[X] Close

ஆமாம் நான் நிறைய விரோதிகளைச் சம்பாதித்தேன் ஆனாலும் நிம்மதியாகவே உறங்கினேன்: ஓய்வு பெறும் கம்பீர் மனம் திறப்பு


gambhir-interview

தன் கடைசி ரஞ்சி போட்டியில் ஆடி அவுட் ஆன கம்பீர் பெவிலியன் திரும்பும் காட்சி. | படம்.| சந்தீப் சக்சேனா.

  • kamadenu
  • Posted: 08 Dec, 2018 20:11 pm
  • அ+ அ-

கவுதம் கம்பீர் என்றாலே அவர் பெயர் குறிப்பிடுவது போல் கம்பீரமானவர்தான், மூர்த்தி சிறிதுதான் ஆனால் எண்ணத்தில், அணுகுமுறையில் கம்பீரமானவர், அமைப்புக்கு அஞ்சாதவர், தன் கருத்துகளை பட் பட்டென்று முகத்தில் அடித்தார் போல் கூறுபவர்.

47 ஓவர்களில் முடிக்க வேண்டிய போட்டியை 50வது ஓவர் கடைசி பந்தில் முடிப்பவர் பினிஷர் என்றால் என்ன அர்த்தம் என்று ஒருமுறை கேள்வி எழுப்பினார், இவர் தோனியைத்தான் சொல்கிறார் என்று ஊடகங்கள் தட்டிவிட்டன.  இந்திய கிரிக்கெட் கண்ட மிகத் தைரிய மனம் படைத்தவர் கம்பீர்.

அவர் கூறுகிறார், கிரிக்கெட் மட்டுமல்ல பொதுவாகவே சம் சமூகம் இப்படித்தான் என்று அதன் முன் கண்ணாடியைக் காட்டினால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், தாங்கள் செய்வதுதான் சரி என்று ஏற்கெனவே உள்ள நிலைமைகளை கட்டிக்காக்கவே விரும்புவார்கள் என்று ஒரு சமூக விமர்சனப்பார்வையையே முன் வைத்து பிடிஐக்குப் பேட்டியளித்துள்ளார்:

கிரிக்கெட் அமைப்பு மட்டுமல்ல, பொதுவாகவே நம் சமூகம் தனக்கு கண்ணாடி காட்டுபவர்களை விரும்பாது, நம் சமூகம் எப்போதும் இருக்கும் நிலைமைகளை தக்கவைக்கும் அமைப்பாகும். எதார்த்தத்தை கண்கொண்டு பார்க்க மாட்டார்கள்.  இவையெல்லாம் என்னை மூச்சுத் திணறவைத்தன, எனக்குள் புழுங்க வைத்தன.” என்றார்.

அணித்தேர்வாளர்கள் அல்லது டெல்லி  கிரிக்கெட் சங்க நிர்வாகம் எதுவாக இருந்தாலும் சரியான ஒன்றின் பக்கம்தான் கம்பீர் நின்றிருக்கிறார்.

“என்னால் தவறான விஷயங்கலையும், செயற்கைத்தனத்தையும் சகித்துக் கொள்ள முடியாது, என்னைச் சுற்றி உள்ளவர்கள் கூட நான் இன்னும் சாமர்த்தியமாக, அட்ஜஸ்ட் செய்து கொள்பவராக இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறியுள்ளனர், ஆனால் அப்படி இருப்பது எனக்குப் பிடிக்காது, அதுவல்ல நான்.  ஆம், நான் விரோதிகளை சம்பாதித்தேன் ஆனாலும் நிம்மதியாக உறங்கினேன்” என்கிறார் கம்பீர் வெளிப்படையாக.

ஜூனியர் வீரர்களின் வாழ்க்கையை சிதைப்பதாக கம்பீர் 2017-ல் கே.பி.பாஸ்கரிடம் சண்டையிட்டார். சேத்தன் சவுகான், நவ்தீப் சைனிக்காக சண்டையிட்டுள்ளார்.

அதே போல் சரியாக ஆடாத ஒரு கிளப் கிரிக்கெட்டரை டெல்லி ரஞ்சி அணியில் சேர்க்க முயன்ற தேர்வாளரை கடுமையாக எதிர்த்தார் கம்பீர். எப்போதும் நிறுவப்பட்ட அமைப்புக்கு எதிராகவே கம்பீர் செயல்பட்டுள்ளார், இது தன் கிரிக்கெட் வாழ்க்கையை பாதிக்கவே செய்தது என்பதைக் கம்பீர் ஒப்புக் கொள்கிறார்.

