[X] Close

மகா சரிவு; கடைசி நாளில் பாக்.கிற்கு பகீர் தோல்வி; நியூஸி. அணி எதிர்பாரா வெற்றி: 49 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை


new-zealand-wins

தொடரை வென்று கோப்பையுடன் நியூசி. | ஏ.எப்.பி.

  • kamadenu
  • Posted: 07 Dec, 2018 18:35 pm
  • அ+ அ-

280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 5ம் நாளில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்ததையடுத்து நியூஸிலாந்து அணி பாகிஸ்தானை அயல் மண்ணில் 49 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் 2-1 என்று வென்றுள்ளது.

அபுதாபியில் நடைபெற்ற டெஸட்டில் முதல் இன்னிங்சில் நியூஸிலாந்து அணி 274 ரன்களை எடுக்க பாகிஸ்தான் அணி 348 ரன்கள் எடுத்து 74 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி தன் 2வது இன்னிங்சில் 60/4 என்று தடுமாறிய போது கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துகள் பயங்கரமாகத் திரும்பும் பிட்சில் தனது தனித்துவமான உத்தியில் மிகப்பிரமாதமான ஒரு இன்னிங்சை கட்டமைத்து 139 ரன்களை எடுக்க, அவருடன் ஹென்றி நிகோல்ஸ் தனிப்பட்ட முறையில் 126 ரன்களைக் குவிக்க இருவரும் சேர்ந்து மிக முக்கியமான 212 ரன்களை 5வது விக்கெட்டுக்குச் சேர்த்தது. மிகநெருக்கடியான தருணத்தில் இந்த ஆண்டில் எடுகப்பட்ட இந்த 2 சதங்களும் இந்த இரட்டைச் சத கூட்டணியு நியூஸி கிரிக்கெட்டில் மட்டுமல்ல உலகம் முழுதும் பேசும். இதனையடுத்து நியூஸிலாந்து அணி இன்று 353/7 என்று டிக்ளேர் செய்து பாகிஸ்தானுக்கு 280 ரன்கள் இலக்கு நிர்ணையித்தது, பாகிஸ்தான் இலக்கை நோக்கிச் சென்றால் ரிஸ்க், அதனால் ட்ரா செய்ய வாய்ப்பிருந்தது, ஆனால் அறிமுக வீரர் வில்லியம் சோமர்வில் ஒரே ஓவரில் ஹாரிஸ் சோஹைல், ஆசாத் ஷபிக்கை வெளியேற்ற பாகிஸ்தான் மகாசரிவு உறுதி செய்யப்பட்டது.  156 ரன்களுக்குச் சுருண்டு பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததோடு, அதிர்ச்சியடைந்தது, நியூஸிலாந்து அணிக்கு சற்றும் எதிர்பாரா வெற்றி கேன் வில்லியம்சின் பிரில்லியன்ஸினால் விளைந்தது.

நியூஸி. தரப்பில் டிம் சவுதி, படேல், சோமர்வில் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிக் கனவுக்கு குழிதோண்டினர். தனது கடைசி டெஸ்ட்டை ஆடும் மொகமது ஹபீஸ் 8 ரன்களில் சவுதியின் அழகான பந்தில் பவுல்டு ஆனார். அசார் அலி, கொலின் டி கிராண்ட் ஹோம் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார்.

அறிமுக ஆஃப் பிரேக் பவுலர் வில்லியம் சோமர்வில், ஹாரிஸ் சோஹைல், ஆசாத் ஷபிக் இருவரது விளிம்புகளையும் அபாரமாகப் பிடிக்க அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறினர்.  பாபர் ஆஸமும் எல்.பி.யில் வெளியேறியிருப்பார், ஆனால் ரிவியூ அவரைக் காப்பாற்றியது. உணவு இடைவேளைக்கு முன்னதாக அஜாஸ் படேல், இமாம் உல் ஹக்கின் (22) விக்கெட்டை வீழ்த்தினார். 55/5 என்ற நிலையில் பாபர் ஆஸம், கேப்டன் சர்பராஸ் அகமட் (28) ஸ்கோரை 98க்கு உயர்த்தினர், அப்போது சர்பராஸ் அகமட் , சோமர்வில் ஆஃப் பிரேக்கை மட்டைக்கும் பேடுக்கும் இடையே விட்டு பவுல்டு ஆனார்.

பிலால் ஆசிப் (12), பாபர் ஆஸம் இணைந்து ஸ்கோரை 131க்குக் கொண்டு சென்றனர். அப்போது பிலால் ஆசிப், சவுதியின் வைடு பந்தை துரத்தி எட்ஜ் ஆகி வெளியேறினார். யாசீர் ஷாவையும் சவுதி வீழ்த்த பாபர் ஆஸம் ஒரு முனையில் போராடி 51 ரன்கள் எடுத்து கணநேர கிறுக்குத் தனத்தில் படேல் பந்தை மேலேறி வந்து வெறுப்பில் சுற்றினார் சரியாகச் சிக்கவில்லை. மிட் ஆஃபில் கேட்ச் ஆனது. கடைசியில் வெற்றிக்கான இறுதி விக்கெட்டாக ஹசன் அலி, படேலிடம் விழ, நியூஸிலாந்து வரலாற்று வெற்றிக் கொண்டாட்டம் நிறைவேறியது.

ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்சனும், தொடர் நாயகனாக யாசிர் ஷாவும் தேர்வு செய்யப்பட்டனர். பாகிஸ்தானால் மறக்க முடியாத, திரும்பத் திரும்ப கெட்ட சொப்பனமாக வந்து கொண்டிருக்கும் ஜீரணிக்க முடியா தொடர் தோல்வியை சந்தித்துள்ளது அந்த அணியை புரட்டிப் போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close