[X] Close

இந்திய அணியினரே மறந்து விடவேண்டாம், உங்கள் தொண்டைக்குக் குறிவைப்பார்கள் ஆஸி. பவுலர்கள்: இயன் சாப்பல் எச்சரிக்கை


ian-chappal-comments

ஸ்டார்க், ஹேசில்வுட். | கெட்டி இமேஜஸ்

  • kamadenu
  • Posted: 25 Nov, 2018 11:28 am
  • அ+ அ-

தொடருக்கு முன்னதாகவே எதிரணியினரை மட்டம் தட்டி இம்முறை நல்ல வாய்ப்பு, ஆஸி.யை வீழ்த்தி விடலாம் என்றெல்லாம் எழுதியும் பேசியும் வந்ததில் முதல் டி320 தோல்வி இந்திய அணிக்கு ஒரு எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது என்று கூறும் முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் இயன் சாப்பல் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதள பத்தியில் மேலும் சில எச்சரிக்கைகளை இந்திய அணிக்கு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ளதில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்:

சிட்னியில் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய லெவன் அணியை எதிர்த்து ஆடும் போது இந்திய அணி கவனமாக ஆட வேண்டும்.  எதிரணியினர் வெற்றி பெறவே ஆடுவார்கள் என்பதில் இந்திய அணியினருக்கு எந்தவித சந்தேகமும் வேண்டாம்...

ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பிட்சின் பவுன்ஸுக்கு இந்தியா தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும், குறைந்த பவுன்ஸ் பிட்சிலிருந்து வருபவர்களுக்கு பந்துகள் கூர்மையாக எழும்பும்போது பிரச்சினைகள் தொடங்குகின்றன. இதுதான் ஆஸ்திரேலியாவில் பேட் செய்வதன் சவால், அதாவது பின்னங்காலில் சென்று ஆடி எப்படி ரன் குவிப்பது?இதுதான் ஆஸி. பிட்ச்களில் மிகப்பெரிய சவால்.  மட்டையை கிடைக்கோட்டு வாகாக பிடித்து மடக்கி அடிக்கும் பேட்ஸ்மென்கள் ஆஸ்திரேலியாவில் வெற்றியடைந்துள்ளனர்.

பால் டேம்பரிங்குக்குப் பிறகே ஆஸ்திரேலிய வீரர்களின் கள நடத்தையில் மாற்றமிருக்கலாம் ஆனால் ஷார்ட் பிட்ச் பவுன்சர்கள் போட்டு இந்திய பேட்ஸ்மென்களை குறிவைப்பதில் எந்தவித மாற்றங்களும் இருக்கப் போவதில்லை.

ஆஸ்திரேலியாவை குறைத்து மதிப்பிட்டால் அவ்வளவுதான், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், பாட் கமின்ஸ் என்று டாப் கிளாஸ் வேகப்பந்து கைவசம் உள்ளது. பேட்டிங் பலவீனம் இருப்பதால் பவுலர்கள் இன்னும் ஆக்ரோஷமாக வீசி எதிரணியினரின் ஸ்கோரிங் வாய்ப்புகளை கடுமையாகக் குறைப்பார்கள்.  எனவே டாப் 3 வீரர்கள் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும், முதல் 3 விகெட்டுகளை விரைவில் வீழ்த்தி வலுவான விராட் கோலியை பந்து பளபளப்பாக இருக்கும் போதே கிரீசிற்கு வரவழைக்க வைப்பார்கள்.

இது இந்திய அணிக்கு தேர்வுப்பிரச்சினையை அளிக்கும் புஜாராவை 3ம் நிலையில் இறக்கி தடுத்தாட வைப்பார்களா, அல்லது ஷார்ட் பிட்ச் பந்துகளில் வலுவான ரோஹித் சர்மாவை இறக்கி ஆக்ரோஷம் காட்டுவார்களா என்பதைப் பார்க்க வேண்டும், கடந்த தொடரில் விராட் கோலி ஷார்ட் பிட்ச் பந்துகளை சிறப்பாக ஆடிய நிலையில் அவருக்கு உறுதுணையாக ரோஹித் சர்மாவை இறக்குவது நலம்.

பவுலிங்கில் இங்கிலாந்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஃபுல் லெந்தில் வீசி அருமையாகப் பயன்படுத்திக் கொண்டனர், ஆஸ்திரேலியாவில் பந்து பளபளப்பு போன பிறகு ஸ்விங் இருக்காது, அப்போது சரியான லெந்த் எது என்பதைக் கண்டுபிடித்து வாய்ப்புகளை உருவாக்குவது கடினமான காரியம்.

ஒரேயொரு பயிற்சி போட்டியை வைத்துக் கொண்டு இந்திய அணி தன் பிரச்சினைகளையெல்லாம் களைய முடியாது. இதுதான் பயணம் செய்யும் அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்கக் காரணம். ஆனால் பயிற்சி ஆட்டத்தை வெறும் பயிற்சியாக ஆடாமல் அதில் வெற்றி பெற ஆடி வென்றால் அது தன்னம்பிக்கையை நிச்சயம் கொடுக்கும்.

இவ்வாறு அந்தப் பத்தியில் கூறியுள்ளார் இயன் சாப்பல்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close