பிரிஸ்பன் டி20 போட்டியில் 50 ரன்களுக்கும் மேல் கொடுத்து விட்டேனாம்... நையாண்டி செய்து சிரித்தார் ஹர்திக்: குருணால் பாண்டியா ருசிகரம்

குருணால்.| கெட்டி இமேஜஸ்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் சிட்னி வெற்றிக்குப் பிறகு சமன் ஆனதற்கு குருணால் பாண்டியா பவுலிங் முக்கியப் பங்கு வகித்தது, அவர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை 180 ரன்கள் எடுக்கவிடாமல் 164 ரன்களுக்குக் கட்டுப்படுத்தியது அவருக்கு ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுத் தந்தது.
மேலும் டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவில் மிகச்சிறந்த பந்து வீச்சும் இதுவே என்ற சாதனைக்கும் சொந்தக் காரர் ஆனார் குருணால்.
பிரிஸ்பனில் நடந்த முதல் போட்டியில் ஆஸியினர் குருணாலை வெளுத்துக் கட்டினர் 4 ஒவர்களில் 55 ரன்களைக் கொடுத்தார், இதில் 6 சிக்சர்கள், அதிலும் 4 சிக்சர்களை கிளென் மேக்ஸ்வெல் விளாசினார். அதற்குப் பழிவாங்கும் விதமாக அடுத்த 2 போட்டிகளில் குருணால் பாண்டியா கிளென் மேக்ஸ்வெல் விக்கெட்டை சடுதியில் வீழ்த்தினார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கும் தனக்கும் உள்ள உறவாடல் பற்றி குருணால் கூறும்போது “நாங்கள் இருவரும் அதிகம் கிரிக்கெட் பற்றி பேசுவது கிடையாது. ஆனால் பிரிஸ்பன் போட்டி முடிந்தவுடன் பேசினோம், நான் அந்தப் போட்டியில் 50+ ரன்கள் கொடுத்ததற்காக என்னை நையாண்டி செய்து என்னை நோக்கி சிரித்தார். அவர் மோசமாக ஆடும் போதும் நான் ஜோக் அடிப்பேன் ஆகவே இப்படித்தான் போகிறது.
பிரிஸ்பனில் அவ்வளவு ரன்கள் கொடுத்தது எனக்கு கஷ்டமாக இருந்தது, அடுத்த 24 மணி நேரம் டென்ஷன். இந்த மட்டத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்து 55 ரன்கள் கொடுத்ததை என்னால் தாங்க முடியவில்லை, என்னை நான் ஆறுதல் படுத்திக் கொள்ள சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது. பிறகுதான் புரிந்தது டி20 கிரிக்கெட் என்பது அடிதடி கிரிக்கெட் இதில் ஒருநாள் அடிவாங்குவது சகஜம் என்று எனக்குத் தெரிந்தது.
ஆனால் ஒரு மோசமான பவுலிங்குக்குப் பிறகு மீண்டும் நன்றாக வீசியிருப்பது திருப்தி அளிக்கிறது. அதாது நாம் இந்த தரநிலையில் இருக்கிறோம் என்ற உறுதி மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த மட்டத்தில் சிறப்பாக ஆடவில்லையெனில் நிச்சயம் நமக்கு ஒருபோதும் தன்னம்பிக்கை ஏற்படப்போவதில்லை.
எதிர்முனையில் குல்தீப் யாதவ் கடும் அழுத்தங்களை ஏற்படுத்தியதால் என்னால் இன்னொரு முனையில் விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. சிலவேளைகளில் என் சகோதரரை விடவும் ஸ்பின் பவுலிங் சகா அதிகம் உதவுகிறார்” என்றார்.
இதை மிஸ் பண்ணாதீங்க...
- தோனி குறித்து கேள்வி: அதிபர் முஷாரப்பை 'கலாய்த்த' கங்குலி
- கோலிக்கு டெஸ்ட் தொடரில் 'செக்' வைப்போம்: ஆஸி. விக்கெட் கீப்பர் ஆவேசம்
- எல்லோரையும் போல்தான் தோனியும்.. அணியில் நீடிக்க வேண்டுமெனில் ஸ்கோர் செய்தாக வேண்டும்: சவுரவ் கங்குலி
- திறமையில் ஆஸ்திரேலிய அணியைக் காட்டிலும் நம் அணி சிறந்தது: வெற்றிக்குப் பிறகு விராட் கோலி விதந்தோதல்