[X] Close
 

வார்னர், ஸ்மித், பான்கிராப்ட் உடனடியாக ஆஸ்திரேலியா திரும்ப உத்தரவு


steven-smith-david-warner-and-cameron-bancroft-to-leave-sa

  • போத்திராஜ்
  • Posted: 27 Mar, 2018 23:59 pm
  • அ+ அ-

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் உடனடியாக தென் ஆப்பிரிக்காவை விட்டு புறப்பட்டு ஆஸ்திரேலியா வர அந்நாட்டு கிரிக்கெட் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

நாளை காலை தண்டனை குறித்த முழு விவரங்களும் தெரியவரும் என்பதால், இந்த 3 வீரர்களும் மிகப்பெரிய தண்டனையை எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராப்ட் பிடிபட்டார். அதன்பின் அதை கேப்டன் ஸ்மித் திட்டமிட்டு செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து, ஸ்மித்துக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடையும், 100 சதவீதம் போட்டி ஊதியத்தை அபராதமாகவும் ஐசிசி விதித்தது. மேலும், துணைக் கேப்டன் வார்னருக்கு ஒருபோட்டியில் விளையாடத் தடையும், பான்கிராப்டுக்கு ஊதியத்தில் 75 சதவீதத்தை அபராதமாகவும் செலுத்த உத்தரவிட்டது.

பந்தை சேதப்படுத்திய விவகாரம் ஆஸ்திரேலிய நாட்டுக்கு மிகப்பெரிய தலைகுணிவை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஸ்மித், வார்னர் ஆகியோரின் கேப்டன், துணைக்கேப்டன் பதவியை பறித்தது. மேலும், இது குறித்து விசாரிக்க 2 பேர் கொண்ட குழுவையும், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ்சதர்லாந்தும் தென் ஆப்பிரிக்கா சென்றனர்.

இந்நிலையில் கேப்டவுன் நகரில் வார்னர், ஸ்மித், பான்கிராப்ட் ஆகியோரிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஸ்மித்தின் கேப்டன் பதவி முற்றிலும் பறிக்கப்பட்டது. மேலும் இவர்கள் 3 பேரும் இனிமேலும் தென் ஆப்பிரிக்காவில் தங்கத் தேவையில்லை, தொடரில் இருந்து நீக்கப்பட்டனர் என்று கூறி உடனடியாக ஆஸ்திரேலியா செல்ல அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவி்ட்டது.

விசாரணைக்கு பின் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் சதர்லாந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் தென் ஆப்பிரிக்கத் தொடரில் இருந்து நீக்கப்பட்டுவிட்டனர். இவர்கள் 3 பேரும் தென் ஆப்பிரிக்காவைவிட்டு உடனடியாக ஆஸ்திரேலியா செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் 24 மணிநேரத்தில் நானும் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிடுவேன். அங்கு இறுதி விசாரணை புதன்கிழமை காலை முடிக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்படும்.

மீதமுள்ள டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக மாட் ரென்ஷா, மேக்ஸ்வெல், ஜோய் பர்ன் ஆகியோர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புதன்கிழமை காலை தென் ஆப்பிரிக்கா வந்தடைவார்கள்.

ஆஸ்திரேலிய மக்களின் கோபத்தையும், விரக்தியையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.கிரிக்கெட் ஆஸ்திரேலியா சார்பில் நான் மன்னிப்பு கோருகிறேன். ஆஸ்திரேலிய மக்களிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன்.குறிப்பாக தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்டை மிகவும் விரும்பி இருக்கும் குழந்தைகளிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

 
 



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close