[X] Close

முடிசூடா ‘பினிஷிங்’ மன்னன் தோனி தொடர் நாயகன்; கேதார் ஜாதவுடன் அபாரக் கூட்டணி: ஆஸி. மோசமான பீல்டிங்; தொடரை வென்றது இந்தியா


indvsaus-match-report

ஒருநாள் தொடரை 2-1 என்று வென்ற இந்திய அணி கோப்பையுடன். | மெல்போர்ன். | ஏ.பி.

  • kamadenu
  • Posted: 18 Jan, 2019 18:06 pm
  • அ+ அ-

இரா.முத்துக்குமார்

மெல்போர்னில் நடைபெற்ற 3வது, இறுதி ஒருநாள் போட்டியில் தோனி (87 நாட் அவுட்), கேதார் ஜாதவ் (61 நாட் அவுட்) ஆகியோரது அபாரக் கூட்டணியினால் 231 ரன்கள் வெற்றி இலக்கை மிகவும் தொழில் நேர்த்தியுடன் விரட்டி 49.2 ஒவர்களில் 234/3 என்று அபார வெற்றி பெற்றது இந்திய அணி. தொடர் நாயகனாக தோனியும், ஆட்ட நாயகனாக 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சாஹலும் தேர்வு செய்யப்பட்டனர்.

பிட்ச் மந்தமான பிட்ச் என்பதால் பேட்டிங்கில் ஸ்ட்ரோக் மேக்கிங் சுலபமல்ல, பிட்சை நம் அணியில் தோனியை விட யார் பிரமாதமாகப் புரிந்து கொள்ள முடியும்? சரியான கணிப்புடன் ஆடி பொறுமையுடன் கொண்டு சென்றார். அவர் கேப்டனாக இருந்த போது ஒருமுறை கூறினார், விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தால் கடைசியில் ஓவருக்கு 10, 11, 12 ரன்கள் தேவைப்பட்டாலும் கவலையில்லை என்றார், அதுதான் அவரது தன்னம்பிக்கை. அந்தத் தன்னம்பிக்கை அவரிடம் இன்னமும் தொடர்கிறது, இனிமேலும் தொடரும். குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டில் இது மிகவும் அசாத்தியமான ஒரு ‘டெம்பரமெண்ட்’ ஆகும்.

கேதார் ஜாதவ், தோனி இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் 121 ரன்களைச் சேர்த்தனர். தோனி 114 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்தும், கேதார் ஜாதவ் 7 பவுண்டரிகளுடன் 57 பந்துகளில் 61 ரன்களை எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர்.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை தோனிக்கு 3 கேட்ச்களைத் தவறவிட்டனர், கடைசியில் கேதார் ஜாதவ்வுக்கு ஒரு ரன் அவுட் வாய்ப்பும் மந்தமான முயற்சியினால் வீணடிக்கப்பட்டது. அதுவும் தோனி இறங்கியவுடன் பேகவர்ட் பாயிண்டில் கிளென் மேக்ஸ்வெல் கையில் வந்த கேட்சை விட்டது உண்மையில் அடாவடித்தனமே.

தோனியைப் பொறுத்தவரை 3 மாத இடைவெளிக்குப் பிறகு மேட்ச் பிராக்டீஸ் இல்லாமல் ஆடுகிறார், உள்நாட்டு கிரிக்கெட்டை ஆட வேண்டும் என்று பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன, தோனை அதையெல்லாம் புறந்தள்ளி மீண்டும் தான் ஒரு முடிசூடா பினிஷர் என்பதை நிரூபித்து விட்டார். விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மந்தகதியோ, ஸ்ட்ரைக் ரேட்டில் ஆமை வேகமோ சிட்னி தவிர மற்ற இரு போட்டிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளார், சிட்னியில் கோலியின் சதம் உதவியதுடன் இவரது பினிஷிங் டச் பெரிதும் பாராட்டத்தக்கதாக இருந்தது.

இந்தப் போட்டியில் அவர் தன் வழக்கமான கூல் பாணி ஆட்டத்தில் வெற்றி நமதே, பதற்றமடைய வேண்டாம் என்ற மனநிலையில் உறுதியுடன் ஆடினார். ஏகப்பட்ட சிங்கிள்கள், இரண்டுகள், மூன்றுகள் என்று பெரிய மைதானமாகையினால் பவுண்டரி இல்லாத சமயங்களில் ஓடியே இவரும் கேதார் ஜாதவ்வும் ரன்களைச் சேர்த்தனர்.

231 என்ற குறைந்த இலக்கை விரட்டக் களமிறங்கிய இந்திய அணி ரோஹித் சர்மாவை 9 ரன்களில் இழந்தது. மிடில் ஸ்டம்புக்குள் வந்த பந்தை மிட்விக்கெட்டில் அடிக்கப் பார்த்தார் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் மார்ஷிடம் கேட்ச் ஆனது.

