[X] Close

அலறவிட்ட யாசீர் ஷா; 41 ரன்களுக்கு 8 விக்கெட்; 50/0 விலிருந்து 90 ஆல் அவுட் ஆன நியூஸி.; 6 வீரர்கள் டக் அவுட்


yasir-shah-8-wickets-haul

8 விக்கெட்டுகள் வீழ்த்திய பாக் ஸ்பின்னர் யாசிர் ஷா. | ஏ.பி.

  • kamadenu
  • Posted: 26 Nov, 2018 18:21 pm
  • அ+ அ-

துபாயில் நடைபெற்று வரும் பாகிஸ்தான், நியூஸி. அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் யாசீர் ஷா 8 விக்கெட்டுகளை 41 ரன்களுக்குக் கைப்பற்றி நியூஸிலாந்து வீரர்களை அலறவைத்து 90 ரன்களுக்குச் சுருட்டினார். இதன் மூலம் 328 ரன்கள் பின் தங்கிய நியூஸிலாந்து அணி பாலோ ஆன் ஆடிவருகிறது, அதிலும் ஒரு விக்கெட்டை யாசிர் ஷாவிடம் இழந்து தடுமாறி வருகிறது.

பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்சில் 418/5 டிக்ளேர் செய்தது.  இந்நிலையில் நியூஸிலாந்து அணி அதிர்ச்சிகரமாக 90 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆடிவருகிறது.  பாகிஸ்தான் டெஸ்ட் வரலாற்றில் 3வது பெரிய டெஸ்ட் பந்து வீச்சாகும் இது.  முன்னதாக லெக் ஸ்பின் லெஜண்ட் அப்துல் காதிர் 56 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார், இவருக்கு அடுத்த இடத்தில் சர்பராஸ் நவாஸ் 9 விக்கெட்டுகளை 86 ரன்களுக்கு எதிராக மெல்போர்னில் ஆஸி.க்கு எதிராகச் சாதித்தார். தற்போது யாசிர் ஷா 8/41 என்று 3ம் இடத்தில் உள்ளார்.

கேன் வில்லியம்சன் மட்டும் ஒரு முனையில் வேறு ஒரு கிரிக்கெட் ஆட்டத்தை ஆடி 28 நாட் அவுட், அவரை வீழ்த்த முடியவில்லை 37  பந்துகளை அவர் சந்தித்தார். நியூசிலாந்து அணியில் 6 வீரர்கள் டக் அவுட்.  உணவு இடைவேளையின் போது 63/4 என்று இருந்த நியூசிலாந்து அணி பி.ஜே வாட்லிங் (1) விக்கெட்டை மிக மோசமான ரன் அவுட்டில் இழந்தது. பவுலர் கையில் பட்டு ஸ்டம்பில் பந்து பட்டது.  கொலின் டி கிராண்ட் ஹோம் விக்கெட்டை ஹசன் அலி எல்.பி.முறையில் காலி செய்தார்.

தொடக்க வீரர்களான ராவல் (31), லேதம் (22) 50 ரன்கள் கூட்டணி அமைத்தனர், அப்போது ரிவ்ர்ஸ் ஸ்வீப் ஷாட் ஆடி ரிஸ்க் எடுத்தார்.  பந்து தொடையில் பட்டு மட்டையின் பின் பகுதியில் பட்டு ஸ்டம்பைத் தொந்தரவு செய்தது. பிறகு 28வது ஓவரில் யாசீர் ஷா, லாதம், டெய்லர் நிகோல்ஸ் ஆகியோரை வெளியேற்ற ஒரே ஒவரில் களேபரம் ஆனது. உணவு இடைவேளையின் போது 63/4. உணவு இடைவேளைக்குப் பிறகு வாட்லிங் ரன் அவுட் ஆனார்.

ஒரு முனையில் கேன் வில்லியம்ஸ் நிற்க இஷ் சோதி,  நீல் வாக்னர், படேல்,  ட்ரெண்ட் போல்ட் ஆகியோரை யாசிர் ஷா வீழ்த்தினார். வில்லியம்ஸ் 28 நாட் அவுட்.  யாசீர் ஷா 12.3 ஓவர்களில் 1 மெய்டன் 41 ரன்கள் 8 விக்கெட். 50 ரன்களுக்கு நோ லாஸ் என்பதிலிருந்து 90 ரன்களுக்குச் சுருண்டது நியூஸிலாந்து 40 ரன்களுக்கு 10 விக்கெட்!!

யாசிர் ஷா ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அந்த ஓவர் முதல் விளையாட முடியாத பந்துகளை வீசிக்கொண்டேயிருந்தார், அவரை நியூஸி. வீரர்களால் சிறந்த உத்தியுடன் ஆட முடியவில்லை. இதனால் பாலோ ஆன் ஆடி வருகிறது, தற்போது நியூஸிலாந்து அணி 70/2 என்று ஆடி வருகிறது. 3ம் நாளான இன்று இன்னும் 33 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் யாசீர் ஷா 2வது இன்னிங்சில் ராவல் (2),  கேன் வில்லியம்சன் (30) இருவரையும் வீழ்த்தி இந்த டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இன்னும் எவ்வளவு என்பது போகப்போகத் தெரியும். நியூசிலாந்து இன்றே தோற்குமா அல்லது நாளை தோற்குமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். யாசீர் ஷா இருக்கும் பார்முக்கு இன்றே சம்பிரதாயங்கள் முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close