[X] Close

பின்னடைவா?: இந்திய வீரர் பிரித்வி ஷாவுக்கு காயம்; டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா?


prithivi-shaw-in-trouble

காயத்தால் நடக்க முடியாமல் அவதிப்பட்ட பிரித்வி ஷாவை தூக்கிச் சென்ற இந்திய அணியின் மருத்துவக்குழு

  • kamadenu
  • Posted: 30 Nov, 2018 10:43 am
  • அ+ அ-

சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் கேட்ச் பிடிக்க முயன்று, இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியா,ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இதற்கான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய லெவன் அணியுடன் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

2-ம் நாளான நேற்று இந்திய 348 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய லெவன் அணி இன்று பேட் செய்து வருகிறது. அப்போது, அஸ்வின் வீசிய பந்தில், ஆஸ்திரேலிய லெவன் அணி வீரர் மேக்ஸ் பிரயன்ட் தூக்கி அடித்தார்.

பவுண்டரி லைனில் ஃபீல்டிங்குக்கு நின்றிருந்த இந்திய வீரர் பிரித்வி ஷா, அந்தப் பந்தை தாவிப் பிடிக்க முற்பட்டார். ஆனால், அப்போது காலைத் தரையில் ஊன்றியபோது, இடது கணுக்காலை மடக்கி விழுந்தார். இதில் அவருக்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டு வலியால் சுருண்டார். உடனடியாக இந்திய உடற்தகுதி நிபுணர் பாட்ரிக் பர்ஹத், உதவியாளர்கள் வரவழைக்கப்பட்டு பிரித்வி ஷாவை ஆய்வு செய்தனர். ஆனால், பிரித்வி ஷாவால் எழுந்து நடக்க முடியவில்லை. இதையடுத்து, பிரித்வி ஷாவை தூக்கிச் சென்றனர்.

பின்னர் ஓய்வு அறைக்குச் சென்ற கேப்டன் விராட் கோலி பிரித்வி ஷாவின் உடல் நிலையைக் கேட்டறிந்தார். அதன்பின் வாகனம் மூலம் பிரித்வி ஷா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

இது குறித்து பிசிசிஐ ட்விட்டரில் வெளியிட்ட தகவலில், “ பிரித்வி ஷா பவுண்டரி பகுதியில் கேட்ச் பிடிக்க முயன்றபோது இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரின் உடல் நிலை குறித்து அணி மருத்துவர் குழு ஆய்வு செய்து வருகிறது. அவர்கள் அறிக்கை அளித்தபின் முழுமையான விவரம் தெரியவரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்வி ஷாவுக்கு உண்மையில் மிகப்பெரிய காயமாக இருந்தால், அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும். ஏனென்றால், அடிலெய்டில் அடுத்த மாதம் 6-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக பிரித்வி ஷாவை களமிறக்க அணி நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. ஆனால், பிரித்வி ஷா வுடன் கே.எல் ராகுல், முரளி விஜய் இருவரில் யாரைக் களமிறக்குவது என்பதுதான் முடிவு செய்யப்படாமல் இருந்தது.

பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய பிரித்வி ஷா 66 ரன்கள் சேர்த்து அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகரிக்க வைத்திருந்தார். அடுத்த சச்சின், லாரா என்றெல்லாம் புகழப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய ரசிகர்களும் பிரித்வி ஷாவின் ஆட்டத்தைக் காண ஆவலாக இருந்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் அறிமுகமான பிரித்வி ஷா 3 இன்னிங்ஸில் ஒருசதம் உள்ளிட்ட 237 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை காயத்தால் பிரித்வி ஷா டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்படும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக ஷிகர் தவண் அல்லது, நீண்டநாட்களாக வாய்ப்பை எதிர்பார்த்துவரும் மயங்க் அகர்வாலை அழைக்க வேண்டியிருக்கும் எனத் தெரிகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close