ஷிகர் தவண் பவுண்டரி அடிக்கத் திணறினார் 46 பந்துகளில் 23 ரன்கள் என்று திருப்தியாக ஆடவில்லை. அப்போது ஸ்டாய்னிஸ் பந்து ஒன்று பிட்சில் சற்றே நின்று வர தவன் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தோனியும் விராட் கோலியும் எச்சரிக்கையுடன் ஆடினார்கள், கொஞ்சம் அதீத எச்சரிக்கைதான், ஆஸ்திரேலிய பவுலிங் அந்த அளவுக்கு அச்சுறுத்தலாகவெல்லாம் இல்லை. ஆனால் கோலியும் தோனியும் இனைந்து 14 ஒவர்களில் 54 ரன்கள் என்று மந்தம் காட்டினர், கோலி 3 பவுண்டரிகளுடன் 62 பந்துகளில் 46 என்று ஆடிவந்த போது ரிச்சர்ட்ஸன் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார். 30 ஓவர்களில் 113/3, ஓவருக்கு 4 ரன்கள் கூட ரன் விகிதம் இல்லை.

அதன் பிறகு தோனி, ஜாதவ் கூட்டணி ஆதிக்கம் செலுத்தியது. ஆஸி. அணி கேட்ச்களை விட்டது. முடிவில் இந்திய அணி தொழில்நேர்த்தியான ஒரு விரட்டலில் அனாயசமாக வென்று தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

தோனியின் அதிர்ஷ்டம் அல்லது ஆஸ்திரேலியாவின் மட்டமான பீல்டிங்

விராட் கொலி 10 ரன்களில் இருந்த போது ஹேண்ட்ஸ்கம்ப் முதல் ஸ்லிப்பில் கேட்சை விட்டார்.

தோனி இறங்கியவுடன் ஸ்டாய்னிஸ் பந்தை கட் செய்தார் நேராக மேக்ஸ்வெல் கைக்குச் சென்றது, வெகு எளிதான கேட்ச் நழுவ விட்டார். 22வது ஓவரில் கோலியினால் திரும்பி அனுப்பப்பட்ட போடு தோனியை ரன் அவுட் செய்ய கிடைத்த வாய்ப்பும்  கைகூடவில்லை.  டாட்பால்கள் எகிற ஒரு பந்தை சிடில் வீசிய போது மேலேறி வந்து சுற்றினார், எந்த ஒரு நோக்கமும் இல்லாத ஒரு சுற்று அது எட்ஜ் ஆகி கீப்பர் தலைக்கு மேல் சென்றது... இது ப்யூர் அதிர்ஷ்டமே.  அடுத்து ஒரு அண்டர் எட்ஜ் கேட்ச், ஆஸ்திரேலியா அப்பீல் செய்யவேயில்லை, மேக்ஸ்வெல் மட்டுமே அப்பீல் செய்தார், ரிவியூவும் செய்யவில்லை.

பிறகு ஒரு எல்.பிமுறையீடு, அது களநடுவர் நாட் அவுட் கொடுத்தார் ரிவியூவில் பந்து ஸ்டம்புக்கு மேலே சென்றது தெரிந்தது, இதன் பிறகு 43வது ஓவரில் ஸ்டாய்னிஸ் பந்தில் இன்சைடு எட்ஜ் எடுத்து ஸ்டம்புக்கு அருகில் சென்று விக்கெட் கீப்பர் கேரிக்கு சற்று முன்னால் விழுந்தது.

பிறகு 48வது ஓவரில் ஸ்டாய்னிஸ் பந்தை தோனி தூக்கி அடிக்க 30 அடி சர்க்கிளுக்கு அருகில் நின்றிருந்த கேப்டன் பிஞ்ச் இடது புறம் பாய்ந்து கேட்சை விட்டார். இதே பந்துக்கு 2வது ரன்னை ஜாதவ் ஓடிய போது டைவ் அடித்து ரீச் செய்தார், ஆனால் ஸ்டாய்னிஸ் சரியான நிலையிலும் இல்லை, மந்தமாகவும் செயல்பட்டதால் ஒரே பந்தில் தோனி கேட்சும் கோட்டை விடப்பட்டு, ஜாதவ் ரன் அவுட் வாய்ப்பும் கோட்டை விடப்பட்டது, படுமட்டமான பீல்டிங்.

அதே போல் தோனிக்குக் களவியூகமும் சரியாக அமைக்கப்படவில்லை, புல் ஷாட்களையெல்லாம் அவர் கிளவ்வில் விக்கெட் கீப்பருக்குப் பின்னால் ஆடினார். ஆனால் ஏரோன் பிஞ்ச்சின் களவியூகம் அபத்தமாக இருந்தது.

அதே போல் கடைசியில் 4 ஒவர்களில் 33 ரன்கள் இருந்த போதும் ஊருக்கு முன்னாலேயே பீல்டர்களை 30 அடி வட்டத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தி தேவையான இடங்களில் பீல்டரை நிறுத்தாமல் ஒருவேளை உஷ்! கண்டுக்காதீங்கவாக இருக்குமோ என்ற ஐயத்தையே ஏற்படுத்துகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close