ஆம், என்னை இவை பாதிக்கும், நானும் மனிதன் தான், ஆனால் அநீதி இழைக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இதோ பாருங்கள், நான் உங்களை விட புனிதமானவன் இல்லைதான், ஆனால் நம் அமைப்பில் நடந்து கொண்டிருக்கும் பல விஷயங்கள் முட்டாள்தனமாக உள்ளது. நான் இதனை எதிர்த்து குரல் எழுப்பினேன், இதனால் என்ன ஆனது நிறைவேறாத ஒரு கரியராக என் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து போனது. 

என்னை பலமுறை பலரும் தவறாகப் புரிந்து கொண்டனர், அப்படித்தான் நடந்தது.  உதாரணமாக ஒரு கேப்டன் எப்படியோ அணியும் அப்படித்தான் இருக்கும் என்று ஒருமுறை கூறினேன், ஆனால் ஊடக விமர்சகர்கள் நான் தோனியைத்தான் சாடுகிறேன் என்று கட்டிவிட்டார்கள்.

நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும், டெல்லி ரஞ்சி அணியையும் வழிநடத்திய போது இந்த வார்த்தைகளைத் திரும்ப கூறியதை இந்த விமர்சகர்கள் வசதியாக மறந்து விட்டனர்.

நிறைய பேர் நான் மிகவும் வசதியான குடும்பத்திலிருந்து வந்தவன் ஆகவே கிரிக்கெட் ஆடவேண்டிய தேவையே இல்லை என்று கூறியிருக்கிறார்கள், ஆனால் எனக்கென்று ஓர் அடையாளம் வேண்டாமா?  என் மூலம்தான் என் தந்தை உலகிற்குத் தெரியவர வேண்டுமே தவிர என் தந்தையால் நான் உலகிற்கு தெரியவருவதை நான் ஒருபோதும் விரும்பியதில்லை.

மேலும் நான் இலவசமாக எதையும் பெற்று விடவில்லை, ஒவ்வொரு அடியையும் கடினமாக போராடியே எடுத்து வைத்தேன்.  அதனால்தான் ஒவ்வொரு முறையும் என்னை நோக்கி சவால் விடும்போது அதற்கு நான் தயாராகவே இருந்தேன்.

முக்கிய அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளை நான் விமர்சிப்பதில் எந்த ஒரு முன் கூட்டிய திட்டமும் இல்லை. அது எனக்கு இயல்பாக வருகிறது. நான் பிரச்சினைகளைத்தான் எழுப்புகிறேனே தவிர, தனிநபர் விரோதமாக எதையும் பேசுவதில்லை.  எதுவும் ஒழுங்காக நடக்கவில்லை எனில் அதை கேள்வி கேட்க எனக்கு உரிமை இருக்கிறது என்று நினைக்கிறேன்.  ஓவ்வொரு இந்தியனும் இதைச் செய்ய வேண்டும். இல்லையெனில் அமைப்பு நம்மை பதம் பார்த்து விடும்.

ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்யப்போகிறேன் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை, மாற்றம் ஏற்படும் ஆனால் எதையும் முடிவு செய்யவில்லை, பார்ப்போம்.

ஓய்வு பெறுவதற்கெல்லாம் சரியான நேரம், தவறான நேரம் என்றெல்லாம் ஒன்றுமில்லை., ஆனால் உற்சாகவும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வமும் ஓய்வுச் சிந்தனைகளை தள்ளிப்போட்டது.

இந்திய அணிக்காக இன்னும் நிறைய போட்டிகளை ஆடுவதற்கு என்னிடம் இன்னமும் திறமைகள் இருக்கவே செய்கின்றன, ஆனால் சிலபல விஷயங்கள் எனக்குச் சாதகமாக இல்லை. ஆனால் 2 உலகக்கோப்பைகளை வென்ற அணியில் ஆடியது எனக்கு கிடைத்த கவுரவம்.  என்னுடைய கடைசி போட்டியில் சதம் அடித்த தினம் விதி என்னிடம் கருணையாக இருந்த இன்னுமொரு நாள் அவ்வளவே”

இவ்வாறு மனம் திறந்தார் கம்பீர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close