[X] Close

55 ஆண்டுகளுக்குப் பிறகு அன்னிய மண்ணில் இங்கிலாந்து சாதனை வெற்றி; அச்சுறுத்திய கடைசி விக். கூட்டணி: இலங்கை 3-0 தோல்வி


england-team-wins

படம். | ஏ.எஃப்.பி.

  • kamadenu
  • Posted: 27 Nov, 2018 08:24 am
  • அ+ அ-

கொழும்புவில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 55 ஆண்டுகளுக்குப் பிறகு அன்னிய மண்ணில் க்ளீன் ஸ்வீப் தொடர் வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது.

வெற்றி பெற 327 ரன்கள் தேவை என்ற நிலையில் இலங்கை அணி 4ம் நாளான இன்று 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நேற்று 53/4 என்று இன்று இறங்கிய இலங்கை அணியில் கடைசி விக்கெட்டுக்காக புஷ்பகுமாரா (40 பந்துகளில் 42), சுரங்க லக்மல் (11) 58 ரன்கள் கூட்டணி அமைத்து இலக்கை நெருங்கி விடுவோம் என்று அச்சுறுத்தினர், இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச், மொயின் அலி தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். முன்னதாக மெண்டிஸ் (86),  சில்வா கூட்டணி அமைத்து 82/5லிருந்து 184 வரைக் கொண்டு சென்றனர். ஆனால் அப்போது பிரமாதமாக ஆடிக் கொண்டிருந்த மெண்டிஸை ஜாக் லீச் மிக அருமையாக பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கிலிருந்து நேரடியாக ஸ்டம்பைப் பெயர்க்கும் த்ரோவில் ரன் அவுட் செய்ய அதுவே திருப்பு முனையானது.

நியூஸிலாந்துக்கு எதிராக அங்கு 1963ம் ஆண்டு ஒயிட்வாஷ் வெற்றி ஈட்டிய பிறகு இப்போது இலங்கையை பிளாங்க் செய்தது இங்கிலாந்து.

3ம் நாளில் 4 விக்கெட்டுகளை சரசரவென்று வீழ்த்திய இங்கிலாந்து, இன்று காலை இரவுக்காவலர் சண்டகன் (7) விக்கெட்டை லீச்சின் ஸ்பின்னுக்கு பென் ஸ்டோக்ஸ் கேட்சில் இழந்தது. ஆனால் அதன் பிறகு இங்கிலாந்து விக்கெட்டுகளை வீழ்த்தத் திணறியது, லீச், மொயின் அலி என்று யார் வீசியும் ரோஷன் சில்வாவும் மெண்டிஸும் அருமையாக ஆடி ஸ்கோரை எளிதில் நகர்த்திச் சென்றனர். மெண்டிஸ் இந்தத் தொடரில் முதல் முறையாக அரைசதம் கண்டார்.

மதிய செஷனிலும் இங்கிலாந்து போராடியது, ஒரு ரிவியூவையும் விரயம் செய்தது. மெண்டிஸுக்கு விக்கெட் கீப்பர் கேட்ச் அப்பீல் விரயமானது.

பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்த போது இலங்கை வெற்றி கூட சாத்தியமாகவே இருந்தது, ஆனால் லீச் ஒரு அருமையான பீல்டிங்கில் மெண்டிஸை நேர் த்ரோவில் ரன் அவுட் செய்ய திருப்பு முனை ஏற்பட்டது. ரோஷன் சில்வா பந்தை ஸ்கொயர்லெக்கிற்கு தட்டிவிட்டு மெண்டிஸ் வருகிறாரா என்ன என்று தெரியாமலேயே 2வது ரன்னுக்கு தடதடவென ஓடினார். மெண்டிஸ் திரும்பி வரும்போது லேசாகச் சறுக்கினார், ஆனாலும் அவர் நேராக ஓடியிருந்தாலும் நேர் த்ரோவுக்கு விக்கெட்டை இழப்பது தவிர வேறு வழியில்லை.

ரோஷன் சில்வா அடுத்த ஓவரில் அரைசதம் கண்டார். பிறகு நிரோஷன் டிக்வெல்லாவுக்கு (19) கீட்டன் ஜென்னிங்ஸ் ஒரு கடினமான வாய்ப்பைக் கோட்டை விட்டார்.

ஆனால் டிக்வெல்லா நீடிக்கவில்லை, ஜாக் லீச்சின் பந்தில் அவர் ஜெனிங்சிடம் லெக் கல்லியில் கேட்ச் ஆகி வெளியேறினார். திலுருவன் பெரேரா போராட்டத்துக்குப் பிறகு 5 ரன்களில் மொயின் அலி பந்தில் ஜெனிங்ஸ் கேட்சில் அவுட் ஆனார். இந்தப் போட்டியில் ஜெனிங்ஸின் 6வது கேட்ச் ஆகும் இது.

மலிந்தா புஷ்பகுமாரா இங்கிலாந்து பந்து வீச்சை எதிர்த்தாக்குதல் செய்தார், 40 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அவர் காட்டடி அடித்து 42 ரன்களைச் சேர்க்க 58 ரன் கூட்டணியில் இலங்கை அணிக்கு சாத்தியமாகா ஒரு வெற்றி வாய்ப்பும் நம்பிக்கை அளித்தது. இவர் நாட் அவுட்டாக நிற்க சில்வா மொயின் அலி பந்தில் எல்.பி.ஆனார். இதன் பிறகுதான் புஷ்பகுமாரா, லக்மல் ஸ்கோரை 284 ரன்களுக்கு உயர்த்தினர். கடைசியில் சுரங்க லக்மல் லீச் பந்தில் எல்.பி.ஆனார். ஆனால் லக்மல் கேப்டன் என்பதால் தன் அதிர்ஷ்டத்தை டி.ஆர்.எஸ்-ல் சோதித்தார் பயனில்லை 3-0 ஒயிட் வாஷைத் தடுக்க முடியவில்லை.

ஆட்ட நாயகனாக ஜானி பேர்ஸ்டோ தேர்வு செய்யப்பட தொடர் நாயகனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close