[X] Close

கோலி எனும் ரன் மெஷினை அக்கு வேறு ஆணி வேறாக பிரிப்பது எப்படி? - ரிக்கி பாண்டிங்கின் சீரியசான ஆலோசனைகள்


ricky-ponting-speech

  • kamadenu
  • Posted: 03 Dec, 2018 19:28 pm
  • அ+ அ-

ஆஸ்திரேலியாவுக்குள் இந்திய நுழையும் முன்பே கிங்கோலி பற்றி பேச்சுக்கள் எழுந்து அனைவரும் கருத்துகளைக் கூறிவந்தனர், அங்கு அவர் நுழைந்தவுடன், அதுவும் பயிற்சியாட்டத்தில் அனாயசமாக ஆடியதும் ஆஸ்திரேலியர்களுக்கு அவர் மீது உண்மையான பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கோலி எனும் ரன் மெஷினை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துப் போடுவது பற்றி பேசியுள்ளார். அதாவது 2017-ல் ஆஸ்திரேலியா இந்தியா வந்து ஆடிய போது  கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் கடுமையாகச் சொதப்பி 46  ரன்களைத்தான் மொத்தமாக எடுத்தார், அந்தத் தொடரை அவர் உதாரணமாகக் காட்டுகிறார். ஆண்டர்சன் கோலியை 5 முறை வீழ்த்தியுள்ளார், கடந்த தொடரில் கூட நடுவர் தீர்ப்புப் பிழையினால் கோலி அவரிடம் விக்கெட் கொடுக்காமல் ஆடினாரே தவிர மற்றபடி ஆண்டர்சனை இவர் ஆதிக்கம் செலுத்திவிட்டார் என்று கூற முடியாது.

இந்நிலையில் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

“முதலில் கடந்த காலத்தில் கோலியை ரன் எடுக்க விடாமல் கட்டிப்போட்டு விக்கெட்டை வீழ்த்தியது யார் என்று பார்க்க வேண்டும். அவருக்கு எதிராக நல்ல சக்சஸ் ரேட் வைத்திருப்பவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். அவர்தான் கோலியை கடுமையாகப் படுத்தி எடுத்துள்ளார். பந்துகள் ஸ்விங் ஆகவில்லை எனில் கோலியை வீழ்த்துவது கடினம். அவர் சுதந்திரமாக ரன்களை எடுக்க விரும்பும் ஒரு வீரர்,பெரிய ஈகோவுள்ளவர்.

ஆகவே தொடக்கத்தில் அவருக்கு பவுண்டரி அருகே சில பீல்டர்களை நிறுத்தி பவுண்டரிகளை கட் செய்ய வேண்டும். முதலிலேயே அவர் மீது ஆக்ரோஷம் காட்ட வேண்டாம், இறுக்கமாக, சீராக ரன் கொடுக்காமல் கட்டிப்போடுங்கள்.

தேர்ட் மேன் திசையில்தான் அவர் பந்தைத்தொட்டு விட்டு அதிகம் ரன் எடுக்கிறார்.  ஆகவே வெவ்வேறு இடங்களில் பீல்டர்களை நிறுத்தி நாம் ஏதோ அவரைச் செய்கிறோம் என்ற உணர்வை அவருக்கு ஏற்படுத்த வேண்டும். 3வது ஸ்லிப்பை இன்னும் நெருக்கமாக நிறுத்தி வையுங்கள் ஏனெனில் அவர் அங்குதான் கையைத் தளர்வாக்கி பந்துகளைத்திருப்பி விடுவார். அதாவது அவர் எது செய்தாலும் அதற்கு நாம் தயாராகவே இருக்கிறோம் என்று அவருக்கு பல்வேறு விதங்களில் நாம் உணர்த்த வேண்டும்.

அவரை ஸ்லெட்ஜ் செய்யக்கூடாது என்று கூறவில்லை, முதலில் பவுலிங்கில் அவருக்கு சிலபல தொந்தரவுகளை கொடுத்து அவரை வீழ்த்தி விடுவோம் என்ற அச்சத்தை ஏற்படுத்திய பிறகு ஓரிரு வார்த்தைகளைப் பயன்படுத்தலாம், மிட்செல் ஜான்சன் ஓரிருமுறை அவரை வெறுப்பேற்றி வெற்றி கண்டிருக்கிறார்.  நாம் நம் கிரிக்கெட் ஆட்டத்தை நம் பாணியில் ஆடுவதைப் பார்த்து யாரும் கேலி செய்யத் தேவையில்லை. குறிப்பாக நம் உள்நாட்டில் ஆடுகிறோம் அவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்.

உங்கள் செயல்கள். திறமைகள், ஆகியவற்றுடன் கொஞ்சம் வார்த்தைகளும் கோலியை நிலைகுலையச் செய்யும்.

மேலும் அனைவரும் இந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி விடலாம் என்று அவரை உசுப்பேற்றி வருகின்றனர், ஆகவே வெற்றி பெற்றேயாக வேண்டிய நெருக்கடி அவருக்கு உள்ளது, இதனை நாம் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தலாம்.

இவ்வாறு கூறினார் ரிக்கி பாண்டிங்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close