[X] Close

அடிலெய்ட் ஆடுகளம் எப்படி?, இந்தியாவை அச்சுறுத்தும் புள்ளிவிவரங்கள் என்ன சொல்கிறது?- ஓர் அலசல்


match-preview-for-australian-tour

  • kamadenu
  • Posted: 02 Dec, 2018 16:41 pm
  • அ+ அ-

அடிலெய்டில் வரும் 6-ம் தேதி தொடங்க உள்ள இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அடிலெய்டின் ஆடுகளம் எப்படி இருக்கும், புள்ளிவிவரங்கள் என்ன சொல்கிறது என்பதைக் காணலாம்.

ஆஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 6-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டம் அடிலெய்ட் மைதானத்தில் நடக்கிறது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. ஆனால் ஆஸ்திரேலிய அணியில் முக்கிய பேட்ஸ்மேன்கள் ஸ்மித், வார்னர் இந்த முறை இல்லாத காரணத்தால் அந்த அணி பலவீனமடைந்திருப்பதை மறுப்பதற்கில்லை.

அதனால்தான் எப்போதும் இல்லாத வகையில் இந்திய அணி இந்த முறை தொடரை வெல்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலர் தெரிவித்துள்ளனர். அதற்கு ஏற்றார்போல், இந்திய அணியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு ஆகிய இரண்டும் சமகலவையில் பலம் பொருந்தியதாக உள்ளன.

இந்திய அணி பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் வலிமையாகவே இருந்து வருகிறது. ஆனால், ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து கூடுதல் பந்துவீச்சாளர்களா அல்லது பேட்ஸ்மேன்களாக என்ற தேர்வு கடைசி நேரத்தில் அமையும்.

முதல் போட்டி நடக்கும் அடிலெய்ட் மைதானத்தில் கடைசியாக நடந்த 4 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகமே அமைக்கப்பட்டது. கடந்த 4 டெஸ்ட் போட்டிகளும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளாக நடத்தப்பட்டதால் 5 நாட்களும் முழுமையாக நடைபெறவில்லை. 3 போட்டிகள் 3 நாட்களிலும், ஒரு ஆட்டம் 4 நாட்கள் வரை நடந்துள்ளது.

ஆதலால், இந்த முறை அடிலெய்ட் ஆடுகளம் எவ்வாறு அமைக்கப்பட உள்ளது என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஆடுகளம் எப்படி இருக்கும்?

இதுகுறித்து ஆடுகளத்தின் பராமரிப்பாளர் ஹாவ், “தி வீக்என்ட் ஆஸ்திரேலியன்” நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்காக ஆடுகளத்தை ஏதும் புதிதாக மாற்றி அமைக்கப்போவதில்லை. பகலிரவு டெஸ்ட் போட்டி நடந்தபோது ஆடுகளத்தைப் போல இப்போதும் பராமரிக்கப்போகிறோம். பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் பந்தும், தற்போது சிவப்பு பந்தும் பயன்படுத்தப்படுகிறது.

என்னைப் பொறுத்தவரை "பிங்க்" பந்தில் விளையாடும் போது இரு நாட்களுக்கு வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் ஆடுகளத்தில் சிறிது புற்களை விட்டுவிடுவோம். அதேபோன்றுதான் இந்த டெஸ்ட் போட்டிக்கும் புற்களை விட்டுச் செல்வோம். அப்போதுதான் பேட்டிங், பந்துவீச்சு இரு துறைகளும் சமமாகச் செயல்பட முடியும். இல்லாவிட்டால், ஆட்டம் ஒருதரப்பாக அமைந்துவிடும்” எனத் தெரிவித்தார்.

ஆடுகளத்தில் குறைந்தபட்சம் இரு நாட்களுக்குப் புற்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்வோம் என்று சொல்வதன் மூலம் 2 நாட்களுக்கு வேகப்பந்துவீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைக்கும் எனத் தெரிகிறது.

நாதன் லயன் புள்ளிவிவரம்:

கடந்த 2014-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது, 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி நாதன் லயனின் சுழற்பந்துவீச்சில்தான் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 48 ரன்களில் தோல்வி அடைந்தது. அதிலும் கடைசி 8 விக்கெட்டுகளை 73 ரன்களுக்குள் இழந்து பரிதாபமாக தோல்வி அடைந்தது.

ஆதலால், இந்த முறையும் நாதன் லயன் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம். அதிலும் குறிப்பாக நாதன் லயன் டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு நாடுகளின் 15 பேட்ஸ்மேன்களை 5-க்கு மேற்பட்ட முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அதில் இந்திய அணியின் 5 பேட்ஸ்மேன்கள் அடங்கும். குறிப்பாக சட்டீஸ்வர் புஜாரா, ராஹானே, கோலி ஆகியோர் 5 முறை ஆட்டமிழந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி எதிராக நாதன் லயன் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிலும் அடிலெய்ட் நாதன் லயனுக்கு சொந்த மைதானம் என்பதால், அவரின் தாக்கம் அதிகமாகவே இருக்கக்கூடும். இதுவரை நாதன் லயன் அடிலெய்ட் மைதானத்தில் பந்துவீசி விக்கெட் இல்லாமல் சென்றதில்லை என்ற வரலாறும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close