[X] Close

அடிலெய்ட் டெஸ்ட்டில் வலுவான வெற்றி முன்னிலையை நோக்கி இந்திய அணி: விரக்தியில் ஆஸ்திரேலியா


match-report-day-3

  • kamadenu
  • Posted: 08 Dec, 2018 15:39 pm
  • அ+ அ-

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று மழையால் இடையூறுகள் ஏற்பட்ட போதிலும் ஆஸ்திரேலியாவை 235 ரன்களுக்குச் சுருட்டிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் என்று வலுவான வெற்றி முன்னிலையை நோக்கி இந்திய அணி சென்று கொண்டிருக்கிறது.

ராகுல்-விஜய் கூட்டணி 63 ரன்களை 18 ஒவர்களில் சேர்த்து உறுதியான அடித்தளம் அமைத்து கொடுக்க கடைசியில் புஜாரா, விராட் கோலி கூட்டணி 71 ரன்களை 3வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். கடைசியில் விராட் கோலி ஆட்டமிழந்தாலும் இந்திய அணி வலுவான நிலையிலேயே உள்ளது. ஆட்ட முடிவில் புஜாரா 40 ரன்களுடனும், ரஹானே 1 ரன்னுடனும் உள்ளனர்.

லயன் உற்சாகமாக வீசுகிறார், மற்ற ஆஸி.பவுலர்கள் களைப்படைந்து வருகின்றனர்,  ராகுல், விஜய், விராட், புஜாராவின் உறுதியான ஆட்டத்தினால் ஆஸி. அணி விரக்தியில் உள்ளது போல் அவர்களது உடல் மொழி காட்டியது.

முரளி விஜய் 53 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை 18 ரன்களில் அவர் உறுதியுடன் ஆடினார். ஆனால் கடைசியில் அது உறுதியில்லை, பிரித்வி ஷா வந்து விட்டால் தன் இடம் காலியாகும் என்பதினால் எப்படியாவது நிற்க வேண்டும் என்ற ஒரு நம்பிக்கை இழந்த நிலை என்பதை அவர் மீண்டும் தேவையில்லாமல் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை ஆடி ஸ்டார்க்கிடம் ஆட்டமிழந்த போது நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.

இன்று காலை மழையால் இடையூறு அடைந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மேலும் 44 ரன்களைக் கூடுதலாகச் சேர்த்து 3 விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட் ஆனது. மொகமது ஷமியின் அயராத அபாரப் பந்து வீச்சுக்கு கடைசியில் ஆஸ்திரேலிய இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த ட்ராவிஸ் ஹெட்  (72), ஹேசில்வுட் (0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்தது கிடைத்த பரிசாக அமைந்தது.  முதலில் ஸ்டார்க் பும்ராவின் நல்ல பந்து ஒன்றை பெரிய ட்ரைவ் ஆடப்போய் எட்ஜ் ஆகி ரிஷப் பந்து கேட்சுக்கு வெளியேறினார், ட்ராவிஸ் ஹெட் 72 ரன்கள் எடுத்த நிலையில் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய ஷமி பந்தை உள்ளே செலுத்தி சற்றே வெளியே எடுக்க ஹெட் கேட்ச் கொடுக்க வைக்கப்பட்டார். ஹேசில்வுட் அடுத்த பந்திலேயே பந்த்திடம் கேட்ச் ஆக ஆஸ்திரேலியா 235 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இந்தியா பேட் செய்த போது விஜய், ராகுல் 63 ரன்கள் கூட்டணி அமைத்தனர், இதனால் புதிய பந்தின் சீறலுக்கு புஜாரா, கோலி  ஆளாகவில்லை, ஆனாலும் சோதித்தனர். கோலி, கமின்ஸின் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை ஷார்ட் லெக்கில் தடுத்தாடினார் அங்கு ஆளிருந்தால் கேட்ச் ஆகியிருக்கும்.  நேதன் லயனுக்கு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இயல்பாக அவர் வீசும் லெந்த்தில் ஒரு ஸ்பாட் இருக்கிறது, அங்கு வீசி தொல்லைகள் கொடுத்தார். அங்கு பட்டு பந்து செல்லும் போது சுர் சுர்ரென்று செல்கிறது, அஸ்வினும் அதனைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இடது கை வீரர்களுக்கு மலிவான எல்.பி. தீர்ப்புக்காக ரவுண்ட் த விக்கெட்டில் வீசுவதை வழக்கமாகக் கொண்டால் அந்த ஸ்பாட்டைப் பயன்படுத்த முடியாமல் போகும்.  ஏனெனில் இடது கை வீரர்களுக்கு அந்த இடத்தில் பந்து பிட்ச் ஆகும் போது அது ஒரு குருட்டுப்புள்ளியாகும், அவர்களால் கட்டுப்பாட்டுடன் பந்தை ஆட முடியாது, ஆகவே ஸ்வீப் ஷாட்டைத் தேர்வு செய்யும் போது டாப் எட்ஜ் நிச்சயமாக எடுக்கும் ஆகவே அஸ்வின் அந்த ஸ்பாட்டைப் பயன்படுத்த ஓவர் த ஸ்டம்பில் வீசும் முடிவை எடுத்தால் நல்லது.

இன்று நேதன் லயன் புஜாராவை விரைவில்   இருமுறை ஆட்டமிழக்கச் செய்திருப்பார், இருமுறையும் கள நடுவர் அவுட் கொடுத்தும் ரிவியூவில் தப்பினார். ஒன்று விக்கெட் கீப்பர் கேட்சுக்கான அவுட், மற்றொன்று எல்.பி.தீர்ப்பு, நல்ல வேளையாக இரண்டையும் அருமையாக ரிவியூ செய்தார், ஏனெனில் நடுவர் அவுட் என்றால் அது ‘அம்ப்யர்ஸ் கால்’ ஆகிவிடும் என்று சிலர் ரிவியூ செய்யாமல் சென்று விடுவார்கள், ஆனால் இருமுறையும் அது நாட் அவுட்.

கே.எல்.ராகுல் பிரமாதமான ஷாட்களை ஆடினார் அதில் ஒன்று கமின்ஸின் ஓவர் பிட்ச் பந்தை பாயிண்டுக்கு மேல் ஒரு ட்ரைவ் ஆடி சிக்ஸருக்குத் தூக்கினார் அதனை ஷாட் ஆஃப் த மேட்ச் என்று கூறலாம். அவர் 44 ரன்களை எடுத்து ஹேசில்வுட் பந்தை மிட் ஆஃபுக்கு மேல் தூக்கி அடிக்க நினைத்து எட்ஜ் ஆகி வெளியேறினார்.

இந்திய அணி 166 ரன்கள் முன்னிலையுடன் மேலும் வலுவான முன்னிலையை நோக்கி 4ம் நாள் ஆட்டத்தில் செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close