[X] Close

'சிறுவனே.. மரியாதையா பேசு': பர்தீவ் படேலை அடக்கியதை சுவரஸ்யமாக விளக்கிய ஸ்டீவ் வாஹ்


steve-waugh-speech-about-patel

ஸ்டீவ் வாஹ், பர்தீவ் படேல்

  • kamadenu
  • Posted: 29 Nov, 2018 10:20 am
  • அ+ அ-

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ்ஹை "ஸ்லெட்ஜிங்" செய்ய இந்திய விக்கெட் கீப்பர் பர்தீப் படேல் முயன்றபோது, அவரைத் தனது பேச்சால் அடக்கிய விதத்தை ஸ்டீவ் வாவ் சுவாரஸ்யமாகத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் மட்டுமின்றி, உலகக் கிரிக்கெட்டில் மிகவும் மதிக்கப்படக்கூடிய வீரர் ஸ்டீவ் வாஹ். கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் ஸ்டீவ் வாஹ். ஆஸ்திரேலிய அணிக்கு கடந்த 1999 முதல் 2004-ம் ஆண்டுவரை கேப்டனாக இருந்து அணியை வழி நடத்தியவர். 16டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர் ஸ்டீவ் வாஹ்.

கடந்த 1999-ம் ஆண்டு உலகக்கோப்பையையும் ஸ்டீவ் வாஹ் தலைமையில்தான் ஆஸ்திரேலிய அணி வென்றது. அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் ஸ்டீவ் வாஹ் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு இந்தியா-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது, தன்னை இந்திய விக்கெட் கீப்பர் பர்தீவ் படேல் ஸ்லெட்ஜிங் செய்ய முயன்றதைத் தடுத்ததை ஸ்டீவ் வாஹ் விளக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு இணையதளத்துக்கு ஸ்டீவ் வாஹ் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

கடந்த 2004-ம் ஆண்டு நடந்த இந்தியாவுடன் நாங்கள் சிட்னியில் மோதிய டெஸ்ட் போட்டி. நன்றாக நினைவிருக்கிறது அந்தத் தொடர் 1-1 என்று சமனில் இருக்கிறது. 4-வது டெஸ்டில் விளையாடுகிறோம். இந்திய அணி எங்களுக்கு 443 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. 90 ஓவர்கள் இருக்கிறது. அப்போது நான் களத்தில் நின்று பேட் செய்துகொண்டிருந்தேன். வெற்றிக்காகத் தீவிரமாக முயன்று கொண்டிருந்தோம். அப்போது இந்தியாவின் சார்பில் விக்கெட் கீப்பராக 18வயதான பர்தீவ் படேல் இருந்தார்.

நான் பேட்டிங் செய்யும்போது, என் அருகில் வந்து, “ வழக்கமாக நீங்கள் முழங்காலிட்டு “ஸ்லாக் ஸ்வீப் ஷாட்” அடிப்பீர்களே அதுபோல் இப்போது பந்தை அடித்தால் என்ன நடக்கும் தெரியுமா” என்று கேட்டார்.

எனக்கு கோபம் வந்தது. சின்னப் பயலே, கொஞ்சம் மரியாதையாகப் பேசு என்றேன். நீ சிறுவயதில் இடுப்பில் "டயாப்பர்" கட்டியிருந்த காலத்தில் நான் என்னுடைய முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட களத்தில் இறங்கிவிட்டேன். உன் வயது என்ன, என் வயது என்ன? என்று மிரட்டியவுடன் பர்தீவ் படேல் அமைதியாகிவிட்டார்.

அந்த போட்டியில் இரு தரப்பிலும் ஏராளமான ஸ்லெட்ஜிங் நடந்தது என்று அனைவரும் கருத்துக்கூறினார்கள். என்னைப் பொறுத்தவரை அதை வேறுவிதமாக நகைப்புரியதாக, விளையாட்டாகக் இரு தரப்பினரும் பேசி இருக்கலாம். எல்லோரும் "ஸ்லெட்ஜிங்" என்று தெரிவித்தனர், ஆனால், என்னைப் பொறுத்தவரை இதை "ஸ்லெட்ஜிங்காக" எடுக்கவில்லை, ஒரு கிண்டலாகவே அப்போது எடுத்துக் கொண்டேன்.

அதேபோல மெல்போர்னில் ஒருமுறை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அனைவரையும் சேவாக் அலற வைத்தார். அவருக்குப் பந்துவீசவே அனைவரும் பயந்தனர். ஏனென்றால் யார் பந்துவீசினாலும் அடித்து நொறுக்கினார்.

அதிலும் கிறிஸ்துமஸ் போட்டிக்கு அடுத்து நடந்த "பாக்ஸிங்டே" டெஸ்ட் போட்டி என்பதால், வெற்றிக்காக தீவிரமாகப் போராடினோம். அந்த டெஸ்ட் போட்டியில் சேவாக் 25 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 195 ரன்கள் எடுத்தார். சேவாக்கின் அசுர பேட்டிங் ஃபார்மைப் பார்த்து 490 ரன்களையும் அவரே சேஸ் செய்துவிடுவாரோ என்று நானும் பயந்தேன்.

அப்போதுதான் பகுதிநேர பந்துவீச்சாளரான சைமன் கேடிச்சை அழைத்து சுழற்பந்துவீசக் கூறினேன். அவரும் பந்துவீசினார். அப்போது "புல் டாஸாக" வந்த பந்தை சேவாக் தூக்கி அடிக்க அது கேட்ச் ஆனது. அதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

உண்மையில் அன்றைய நாளில் சேவாக்கின் பேட்டிங்கைப் பார்த்து அனைவரும் சற்று பயந்தோம். தான் டெஸ்ட்போட்டி விளையாடுகிறோம் என்ற கவலைப்படாமல் அடித்து நொறுக்கி,  பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை உடைக்கக் கூடியவர். தான் சந்தித்த ஒவ்வொரு பந்திலும் தனது தாக்கம் இருக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர் சேவாக். நான் சந்தித்த இந்திய வீரர்களில் மிகவும் வித்தியாசமானவர் சேவாக்

இவ்வாறு ஸ்டீவ் வாஹ் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close