[X] Close

பும்ரா யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்... பாகிஸ்தானில் பிரபலமான கிரிக்கெட் வீரர் கோலிதான்: ஸ்விங் சுல்தான் வாசிம் அக்ரம் புகழாரம்


bumrah-wasim-akram-virat-kohli

  • முத்தலீப்
  • Posted: 19 Jan, 2019 20:34 pm
  • அ+ அ-

தன்னுடைய கூர்மையான விமர்சனங்களினால் வர்ணனையில் பவுலர்களுக்காகட்டும் கேப்டன்களுக்காகட்டும், பேட்ஸ்மென்களுக்காகட்டும் விலைமதிப்பற்ற ஆலோசனைகளை வழங்கிய கிரிக்கெட் லெஜண்ட்  பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் இன்று இந்தியாவில் ஒளிபரப்பாகும் எந்த ஒரு கிரிக்கெட் சானலிலும் காணப்படுவதில்லை.

விமர்சனக் கூர்மை தாங்காத சிலபல மீடியா அதிகார வட்டம் வாசிம் அக்ரமை வர்ணனையிலிருந்து ஒழித்து விட்டது, ஆனால் அவர் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டைப் பார்த்து அதன் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டி வருகிறார். சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடிய போது இயன் சாப்பலை வர்ணனைக்கு அழைத்தனர்.

ஆனால் அவரிடம் விமர்சனம் வேண்டாம். புகழாரம் மட்டுமே வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அன்புக் கட்டளை/வேண்டுகோள் வைக்கப்பட்டதாக செய்தி உண்டு. இப்போது இருக்கும் இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தில் வரணனையாளர்களைக் கூட இந்திய கேப்டன் முடிவு செய்யும் காலம் இருப்பதாக  ராமச்சந்திர குஹா விமர்சித்ததும், நம் விசிலடிச்சான் குஞ்சு, விசில்போடு... ஸ்டார்களுக்கு சொரிந்து விடும் கலாச்சாரத்தில், விமர்சன சொரணையைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைகிறது.

இந்தப் பின்னணியில் வாசிம் அக்ரம் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடர் வெற்றி, கோலி, பும்ரா ஆகியோர் பற்றி பேசியுள்ளார்:

தற்போது விளையாடும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த யார்க்கர்களை கைவசம் வைத்துள்ளார்.  பும்ராவின் ஆக்‌ஷன் விதிவிலக்கானது, மற்ற வேகப்பந்து வீச்சாளர்களிடமிருந்து வெகுவாக வேறுபட்டது. இருந்தாலும் இந்த வித்தியாசமான ஆக்‌ஷனிலும் பந்தை அருமையாக ஸ்விங் செய்கிறார். பிட்சில் பவுன்ஸை  நல்ல வேகத்தில் அவரால் எடுக்க முடிகிறது. 

ஆனால் பும்ராவின் சிறப்புத்தன்மை என்னவெனில் அவரது யார்க்கர்கள். ஒருநாள் போட்டிகளுக்கானது மட்டுமல்ல யார்க்கர், டெஸ்ட் போட்டிகளுக்கும் அது ஒரு மிகப்பெரிய ஆயுதம், நானும், வக்கார் யூனிசும் எங்கள் காலக்கட்டத்தில் நிறைய பயன்படுத்தியுள்ளோம். 

நான் பாகிஸ்தானிலிருந்து வந்தாலும் சரி, பும்ரா இந்தியாவிலிருந்து வந்தாலும் சரி நாங்களெல்லாம் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் ஆடி உருவானவர்கள். இருபுறமும் கட்டிடங்களுடன் டென்னிஸ் பாலில் ஆடும்போது குறுக்குசால் மட்டையடி செய்ய முடியாது, நேராக ஆடியாக வேண்டும். அதனால்தான் பவுலர்களும் லெந்தில் வீசி பழக் வேண்டும். 

ஆஸ்த்ரேலியாவில் தொடரை வெல்வது மிகப்பெரிய சாதனை, இதனை இந்திய அணி நிகழ்த்தியுள்ளது. இது பலவீனமான ஆஸ்திரேலிய அணி அதனால் வீழ்த்தப்பட்டார்கள் என்ற கருத்தை நான் ஏற்க மாட்டேன். விராட் மற்றும் இந்திய அணிக்கான பெருமையை நாம் குறைக்க வேண்டாம். அதுவும் சீரான முறையில் ஆடியது ஒரு பெரிய விஷயம்.

கோலியிடம் இருப்பது துல்லியமான உத்தி மட்டுமல்ல, துல்லிய உத்தி மட்டும் இருப்பது போதாது, சரியான மனநிலை வேண்டும். இது கோலியிடம் உள்ளது. பாகிஸ்தானில் அவர் மிகப்பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக தற்போது திகழ்கிறார். 

இவ்வாறு கூறினார் வாசிம் அக்ரம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close