5-4 என்று ஆனது, பார்ட்டி தன் சர்வில் வெற்றி பெற வேண்டியிருந்தது. 

கடைசியில் முக்கிய கட்டத்தில் பார்ட்டியின் மிகப்பெரிய ஏஸ் சர்வ் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது, பிறகு ஒரு டபுள் பால்ட்டையும் செய்தார், இதனையடுத்து2 முறை மேட்ச் பாயிண்டைத் தவற விட்டார் பார்ட்டி. கடைசியில் மிகப்பெரிய ஏஸ் சர்வ் ஒன்றை அடித்து பார்ட்டி அபார வெற்றி பெற்று ஷரபோவாவுக்கு அதிர்ச்சியளித்தார்.

ஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் காலிறுதிக்கு தகுதி பெறும் 4வது ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் இந்த வளரும் நட்சத்திரம் ஆஷ் பார்ட்டி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close