ஸ்லெட்ஜிங் குறித்து கவலை இல்லை: தொடரை வெல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சேதேஷ்வர் புஜாரா நம்பிக்கை

கேதேஷ்வர் புஜாரா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஸ்லெட்ஜிங் குறித்து கவலை இல்லை, இம்முறை டெஸ்ட் தொடரை வெல்ல சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக இந்திய அணியின் பேட்ஸ்மேன் சேதேஷ்வர் புஜாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 4 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் போட்டி வரும் 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சேதேஷ்வர் புஜாரா நிருபர்களிடம் கூறியதாவது:
பேட்டிங் வரிசை என்பது ஒரு குழு. ஒவ்வொரு முறையும் களமிறங்கும்போது கூடுதல் அழுத்தம் உள்ளதா அல்லது இல்லையா என்பதை பற்றியெல்லாம் சிந்திக்காமல் திறமைக்கு தகுந்த அளவிலான செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும். பேட்டிங் குழுவாக நாங்கள் சில இலக்கை கொண்டுள்ளோம். பேட்டிங்கில் எந்தவித அழுத்தமும் இருப்பதாக கருதவில்லை.
அணியில் உள்ள பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் தேவையான அனுபவத்தை கொண்டுள்ளனர். எனவே போட்டிக்கு தயாராகுவதிலும், எங்கள் திறன் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். 2016-17ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய அனுபவம் இம்முறை கைகொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆனால் இந்த தொடர் புதிய தொடக்கம். கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது பற்றி அதிகம் கவனத்தில் எடுத்துக்கொள்ள மாட்டேன். கடந்த பல வருடங்களில் தற்போதுள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுதான் மிகவும் வலுவானது. ஒரு சில வீரர்கள் காயம் அடைந்தாலும் அவர்கள் இடத்தை நிரப்புவதற்கும் வெளியே வீரர்கள் உள்ள னர். இந்தியாவுக்கு வெளியே தற்போது நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். தற்போது தொடரை வெல்ல சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நம்பர் ஒன் அணியாக நாங்கள் எப்போதும் ஒவ்வொரு தொடரையும் வெல்ல நினைப்போம். அதனால் இந்த தொடரிலும் எந்த வித்தியாசமும் இல்லை. சிறந்த திறனை வெளிப்படுத்தி தொடரை சிறப்பான முறையில் தொடங்க விரும்புகிறோம். நிச்சயமாக நாங்கள் தொடரை வெல்ல விரும்புகிறோம். ஆனால் இந்த தருணத்தில் ஒரே ஒரு ஆட்டத்தை மட்டுமே கவனத்தில் கொள்வோம்.
ஸ்லெட்ஜிங் விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் என்ன செய்வார்கள் என்பதை நான் கூற முடியாது. ஒன்று மட்டும் உறுதி, நாங்கள் வலுவான ஆட்டத்தை மேற்கொள்வோம். ஸ்லெட்ஜிங்கில் நாங்கள் கவனம் செலுத்த மாட்டோம். சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவதிலும், தொடரை வெல்வதிலும் தான் எங்களது கவனம் இருக்கும்.
இவ்வாறு சேதேஷ்வர் புஜாரா கூறினார்.
இதை மிஸ் பண்ணாதீங்க...
- மோடியும், சந்திரசேகர ராவும், ஓவைசியும் ஒன்றுதான்!- ராகுல் காந்தி தாக்கு
- மக்கள் துயரத்தின் போது எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன: அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு
- நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் பிரதமர் மோடி: நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
- ஹாட்லீக்ஸ்; பதற்றத்தில் காடுவெட்டி குரு குடும்பம்!