[X] Close

தவறவிடக்கூடாது; இந்திய அணிக்குப் பொன்னான வாய்ப்பு: சச்சின் டெண்டுல்கர் சிறப்புப் பேட்டி


sachin-interview

சச்சின் டெண்டுல்கர்

  • kamadenu
  • Posted: 03 Dec, 2018 12:32 pm
  • அ+ அ-

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இந்திய அணிக்குப் பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய -இந்திய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 6-ம் தேதி தொடங்குகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது இல்லை.

ஆனால், இந்த முறை ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்குக்கு வலுசேர்க்கக் கூடிய ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாமல் அந்த அணி தடுமாறுகிறது. பந்துவீச்சும் எதிர்பார்த்த அளவுக்கு மிரட்டும் வகையில் இல்லை.

ஆதலால், இந்த முறை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்ற நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு ஏற்றார்போல் இந்திய அணியும் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் வலுவாக இருந்து அச்சுறுத்தும் வகையில் செயல்படுகிறது என்று முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், 'லிட்டில் மாஸ்டர்', 'மாஸ்டர் பிளாஸ்டர்' என்று புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் (தி இந்து) 'ஸ்போர்ட்ஸ்ஸ்டார்' பத்திரிகைக்கு பிரத்யேகப் பேட்டி அளித்தார். அதில் பல்வேறு கேள்விகளுக்கும் விரிவான பதில் அளித்துள்ளார்.

சச்சினைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் விரிவான அனுபவத்தைப் பெற்றவர். பல்வேறு மூத்த ஜாம்பவான் பந்துவீச்சாளர்களான மெக்டர்மார்ட், புரூஸ் ரீட், மெர்வ் ஹக்ஸ், பால் ரீபில், மைக் வைட்னி ஆகியோரின் பந்துவீச்சை அனாயாசமாக எதிர்கொண்டு விளையாடியவர். ஆஸ்திரேலியாவின் வேகமான, கடுமையான பவுண்ஸ் ஆகும் ஆடுகளங்களில் பல்வேறு கட்டங்களில் தனது பேட்டிங் திறமையை நிரூபித்துக் காட்டி ஆஸ்திரேலிய மக்களின் அபிமானத்தைப் பெற்றவர் சச்சின்.

ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 1,809 ரன்கள் குவித்துள்ளார். அதில் 6 சதங்கள், 7 அரை சதங்கள். அதிகபட்சமாக 241 ரன்களும், சராசரியாக 53.21 ரன்களும் சச்சின் வைத்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் அதிகமாக ரன் சேர்த்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சச்சின்தான் முதலிடத்தில் உள்ளார்.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் இதோ.

இங்கிலாந்து ஆடுகளம் ஸ்விங்குக்கு புகழ்பெற்றவை. ஆஸ்திரேலியாவில் பந்துகள் ஸ்விங் ஆகுமா. ஆஸி வீரர்கள் என்ன கோரிக்கை வைக்கிறார்கள்?

ஆஸ்திரேலியாவில் ஆடுகளம் கடினமாக இருப்பதால், வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும், நன்றாக எழும்பும். ஆனால், சில நேரங்களில் இந்த சூழல் மாறி இருக்கிறது. கடந்த 1990களில் நான் விளையாடியபோது, பெர்த் ஆடுகளத்தில் யாரும் அதிகமான ரன்கள் அடிக்க முடியவில்லை. இரு இன்னிங்ஸிலும் சேர்த்தே 500 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் பெர்த் ஆடுகளத்தில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் பார்த்தால், பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாக, வேட்டைக்களமாக மாற்றப்பட்டு இருக்கிறது. எளிதாக பேட்ஸ்மேன்கள் சதம் அடிக்கிறார்கள். கடந்த முறை இங்கிலாந்து விளையாடிய போது, ஆஸி, இங்கிலாந்து சேர்ந்து 1,300 ரன்கள் சேர்த்தன.

ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்கார்கள் எப்போதும் பேசப்படுவார்கள். குறிப்பாக கவாஸ்கர்- சேட்டன் சவுகன், கவாஸ்கர், சிறீகாந்த், சேவாக், ஆகாஷ் சோப்ரா. இந்த முறை எவ்வாறு இருக்கும்.?

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தொடக்க வீரர்கள் சரியாக அமைவது கடினம்தான். சில நேரங்களில் முதல் 4 விக்கெட்டுகள்கூட விரைவாக விழுந்துவிடும். ஆதலால், முதல் 30 ஓவர்கள் எப்படியாவது தாக்குப்பிடித்து, தொடக்க வீரர்கள் நின்று விளையாட வேண்டும். அதன்பின் ஆடுகளம், பந்து ஆகிய இரண்டும் தனது கடினத்தன்மையை இழந்துவிடும் பேட்ஸ்மேன்களுக்கு நன்கு ஒத்துழைக்கும்.

இங்கிலாந்து தொடருக்குச் செல்லும் முன் இந்திய அணியிடம் முதல் 40 ஓவர்களில் கவனமாக விளையாடுங்கள் என்று கூறினேன். பந்துகள் கடினத்தன்மையை இழந்த பின் நாம் எளிதாக விளையாட முடியும். அதேபோல ஆஸ்திரேலியாவிலும் 35 ஓவர்கள் கவனமாக விளையாட வேண்டும். இல்லாவிட்டால் ஆடுகளத்தில் உள்ள புற்களைப் பயன்படுத்தி எளிதாக விக்கெட்டுகளை வீழத்திவிடுவார்கள்.

இப்போதுள்ள ஆஸ்திரேலிய அணியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இப்போதுள்ள ஆஸ்திரேலிய அணி என்னைப் பொறுத்தவரை இன்னும் வலுவானதாக மாறவில்லை. ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோரின் வலுவான பேட்டிங் இல்லாததால், அந்த அணி இப்போது வரை உறைந்து கிடக்கிறது.

பந்துவீச்சு சுமாராக இருந்தாலும், இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை எந்த அளவுக்கு ஆட்டமிழக்க வைக்கும் திறமை இருக்கிறது என இப்போது தெரியாது. என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் தொடரை வெல்வதற்குப் பொன்னான வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்திருக்கிறது.

டெஸ்ட் போட்டி அணியில் ரோஹித் சர்மா தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்று கங்குலி கூறியுள்ள கருத்தை ஏற்கிறீர்களா?.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-வது போட்டியில் ரோஹித் சர்மா நன்றாகத்தான் பேட் செய்தார். கடைசி நாளில் உணவு இடைவேளை வரை நன்றாக பேட் செய்தார். ஆனால், அதன்பின் விக்கெட்டை இழந்தார். ஒருவேளை விக்கெட்டை இழக்காமல் இருந்தால், ஆட்டத்தின் கதை மாறி இருக்கும். அவர் தொடர்ந்து களத்தில் நின்று விளையாடுவது அவசியம்.

ஆனால், டெஸ்ட் அணியில் ரோஹித் இருக்க வேண்டுமா என நான் கருத்து கூறுவது சரியல்ல. ஓய்வறையில் ஏராளமான விஷயங்கள் நடக்கும். இதை அணி நிர்வாகத்திடமே விடுகிறேன். ரோஹித் எவ்வளவு காலம் விளையாட வேண்டும், யார் விளையாட வேண்டும் என்பதை நான் கூற முடியாது.

இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close